கலை உலகம் பற்றியும் ஊடகம் பற்றியும் புதிய ஆசிரியனில் வரும் விமர்சனங்களைக் கவனிக்கிறேன். விமர்சனங்களில் நிதானம் இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு நிலைகுலையாத – உற்சாகம் கொண்டு சரிந்து விழாத நிதானம்! நவம்பர் இதழில் மதுக்கூர் இராமலிங்கமும் சோழ.நாகராஜனும் ஊடகங்கள் பற்றி எழுதியிருந்தார்கள். வாசகன் உணர்வுப் பூர்வமாய் புரிந்து அங்கீகரிக்கக் கூடிய விதத்தில் பட்டவர்த்தனமாகவும், சுருக் வார்த்தைகளோடும் இருக்கிறது மதுக்கூராரின் எழுத்து (யாருக்கும் வெட்கம் இல்லை). இந்த ஊசி எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கிறது.
கலை உலகத்துக்கும் ஊடகத்துக்கும் அண்மையில் ஏற்பட்ட ஒரு முரண்பாடு குறித்து நுட்பமாக விவாதிக்கிறார் சோழ.நாகராஜன். இவருடையது தராசு எழுத்து. மிகத் துல்லியமாக மதிப்பிடுகிறார். ‘மோதிக் கொள்வதோ, கலை உலகும் ஊடக உலகும்!’ என்ற கவலை மட்டும் அனாவசியமானது என்று எனக்குப் படுகிறது.
55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பத்திரிக்கைகள் படித்தும், தமிழ் சினிமாக்கள் பார்த்தும் வருகிறேன். சினிமா, பத்திரிகை இரண்டுக்குமிடையே மோதல் வருவதும், பிறகு நீயின்றி நானில்லை என்று காதல் மலர்வதும் சகஜம்தான்! அட்டைக் கத்திச் சண்டைகள் ! நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அசல் சண்டை வந்தாலும் நல்லது தான்! வணிக பலத்தின் ஆணவ மோதல்களால் நாட்டுக்கு ஒன்றும் நஷ்டம் ஒல்லை!
ஒழுக்கத்தின் பேரால் பெண்ணைக் கேவலப்படுத்தியதில் எது மோசம்? எது உத்தமம்? இது விசயத்தில் கலை, ஊடகம் இரண்டுக்குமிடையே பிரிக்க முடியாத ஒட்டுதல் இருக்கிறது – மழை நீரில் ஊறிய கதவும் நிலையும் போல!
முன்னணி நடிகர் பலரின் தனிப்பட்ட வாழ்க்கை ஒழுக்கங்கள் பற்றி என்னென்னவோ தகவல்கல் இத்தனை ஆண்டுகளில் வந்திருக்கின்றன. தகவல்களைக் கசியவிட்ட ஊடகங்களே அவற்றுக்குக் குழியும் தோண்டிப் புதைத்துவிட்டு, கொடை வள்ளல், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எனப் பட்டங்கள் சூட்டி அவர்களைக் கொண்டாடவும் செய்திருக்கின்றன.
ஏனெனில் அவர்கள் நடிகர்கள்; ஆண்கள். நடிகர் என்றால் திறமைதான் அளவுகோல். நடிகை என்றால் ஒழுக்கமே அளவுகோல்! நடிகைகளின் திருமண வாழ்க்கைத் தோல்விகளைப் பற்றி பத்திரிக்கைகள் தீபாவளி போலக் கொண்டாடுகின்றன. நடிகையோடு இரவைக் கழித்தவர் யார் என்று விவரம் சேகரித்து அதை ஊருக்குப் பறைசாட்டத் துடிக்கின்றன.
இது விசயத்தில் தினமலரை மட்டும் மையப்படுத்தி குற்றஞ் சாட்ட முடியாது. தினமலருக்கு முன்பே குமுதம், ஆனந்தவிகடனில் இது போன்ற துப்புக் கெட்ட ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன.
லட்சியம் சார்ந்த சிறுபத்திரிக்கைகள்தான் நம் நம்பிக்கை. மெலிந்த குரல்! கவனிக்கிறவர்கள் கொஞ்சம்! இருந்தபோதும் பிழைப்புக்காகப் பேசாமல் உண்மையைப் பேசும் பத்திரிக்கைகள்.
பளபளப்பு நிறைந்த கலை உலகம் தொடர்ந்து பிரமைகளை உற்பத்தி செய்கிறது. நம் நம்பிக்கைக்கு உரிய சிறு பத்திரிக்கைகளுக்குள்ளும் அந்தப் பிரமைகளில் சில வந்து வந்து போவதை வேதனையுடன் கவனிக்கிறேன். உதாரணம் சொல்வதானால் ‘கமலஹாசப் பிரமை!’ (இதே விதமான பிரமையை எழுத்துலகில் சுஜாதா உருவாக்கியிருந்தார்).
சமீபத்தில் ஒரு தொழிற்சங்கப் பத்திரிக்கையில் தவறான உள்ளடக்கத்தோடும், பாமரர்களுக்குப் புரியாத மேதாவி வசனங்களோடும் படமாக்கப்பட்டிருந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தைப் பாராட்டி எழுதியிருந்த விமர்சனம் ‘கமலஹாசப் பிரமையின்’ விளைவுதான்! சமீப காலமாகக் கமலஹாசன் படங்களில் வெளிப்படுவது கலை அல்ல, அவருடைய சாதுர்யம் மட்டுமே! சாதுர்யம் கலையின் ஒரு சிறு பகுதியாக இருக்கலாம். ஆனால் சாதுர்யமே கலை ஆகாது. உண்மையில், சாதுர்யம் கலையின் விரோதி. “Cleverness kills art” என்று கலைக்கு பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனம் சினிமாவுக்கும் பொருந்தும்.
சிவாஜி, கமலஹாசன் போன்றோர் தமிழ் சினிமா வளர்ச்சிக்காகச் செய்துள்ள பங்களிப்பையும், சில நல்ல படங்களைத் தந்தவர்கள் என்ற உண்மையையும் மறுக்க முடியாது. அதே நேரம், தமிழ் சினிமாவின் சிதைவுக்கும் ஒரு விதத்தில் அவர்கள் காரணமானவர்கள் என்ற மறுபக்க உண்மையையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருவர் மிகை நடிப்பால்; மற்றவர் தன் சாதுர்யத்தால் !
ஒரு மூதாட்டி வேடத்துக்காக நடையாய் நடந்து கடைசியில் ஒரு மூதாட்டியைக் கண்டுபிடித்து நடிக்க வைத்து சத்யஜித்ரே பதேர் பாஞ்சாலியில் வெளிப் படுத்தியது – கலை. கலையை உண்மையின் பிரதிபலிப்பு என நம்பியவர் ரே ! தானே ஒரு மூதாட்டி வேடம் பூண்டு (தசாவதாரம்) கமலஹாசன் வெளிப்படுத்தியது சாதுர்யம்!
வேடம் பூண வேண்டிய அவசியமும் கலையில் வருவது உண்டு! உதாரணம் – ‘அவ்வை சண்முகி’! அவ்வை சண்முகியின் மூலம் Mrs Doubtfire என்ற ஆங்கிலப் படம். அளப்பரிய குழந்தைப் பாசத்தையும், சிக்கலான மனித உறவுகளையும் Mrs Doubtfire அற்புதமான கலையாக வெளிப்படுத்தியது. ஆனால் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘அவ்வை சண்முகி’யில் துருத்திக் கொண்டு முன்னால் நின்றது கமலஹாசனின் சாதுர்யம் – சாமர்த்தியம் மட்டுமே!
சமீபத்தில் நான் பார்த்த ஒரு மசாலாப் படத்தில் தனக்குத் தெரிந்த யோகாசனங்களை எல்லாம் செய்து காட்டுகிறார் – சூர்யா. இது கமலஹாசனின் தொடர்ச்சியே.
போகிற போக்கில் நாத்திகம் பேசுவது (தசாவதாரம்), குஜராத் கலவரத்தைக் குறிப்பிடுவது (உன்னைப் போல் ஒருவன்) – என்று சிறுசிறு வெடிகளைக் கொளுத்திப் போட்டு முற்போக்காளர்களையும் கமலஹாசன் கவர்ந்திருக்கிறார்.
பயந்து கிடக்கும் அப்பாவி மக்கள் யதார்த்தம் குறித்த புரிதலும், அதனை எதிர்கொள்ளும் தைரியமும் பெறக்கூடிய அர்த்தமுள்ள சினிமாவின் பக்கம் அவர் இன்னும் போகவில்லை என்பதுதான் என் கருத்து.
1950-களில் மு.கருணாநிதியின் வசனங்களும் எம்.ஆர். ராதாவின் நாடகங்களும் பகுத்தறிவின் பக்கம் அச்சமின்றி நெருங்கிவர மக்களுக்கு உதவியதாக சினிமா ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள். இது உண்மையே! ‘ரத்தக் கண்ணீரில்’ வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தன் மனைவியைத் தன் நண்பனுடன் சேர்த்து வைப்பார் ராதா. சினிமா, நாடக கிளைமாக்ஸ் முடிவெடுத்தல்களில் இது ஒரு புரட்சி. நாடகமாக தமிழகம் முழுக்க ரத்தக் கண்ணீர் நடித்துக் காட்டப்பட்ட போது மக்கள் புல்லரிப்புடன், மனமுவந்து, கைதட்டி ஏற்றுக் கொண்ட முடிவு இது.
இன்றைய முன்னணித் தமிழ் நடிகர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் மக்கள் செல்வாக்கைப் பணமாகவும், வீடு நிலபுலன்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்களேயன்றி, மக்கள் பிரச்சினைகளில் – மக்கள் தைரியம் கொள்ளுமாறு – பொது மேடை ஏறி ஒரு வார்தை கூடப் பேசுவதில்லை. தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் விதமாகச் சிறு சிறு ‘நற்பணி’களைச் செய்து வள்ளல்களாகிறார்கள். இது இன்னொரு சாதுர்யம்.
எழுத்தில், கலையில் சாதுர்யம் வசீகரமானது; மினுமினுப்பானது; ஆனால் பாம்பைப் போல ஆபத்தானது. உண்மையான – அழகான சிறு சிறு திறமைகளைக் காணவிடாமல் நம் கண்களை மறைப்பது.
எளிய மனிதர்களின் கவசங்களான லட்சியச் சிறு பத்திரிகைகள், சாதுர்யப் பளபளப்புகளில் சொக்கிப் போகாமல் இருப்பது அவசியம்.
ச. மாடசாமி
நன்றி: புதிய ஆசிரியன் – டிசம்பர் 2009