சில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 2

ஆர்ப்பாட்டங்கள் நுட்பங்களைத் தோற்கடிக்கின்றன. ஆர்ப்பாட்டத்துக்கு அகலமான வாய். இங்கு வார்த்தைகளைவிட வாய்தான் முக்கியம்.

மேலும், கூசி ஒதுங்கும் நுட்பங்களை விழுங்குவது சுலபமானதும் கூட.

நான் கல்லூரிப் பணியில் சேர்ந்த புதிதில் – சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் – அதுவரை எனக்குக் கிட்டாத கௌரவங்கள் பல அப்போது கிட்டின. எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத என் பேர் சுருக்கப்பட்டு நான் எஸ்.எம் சார் ஆனேன். பக்கத்து ஊர்த் திருவிழாக்களில் பேச அடிக்கடி அழைப்பு வந்தது. மாணவர் போட்டிகளின் போது நடுவராக இருந்து தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. இப்படிப் பல.

பேச்சுப் போட்டி ஒரு விதத்தில் விளையாட்டுப் போட்டி மாதிரி. படிப்பில் பிரகாசிக்காத மாணவர்களும் கூட அந்த மேடையில் ஜொலிப்பார்கள்.

நான் பணியில் சேர்ந்த புதிதில் சுப்பிரமணியன் என்ற மாணவன் பேச்சுப் போட்டியில் பரிசை அள்ளிக் கொண்டு இருந்தான். எந்தத் தலைப்பாக இருந்தாலும் ‘வக்கற்றோர் வகையற்றோர் திக்கற்றோர் திசையற்றோர்’ என்றுதான் பேச்சைத் தொடங்குவான். உடனே கைதட்டல் மழை தொடங்கும். ’இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று மறக்காமல் ஒரு இடத்தில் சொல்வான். ‘வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி’ முடிப்பான். கை குவித்து வணக்கம் சொல்வான். கட்டாயம் ஜெயிப்பான்.

அவனுடைய வெற்றி என்னைச் சிரமப்படுத்திக் கொண்டிருந்தது உண்மை.

ஒருமுறை திக்கித் திணறிக் கருத்துக்களைச் சொல்ல முன்வந்த முனியாண்டிக்கு முதல் மதிப்பெண் கொடுத்திருந்தேன். மற்றவர்களின் லிஸ்டில் அவன் இறங்கிப் போய் இருந்தான். போட்டி முடிந்ததும் என் சீனியர் முனியாண்டியைக் கூப்பிட்டுச் சொன்னார்.  “என்ன பேசுற? மியாவ் மியாவ்- னு பூனைக்குட்டி மாதிரி! சத்தமாப் பேசணும்; ஏத்த எறக்கத்தோட பேசணும்!”. முனியாண்டி முழித்தான். நான் முகம் வாடினேன். நொந்து என்ன செய்ய! பேச்சுக்கலை காதுகளை நம்பி இருந்தது. காதுகளின் ருசி ஆரோக்கியமானதாக இல்லை. காதுகள் எப்போதும் வடைகளையும் பஜ்ஜிகளையும்தான் விரும்பிக் கேட்டன. பேச்சில் வடை பஜ்ஜி சுட்டவர்கள் ஜெயித்துக் கொண்டிருந்தார்கள்.

படிப்படியாக நடுவர் அதிகாரம் கூடிக்கொண்டே வந்தது. விரைவில் தலைமை நீதிபதி ஆனேன். பேச்சுப்போட்டிகளில் ஆர்ப்பாட்டக் குரல்களின் கனத்தைத் தகர்க்கத் தொடங்கினேன். நுட்பங்களைத் தேடினேன். ‘தாயே! தமிழே!’ என்று இரைச்சலோடு பேச்சைத் தொடங்கியவர்களை ‘விட்ருங்கப்பா’ என்று கை எடுத்துக் கும்பிட்டேன்.  ‘இந்த மேடையின் நடுநாயகமாக கதிரவனைப் போல ஒளி வீசி வீற்றிருக்கும் நடுவர் அவர்களே’ என்ற விஸ்தாரமான விளிப்பேச்சுகளுக்கு இரக்கமின்றித் தடை விதித்தேன். பள்ளிகளில் பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் என் மேடையில் தடுமாறினார்கள். அலுத்துக்கொண்டார்கள். ஆனால் விரைவாகப் புரிந்துகொண்டார்கள் – பேச்சுமேடை என்பது நாடகமேடை அல்ல – என்று.

இந்தப் புரிதலின் விளைவாக எங்கள் கல்லூரிப் பேச்சு மேடையில் – புதுப் புதுப் பேச்சாளர்கள்! புதுப் புது வெற்றியாளர்கள்! ’மியாவ் மியாவ்களின் கைகளில் இன்று பரிசுப் புத்தகங்கள்!  ‘இயல்பாகப் பேசுங்கள்’ என்ற என் வேண்டுகோள் பௌதிக சக்தியானது. எந்தத் தலைப்பானாலும் நான் நீ என்று போட்டியிடும் காலம் வந்தது. எந்த மேடையிலும் சில புதிய குரல்கள் கேட்டன. ’இதுவரைக்கும் நான் பேசினது இல்லை. இப்பத்தான் முதல் தடவையாப் பேசுறேன்’ என்று அறிவித்து எங்கள் ஆர்வத்தைத் தூண்டின.

பணிக்காலத்தின் இறுதியில் நெல்லைப் பல்கலைக் கழகத்தில் இளைஞர் நலத்துறை இயக்குநர் ஆனேன். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இளைஞர் நல விழாவில் ஏராளமான போட்டிகள் இடம் பெற்றன. இசைத் தமிழ்ப் போட்டிகளில் உயர் வகுப்புக் குடும்பங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இயல் மற்றும் நாடகப் போட்டிகளில் எல்லார் வீட்டுக் குடும்பமும் பங்கேற்கும். பேச்சுப் போட்டியோ அசலான பொதுமேடை. ஒரேஒரு முறை அந்த மேடையைக் கவனித்தேன். 1999-ஆம் ஆண்டு என ஞாபகம்.

44 கல்லூரிகள் பங்கேற்றன. ஊழலோ வரதட்சணையோ பேச்சுப்போட்டியின் தலைப்பாக இருந்தது. (தலைப்பு சரியாக நினைவில் இல்லை). மாணவர்கள் பேசினார்கள். அநேகமாக அது நாடக மேடையாகத்தான் இருந்தது. ’தாயே தமிழே’ மீண்டும் மீண்டும் ஒலித்து என்னைத் தொந்திரவு செய்தது. “நான் கேட்கிறேன்! மாணவர்கள் என்ன மடையர்களா?” என்பது போன்ற சம்பந்தமற்ற கேள்விகளை மாணவர் சிலர் பேச்சினிடையே எழுப்பியபோது ஆரவாரம் தூள் பறந்தது. சம்பந்தமற்ற குட்டிக் கதைகளையும் மேடையில் சிலர் அவிழ்த்துவிட்டனர்.

பேச்சுப் போட்டிகளில் நெல்லைத் தமிழும் குமரித் தமிழும் மோதிக் கொள்ளும். மதுரைத் தமிழனாகிய எனக்கு இரண்டுமே புதுசு. குமரிக்காரர் ‘கழிஞ்ச ஞாயித்துக்கிழமை’ என்பார். ’போன ஞாயித்துக் கிழமை’ என்பது மதுரைப்
பழக்கம். ’கழிஞ்ச’ என்ற வார்த்தையை நாங்கள் கொச்சைப்படுத்தி வைத்திருந்தோம். ‘நான் போட்ட போடில அவன் கழிஞ்சிட்டான்’ என்போம்.

அன்றைய பேச்சுப் போட்டி காதைத் துளைத்துக் கொண்டிருந்த போது குமரி மாவட்டத்து மாணவன் ஒருவன் பேச எழுந்தான். (பெயர் நினைவில் இல்லை). விளிகள் இன்றி நேரடியாகப் பேச்சில் இறங்கினான். (2 மதிப்பெண் இழப்பு).
மலையாளம் கலந்த தமிழில் அவன் உரையாடினான். இடையிடையே ஆங்கிலக் கலப்பு. ஆனால் தலைப்பைப் புரிந்து கொண்டு அழுத்தமாகப் பேசினான். பாதிக்கப்பட்டவனின் வாதம் போல் உஷ்ணமாக இருந்தது அவன் பேச்சு. பிரமித்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன். நூல் அறுந்தது போல சடக்கென்று பேச்சை முடித்தான். வியர்வை பொங்க அமர்ந்தான்.

முடிவு சொல்லும் நேரம் வந்தது. நான் அருகில் இருந்ததால் முடிவை வாசிக்கும் முன் நடுவர்கள் என்னிடம் காட்டினார்கள். அவனைத் தேடினேன். இருபதையொட்டி அவன் பெயர் இருந்தது. முதல் மூன்றில் இல்லை. தலையிடுவதா வேண்டாமா என்று தடுமாறினேன், ஜனநாயகமா நியாயமா என்று மனதுக்குள் போராடினேன்.

பிறகு மெல்லப் பேச்சைத் தொடங்கினேன். அவன் பெயரைச் சுட்டிக் காட்டி ’நல்லாப் பேசுனானே’ என்றேன். நடுவர் குழு சுதாரித்து நிமிர்ந்தது. கரெக்ட் என்றார் ஒருவர். ஆமோதித்தார் மற்றொருவர். ஒருவர் மட்டும் ‘கருத்து இருந்துச்சு; பாணி
சரியில்ல’ என்றார். ஆனால் அதிகம் பேச இடம் இருக்கவில்லை. ஒரு நிமிடத்தில் முடிவு மாற்றப்பட்டது. அவன் இருபதில் இருந்து முதல் இடத்துக்கு வந்துவிட்டான்.

முடிவு அறிவிக்கப்பட்டபோது கூட்டம் திகைப்படையவும் இல்லை; உற்சாகம் கொள்ளவும் இல்லை. வழக்கம் போலக் கைதட்டல்.

வெற்றி பெற்ற அவன் முகத்தைப் பார்த்தேன். பூரிப்பை மிஞ்சிக் கூச்சம் இருந்தது. நானும் கூசித்தான் இருந்தேன் – தலையிட்டதற்காகவும், சரியான ஒரு பேச்சுக்கு பேச்சுவார்த்தை மூலம் வெற்றியைப் பெற நேர்ந்த சரிவுக்காகவும்……!

ச.மாடசாமி

நன்றி: விழுது இதழ்