ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது. வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது. சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும் கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை. மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது. மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடைமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக் கொண்டிருந்து ஆளும் வர்க்கம். அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ‘சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது. அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ‘சாசன இயக்கம்’ தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டகளையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக் கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.
“நான் இந்தியாவின் எல்லாத்திசைகளிலும் பயணம் செய்து பார்த்துவிட்டேன். எந்த ஒரு மூலையிலும் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ என்னால் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு பொருளாதாரச் செழிப்பும் பண்பாட்டுச் செறிவும் வாழ்க்கை நியதிகளும் ஆன்மீக மதிப்பீடுகளும் ஒழுக்க நெறிகளும் மிக்கதான இத்தேசத்தை நம்மால் ஒருபோதும் அடிமைகொள்ள முடியாது. இம்மண்ணின் ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் முதுகெலும்பை முறித்துப் போடாமல் இந்நாட்டை அடிமைப்படுத்த முடியாது. ஆகவே நான் இந்நாட்டில் நிலவும் பழைய கல்விமுறை மற்றும் பண்பாட்டு அசைவுகளை நீக்கிவிட்டு அந்த இடத்தில் புதிய கல்வி முறையையும் அதனூடாகப் புதிய பண்பாட்டு விழுமியங்களையும் இம்மக்கள் மனங்களில் ஸ்தாபிக்க வேண்டும். தங்கள் கல்வி தங்கள் மொழி இவற்றைவிட ஆங்கிலக்கல்வி, ஆங்கிலம் உயர்வானது என்று இம்மக்கள் ஒப்புக்கொள்ளும் படி இவர்கள் கற்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் இவர்கள் தங்கள் சுய கெளரவத்தையும் சொந்தப் பண்பாட்டையும் இழந்து முழுமையான அடிகைகளாக ஆவார்கள்”.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை நமது கல்விமுறையை வடிவமைத்து நம் தலையில் திணித்த மெக்காலேயின் 1835 பாராளுமன்ற உரையாகும். மிக வெற்றிகரமாக மேற்சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இந்தியாவில் அமலாக்கப்பட்டது. நாம் அடிமைகளோனோம். 1947ஆம் ஆண்டு அரசியல் சுதந்திரம் நமக்குக் கிடைத்தபோதும் மெக்காலேயின் கல்வி வலைக்குள் 1860களில் விழுந்த நம் தேசம் இன்னும் பண்பாட்டு ரீதியாக அவ் வலையைக் கிழித்து வெளியேறவில்லை. அதன் அடையாளமாகத்தான் இன்றும் நிலவும் நம் கல்விமுறையும் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் திகழ்கின்றன.
இதில் மாற்றம் வேண்டும் என மாணவர் இயக்கங்களும் ஜனநாயக எண்ணம் கொண்ட கல்வியாளர்களும் காலம் காலமாக வலியுறுத்தியும் போராடியும் வந்ததன் விளைவாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியைக் கொண்டுவரச் சம்மதித்தது. ஆனாலும் இப்போது பாடப் புத்தகங்களை மட்டும் சமச்சீராக்குகிறோம் என்று சொல்லி இந்த ஆண்டு முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் மட்டும் பாடப் புத்தகங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இப் புத்தகத் தயாரிப்பிலும் மேற்பார்வையிடும் பணியிலும் முற்போக்கான சிந்தனை கொண்ட பல்வேறு ஆளுமைகள் ஈடுபடுத்தப்பட்டது தமிழகப் பாடப்புத்தக வரலாற்றில் முதல் முயற்சியாகும். அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு அழகான வடிவமைப்பில் குழந்தைகளின் மனநிலையைக் கணக்கில் கொண்டு புத்தகங்கள் வந்துள்ளன. ஆகவே இம் முயற்சியை நாம் முதலில் வரவேற்க வேண்டும். இந்த முற்போக்கான ஆளுமைகள் சொன்னதெல்லாம் நடந்ததா என்று தெரியாது. எவ்வளவு தூரம் இவர்கள் சொன்னதற்கு மதிப்பு இருந்தது என்பதும் முழுமையாக நமக்குத் தெரியாவிட்டாலும் புத்தகங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விட்ட சூழலில் அவை பற்றிய கருத்துக்களை நாம் பதிவு செய்வது அவசியம்.
தமிழ்ப்பாடம் தவிர மற்ற எல்லாப் பாடங்களும் இதுவரை முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் அப்படியே அவை தமிழாக்கம் செய்யப்பட்டு வந்ததாகவும் இந்த ஆண்டு தான் முதன் முறையாக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் நேரடியாகத் தமிழில் எழுதப்படுகின்றன என்றும் அறிய நேர்ந்தபோது நாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். மெக்காலே நம் மூளைகளில் எவ்வளவு அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறான்! இந்த மாற்றம் வருவதற்கே – இந்தத் தன்னம்பிக்கையும் தமிழால் முடியும் என்கிற நம்பிக்கையும் வருவதற்கே – தமிழ் தமிழ் என்று முழங்கி வரும் திராவிடக் கட்சிகள் 43 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டு முடிக்க வேண்டி இருந்திருக்கிறது. அவர்தம் தமிழ் உணர்வு பாடத்திட்டத் தயாரிப்பில் இப்படியாகத் தான் இதுகாறும் பொங்கி வழிந்துள்ளது என்பது எவ்வளவு கசப்பான உண்மை.
ஆறாம் வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் கடவுள் வாழ்த்து என்பதற்கு பதிலாக வாழ்த்து என்று போட்டு இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடல் முதல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் மேற்பார்வையில் இப்பாடப்புத்தகம் வந்துள்ளதன் அடையாளங்கள் புத்தகம் நெடுகிலும் கிடக்கின்றன.
இலக்கணத்தை அறிமுகம் செய்யும் முதல் பாடம் இவ்வாறு சொல்கிறது:
“இலக்கணம் எதற்கு?
நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இலக்கணம் தேவை.
இப்படி எழுது, அப்படி எழுது என்று கட்டளையிடுவதற்காக இல்லை.
அவன் வந்தாள் என்று எழுதினால் யாருக்காவது புரியுமா? வந்தவர் ஆணா, பெண்ணா என்பது எப்படித் தெரியும்?
நாம் பேசுவதும் எழுதுவதும் மற்றவர்க்கும் புரிய வேண்டும்; நமக்கும் புரிய வேண்டும். அதற்குத்தான் இலக்கணம் தேவைப்படுகிறது”.
இப்படி ஒரு மொழியில் குழந்தைகளின் அனுபவத்தைக் கணக்கில் கொண்ட ஒரு பாடத்தைக் காண எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் துணைப்பாடங்களில் நம்மூர் நாட்டுப்புறக்கதைகளை வைக்காமல் பழையபடி வெளிநாட்டுக் கதைகளையும், அறுதப்பழைய அதே தெனாலிராமன் கதையையும் வைத்திருப்பது ‘ம்கூம். இன்னும் திருந்தலே…’ என்கிற சலிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
“தமிழ்ப் பாடநூலில் நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு முறையும் பாடத்திட்டம் மாற்றப்படும் போது, காந்தியடிகள், காமராஜ், தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றோருள் ஒருவரது வாழ்க்கை வரலாற்றுச் செய்தி இப்பகுதியில் இடம் பெற்றிருக்கும். ஒருவரைப் பற்றிய பாடமே தொடர்ந்து பாடநூலில் இடம்பெறுவதில்லை. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு, ஆறாம் வகுப்பில் மட்டுமே தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 1995, 2003ம் ஆண்டு பாடநூல்களைத் தொடர்ந்து இப்போதும் (2010) இவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இப்போது வெளிவந்துள்ள பாடநூல் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருப்பது உறுதி. அவ்வாறாயின் இருபதாண்டு காலத்தில், இடைவெளியின்றித் தொடர்ந்து இரண்டு தலைமுறைகளுக்கு ஒரே பாடப்பொருளைக் கற்றுக்கொடுப்பது ஏற்புடையதுதானா? பாடநூல் ஆசிரியர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளாது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை.” என்று தினமணியில் ஒரு கட்டுரையாளர் எழுப்பிய அதே கேள்வி நமக்கும் வருகிறது. அதுபோலவே நாட்டுப்புறத்தை ‘நாட்டுப்புரம்’ என்று பாடத்தில் அச்சிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
வகுப்பறைத் திறன்கள், வாழ்க்கைத் திறன்கள், எது பண்பாடு என்கிற உரைநடைப் பாடம், நாட்டுப்புறப் பாடல்களை உரைநடைப்பாடத்தில் கொண்டு வந்தது எனப் பாராட்டத்தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரான டாக்டர். ஆர்.ராமானுஜம் வல்லுநராக இருந்து தயாரித்ததாலோ என்னவோ முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக் கணிதப் பாடப்புத்தகங்கள் அருமையாக வந்துள்ளன. முதல் வகுப்புத் தமிழில் எடுத்த எடுப்பில் அனா ஆவன்னா என்று பிள்ளைகள் கையை ஒடிக்காமல் விளையாட்டாகவே எழுத்துக்களையும் கற்றுக்கொள்ளும் விதமாகப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆறுதலாக இருக்கிறது.
எல்லாப் பாடப் புத்தகங்களிலுமே பல பாடங்கள் குழந்தைகளுக்கான மொழியில் எழுதப்பட்டுள்ளது மிக மிக முக்கியமான முயற்சியாகும். நமது செம்மலரின் வடிவமைப்பு ஓவியர் மாரீஸ் பல பாடப் புத்தகங்களை அழகாக வடிவமைத்திருக்கிறார். இளம் ஓவியர்கள் பலரையும் மணியம் செல்வம் போன்ற மூத்த ஓவியர்களையும் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். வரவேற்கத்தக்க ஒன்று.
தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு இப்பாடப் புத்தகங்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பெருவாரியாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சோப லட்சமான குழந்தைகளுக்கு நியாயம் செய்ய தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு முயற்சி நடந்துள்ளது. வரவேற்போம்.
அதே சமயம் முற்போக்கான சிந்தனையாளர்களை அவர்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளாகவோ பி.எட்., எம்.எட். என்கிற கல்வித்தகுதி இல்லாதவர்கள் என்பதற்காகவோ பயன்படுத்தாமல் விடுவது இன்னும் தொடர்கிறது. தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களையெல்லாம் அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு இணைத்துக்கொண்டு பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதே நாம் எதிர்பார்ப்பது.
மெக்காலே அழித்துச் சென்ற நமக்கேயான பண்பாட்டு விழுமியங்களை பாடப்புத்தகங்களின் வழி மீட்டெடுக்க வேண்டும். அப்பணி இன்னும் தூரத்துக் கனவாகவே இருக்கிறது. எனினும் இந்த சமச்சீர் பாடப்புத்தகங்கள் அத்திசையை நோக்கித் திரும்ப முயற்சிக்கின்றன.
ச. தமிழ்ச் செல்வன்
நன்றி: செம்மலர் ஜூலை 2010 இதழ்