”…..the red pen for the bad things is the teacher’s most powerful weapon”
(Frank McCourt—Teacher Man)
1
ஆசிரியரைப் ‘பயந்த சர்வாதிகாரி’ என்று சொல்வதுண்டு. சுற்றிலும் உள்ள எதைப் பார்த்தாலும் பயந்து அரளுவார். வகுப்பறைக்குள் மட்டும் ஒரு சர்வாதிகாரி போலக் காட்டிக் கொள்ளப் பார்ப்பார். பயந்த குடிமக்களை விரும்பும் ஒரு பயந்த சர்வாதிகாரி.
பணியில் சேர்ந்த புதிதில் சக ஆசிரியர்களின் கண்களுக்குக் கூடப் பயப்படுவேன். அந்தக் கண்கள் நான் பாடம் நடத்துகிற விதத்தை நோட்டம் விடும்.
“பையன்களைப் பார்த்து நடத்தாமல் எங்கேயோ பார்த்துப் பாடம் நடத்துறார்”
”வகுப்புக்குள் தேவையில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கிறார்”
“பசங்களை வாங்க போங்க என்று மரியாதையிட்டுக் கூப்பிடுறார்”
நான் பணியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் என் வகுப்பறை ரகசியங்கள் கல்லூரி முதல்வரின் டேபிளுக்குப் போய்விட்டன. இது உண்மையா? இது உண்மையா? என்று கல்லூரி முதல்வர் கேட்கக் கேட்க எனக்கு மூத்திரம் நெருக்கியது.
ஆசிரியர் அறையில் எந்நேரமும் பீதி சூழ்ந்திருக்கும். அட்டெண்டர் ஒரு சுற்றறிக்கையைக் கொண்டு வந்தாலும் ‘யாருக்கோ ஓலை வருது’ என்று ஒருவர் காதருகே குசுகுசுத்துத் திகிலூட்டுவார். ஓலை என்றால் மெமோ!
கடற்கொள்ளையர்கள் எப்போது சுற்றி வளைப்பார்கள் என்பது புரியாமல் பயந்து பயந்து நகர்ந்து கொண்டு இருந்தது இருண்ட கடற்பயணம்.
பற்றிக் கொள்ள ஏதாவது வேண்டும்; எனக்கும் சிறு அதிகாரம் வேண்டும். நானும் யாராவது சிலரை மிரட்ட வேண்டும்.
விரும்பியது விரைவில் எனக்குக் கிடைத்தது. அது – சிவப்புப் பால்பாயிண்ட் பேனா. அதற்குள் சிறு அதிகாரம் நிரம்பிக் கிடந்தது.
2
கிராமப்புற மாணவர்கள். தட்டுத் தடுமாறி பாஸ் செய்து பி.யூ.சி வந்து விட்டார்கள். வரிக்கு வரி எழுத்துப் பிழை இருக்கும்.
ஆங்கில ஆசிரியர் எங்களோடு பேசிக் கொண்டே பேப்பர் திருத்துவார். பேப்பரைப் பார்க்காமல் எங்களைப் பார்த்துக்கொண்டே சர் சர் என்று அடித்தல் கோடு போடுவார்.
“என்ன சார் இது?” என்று நாங்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். நாங்கள் கேட்போம். ”செக் பண்ணிப் பாருங்க! நான் கோடு போட்ட இடத்தில் நிச்சயம் மிஸ்டேக் இருக்கும்” என்பார். மாணவர்கள் மீது அவ்வளவு பெரிய நம்பிக்கை!
நான் இன்னொரு துருவம்.வரிக்கு வரி விடைத்தாளைப் படித்துத் திருத்துபவன். முடிஞ்சுச்சா? முடிஞ்சுச்சா? என்று கேட்டுக் கேட்டுத் துறைத்தலைவர் விரக்தியின் எல்லைக்கே போன பிறகுதான் விடைத்தாள் கட்டை முடித்து அவர் கையில் கொடுப்பேன்.
ஆசிரியர் அறையின் கவனத்தைக் கவர்வதற்காக அவ்வப்போது விடைத்தாளில் உள்ள பிழைகளை வாசித்துக் காட்டுவேன். இது நேர்மைக் குறைவான பழக்கம் என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை.
காவடிச்சிந்து ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியாரை அண்ணாமலை ரொட்டியார் என்று மாணவன் எழுதிய போது இந்த வேடிக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும். வாசிப்பேன். ஆசிரியர் அறை அலறும். புதிதாகப் பணியில் சேர்ந்த நான் ஆசிரியர்களோடு கலப்பதற்கு இந்தக் குறுக்கு வழி பயன்பட்டது.
சில ஆசிரியர்கள் டிசிப்ளின் டிசிப்ளின் என்று கத்துவார்கள். ஆனால் அவர்களின் உள்முகங்களை ஆசிரியர் அறையில் காணலாம். எந்நேரமும் பாலியல் குறியீடுகளோடுதான் பேசுவார்கள். கல்வி சார்ந்த பேச்சு ஆசிரியர் அறையில் கம்மி.
ஒருமுறை என்னைக் கேளாமலே, என் மேசையில் இருந்த விடைத்தாளை எடுத்து ஆங்கில ஆசிரியர் வாசித்தார். ”நலங்கிள்ளி நெடுங்கிள்ளியின் கொட்டையை (கோட்டையை) சுற்றி வளைத்தான்” என்ற வரியை வாசித்து அவர் சிரித்த சிரிப்பும், கூட இருந்த ஆசிரியர்கள் செய்த ரகளையும் ஞாபகத்துக்கு வருகின்றன.
சுத்த காந்தியவாதியாகப் பட்டினி கிடந்து நான் வாழ்ந்த காலம் அது. ஆசிரியர்களின் உள்முகங்களும், ரசனைகளும் எனக்குக் கசந்தன.
என்னிடமிருந்த கோளாறு வேறு விதமானது. ‘சிரத்தையோடு இருப்பது’ என்பதைச் ‘சிடுமூஞ்சியாக இருப்பது‘ என்று புரிந்து வைத்திருந்தவன் நான். மாணவர்களின் விடைத்தாள்களை வரிக்கு வரி படித்து விமர்சனங்களை எழுதித் தள்ளுவேன். சிவப்புப் பால் பாயிண்ட் துடிதுடிப்பாய் இயங்கும்.
‘பொருத்தமற்ற விடை’ ‘குழப்பம்’ ’தெளிவில்லை’ ’வெட்டிக்கதை’’ பிழைகள் ஏராளம்’ என யோசித்து யோசித்துக் குறிப்பு எழுதுவேன். விடைத்தாள் கட்டோடு வகுப்புக்குள் நுழைகையில் சிறு பகுதி மாணவர்கள் உஷ்…ஷ்… என்று பெருமூச்சு கிளப்புவார்கள். ஒரு மாணவன் தன் விடைத்தாளை அடுத்தவனுக்குக் காட்டமாட்டான். பதுக்கப் பார்ப்பான். நான் விரும்பிய வண்ணம் விடை எழுதிய மாணவர் சிலருக்குப் பாராட்டும் உண்டு. மொத்த மதிப்பெண்ணுக்கருகில் ‘நன்று!’.
ஏன் இந்த வேலைக்கு வந்தோம் என்று நான் வருத்தப்பட்ட தருணங்களில் ஒன்று – நான் சிவப்புக் கோடிட்ட விடைத்தாள்கள் விளையாட்டு மைதானத்தில் துண்டு துண்டாய்ச் சிதறிக் கிடப்பதைக் காணும் போது!
கூடவே என் விமர்சனங்களும் கிழிபட்டுக் கிடக்கும்.
3
தான் காயம்படாமல் விமர்சனத்தின் வலியை எங்கே உணர முடிகிறது?
ஆண்டிறுதியின் கடைசி வகுப்பு கைதட்டலும் சிரிப்புமாய் இருக்கும்.ஒருமுறை எனக்கு அப்படி அமையவில்லை.
கடைசிவகுப்பில் ஒரு துண்டுச் சீட்டை எழுதி என் டேபிளில் வைத்துவிட்டுச் சிலமாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறிப் போய்விட்டார்கள்.வகுப்பில் நுழைந்ததும் துண்டுச்சீட்டு கண்ணில் பட்டது. எடுத்துப் படித்தேன்.
சீட்டின் முழு வாசகங்களும் நினைவில் இல்லை. “மாடசாமி நீ மடசாமி” என்று துண்டுச் சீட்டு தொடங்கி இருந்தது. படி!படி!படி! என நான் வருடம் பூராவும் புலம்புவதாகத் துண்டுச்சீட்டில் நெருக்கி எழுதி இருந்தார்கள்.
துண்டுச்சீட்டு உண்டாக்கின காயம் பெரிதாக இல்லை. துண்டுச்சீட்டை எப்படி எதிர்கொள்வது என்பது தான் என் யோசனையாக இருந்தது.
துண்டுச்சீட்டு வாசகங்களை ஒருமுறைக்கு இருமுறை சத்தமாக வகுப்பில் வாசித்தேன். பிறகு மடித்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு வகுப்பைத் தொடர்ந்தேன்.
வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் சிலர் ஓடிவந்து யார் இந்தக் காரியத்தைச் செய்தது என்று பதற்றத்தோடு சொன்னார்கள்.அது குறித்து நான் ஆர்வம் காட்டவில்லை.
துண்டுச் சீட்டைப் பொருட்படுத்தாதது மாதிரிக் காட்டிக் கொள்வதில்தான் கவனமாக இருந்தேன். உண்மையில் அதைச் சுமந்துகொண்டே இருந்தேன்.
நிர்வாகத்திடம் போய்ப் புகார் எதுவும் செய்ய வில்லை. நிர்வாகத்துக்கும் எனக்கும் இடையே ஆயிரத்தெட்டு முரண்பாடு இருந்தது. நிர்வாகத்துக்கு இந்தத் துண்டுச் சீட்டு அல்வா போல இனிக்கக் கூடியது.
நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மட்டும் பகிர்ந்து கொண்டேன். நண்பர் ஸ்டேனிஸ் லாஸ் தோளைத் தொட்டுச் சொன்னார். ”சின்ன விசயத்துக்கு எல்லாம் தீவிரமா யோசிக்காதீங்க. Learn to laugh. சிரிக்கப் பழகிக்கங்க”.
விமர்சனத்தால் மாணவர்கள் புண்படுவார்கள் என்பதை இந்தத் துண்டுச் சீட்டு எனக்கு உணர்த்தியது. இருப்பினும் என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனாவின் அதிகார விருப்பம் குறையவில்லை.
ஆசிரியர் போராட்டங்களும்,அறிவொளி இயக்க அனுபவங்களுமே என் பேனா நடத்திய அதிகார உரையாடலில் குறுக்கிட்டன.எழுதுவது எப்படி என்று கற்றுக் கொடுத்தன.
எழுபதின்(1970) தொடக்கத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். எண்பதின் தொடக்கத்தில் வேறொரு சிவப்பு மை என் பேனாவுக்குள் நிரம்பியது. என் சிந்தனைப் போக்கையே மாற்றிய மை அது.
4
நல்ல இடத்துக்குத் தாமதமின்றிச் சீக்கிரமே வந்துவிட்டேன்.
விடைத்தாள்களில் கோடு, சுழி, பெருக்கல் அடையாளமிடுவது படிப்படியாகக் குறைந்தது.
க்,ச்,த்,ப் – நான்கும் வேகத்தில் விடுபட்டுப் போகும் ஒற்றுப் பிழைகள். கோடு போட்டுக் கோடு போட்டுத் தாளை அசிங்கம் செய்யாமல் அந்த இடங்களில் க்,ச்,த்,ப்-போட்டு நிரப்பினேன். விடைத்தாளைக் கரும்பலகையாக மாற்றிக் கற்றுக் கொடுத்தேன்.
நன்று இப்போது அபூர்வமானதாக இல்லை. ஒவ்வொரு விடைத்தாளிலும் தேடித் தேடி நன்று போட்டேன். அருமை!பிரமாதம்! போன்ற பாராட்டுகளும் விடைத்தாளில் மனமுவந்து விழுந்தன.
‘நுட்பமான கருத்து’ ‘கச்சிதமான கட்டுரை’ ‘இனிய கற்பனை’ தெளிந்த நடை’ – எனப் பலவிதமாக அவர்களின் நீல மை எழுத்துக்களை என் சிவப்பு மை அங்கீகரித்தது.
வழக்கம்போல் விடைத்தாள்களைத் தருவதில் தாமதம் இருந்தது. மாணவர்கள் விடைத்தாள்களைப் பெற,பசியோடு காத்திருந்தார்கள்.விடைத்தாள் கட்டு கண்டதும் கண் விரிய மலர்ந்தார்கள்.
விடைத்தாள் பதுக்கப்படுவது நின்று போனது. சில விடைத்தாள்கள் முதல் பெஞ்சில் இருந்து கடைசி பெஞ்சு வரை மரியாதையோடு பயணம் செய்து திரும்பின.
சிவப்புப் பால்பாயிண்ட் பேனா?… அது அதிகாரமற்று சட்டைப் பையில் செருகிக் கிடந்தது.
அதிகாரமற்று இருப்பதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதில் இருக்கிறது?……..
ச.மாடசாமி
நன்றி: புதிய ஆசிரியன்