சில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 3

கண்கள் சில தோற்றங்களுக்குப் பழக்கப்பட்டு விடுகின்றன. சற்று மாறுதலாக இருந்தாலும் மனது உடனே உள்வாங்குகிறது.

கல்லூரியின் அடுத்த யூனியன் சேர்மன் செல்வமாக இருக்கலாம் என்று வதந்தி பரவியபோது “பையன் சின்னப் பொடியனா இருக்கானே! சமாளிச்சிக்கிடுவானா? “ என்று ஆசிரியர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.

எல்லா யூனியன் சேர்மன்களோடும் நெருக்கமாக இருந்தவன் நான். அவர்களின் பொது அம்சங்களைக் கவனித்திருக்கிறேன். வகுப்பறையில் அமைதியாக இருப்பார்கள். ஆசிரியர்களோடு முரண்பாடின்றி நட்போடு நடந்து கொள்வார்கள். எல்லா வகுப்பு மாணவர்களின் கவனத்தையும் பெற்றிருப்பார்கள்.

கடைசி அம்சம் செல்வத்திடம் இருந்ததாக நினைவு இல்லை. அது போக சிரத்தை எடுத்துப் படிக்கக்கூடிய சராசரி மாணவனாகவும் அவன் இருந்தான். தலைவர்களுக்குப் படிப்பு எதற்கு?…

ஆசிரியர்-மாணவர் எல்லோரிடமும் இறுக்கமின்றிச் சிரித்த முகத்தோடு பழகக்கூடிய எளிமை செல்வத்தின் தனிச் சிறப்பு.

சிரித்த முகம் ஜெயிக்கும் என்பதைப் பள்ளி யூனியன் தேர்தலிலேயே பார்த்திருக்கிறேன். இருளப்பன் என்ற கம்பீரமான இளைஞனை மேத்தா என்ற சிரித்த முகம் கொண்ட சிறுவன் (இன்று கவிஞர் மு.மேத்தா) பெரியகுளம் வி.எம்.போர்டு பள்ளி யூனியன் தேர்தலில் வெகு சுலபமாக வெற்றி கொண்டதைக் கண்டிருக்கிறேன் (1960 அல்லது 1961).

எனவே செல்வத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது — மீசை முளைக்காத பிஞ்சு இளைஞனாக அவன் இருந்தபோதும்! யூனியன்சேர்மன்களின் சராசரி வளர்த்தியை விட அவன் சில அங்குலங்கள் குறைவாக இருந்தபோதும்!

யூனியன் தேர்தலுக்குக் கொஞ்ச நாள் இருக்கும்போது அந்த விபரீதம் நடந்துவிட்டது. ஒருநாள் இரவு 11மணிக்கு மேல் இருக்கும். வீட்டின் கதவு படபட என்று தட்டப்பட்டது.

எழுந்து வந்தேன். ஆசிரியர்கள் இருவர் பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்கள். ”காலேஜ்ல பெரிய கலாட்டா. பையன்களை வெட்டிப் போட்டுட்டாங்க! தீ வச்சுட்டாங்க!” என்றார்கள்.

மனது நடுங்கியது. யாருக்கும் அதிக விபரங்கள் தெரியவில்லை. சைக்கிளில் புறப்பட்டோம். ஊரை விட்டுத் தள்ளி வெகு தூரத்தில் கல்லூரி இருந்தது. போகிற வழியில் நாமும் தாக்கப்படலாம் என்று ஆசிரியர் ஒருவர் எச்சரித்துக் கொண்டே வந்தார்.

கல்லூரி நூலகத்தின் ஒருபகுதி எரிந்து கிடந்தது. பக்கத்தில் இருந்த விடுதி களேபரப்பட்டுக் கிடந்தது. ரத்தக் காயங்களுடன் அடிபட்டுத் திகைத்துக் கிடந்த மாணவர்கள் எங்களைக் கண்டதும் கதறினார்கள். செல்வத்தின் உள்ளங்கையில் அரிவாள் வெட்டு.

கல்லூரி தொடங்கி 15 வருடங்களாக இல்லாத ஒரு பகைமை — சாதிப்பகைமை — கல்லூரிக்குள் ஊடுருவிவிட்டது. பகைமையைத் தூண்டியவர்கள் மாணவர்களுக்குள் இல்லை. மாணவ வெளி சுத்தமாக இருந்தது. அசிங்கங்கள் வெளியில் இருந்து வந்து
விழுந்தன. முகம் மறைத்துச் செயல்பட்ட அவர்கள் பிடிபடவில்லை. இரையானதும் பலியானதும் மாணவர்கள் மட்டுமே.

செல்வம் உள்ளிட்டோரைத் தாக்கிவிட்டு மாணவர்கள் சிலர் காணாமல் போனார்கள். அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது. கல்லூரியில் இருந்தும் அவர்கள் நீக்கப்பட்டார்கள்.

பதில் வழக்கு வராமல் இருக்குமா? அடிபட்ட மாணவர்கள் மீதும் அவர்களுக்கு ஆறுதலாக நின்ற என் உள்ளிட்ட ஆசிரியர் சிலர் மீதும் அடித்த மாணவர்கள் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர். வழக்கு முதல் விசாரிப்பிலேயே தள்ளுபடி ஆனது.

கோபம்… பகைமை… வருத்தம்… எனக் கல்லூரி கொஞ்ச நாள் வெப்பமாக இருந்தது. பிறகு இவற்றின் தாக்கம் குறைந்து படிப்படியாகக் குளிர்ச்சி பரவியது. உடல்புண்களும் ஆறின. மனப்புண்களும் ஆறின.

“ஓடுறவனும் அம்மணம்; துரத்துறவனும் அம்மணம்” என்று சொலவடை சொல்வதுபோல் எங்கள் கல்லூரிச் சம்பவத்தில் அடித்தவர்களும் அப்பாவிகள்; அடிபட்டவர்களும் அப்பாவிகள். தூண்டிவிடப்பட்ட ஒரு கோபத்தில் அடித்துவிட்டுப் போன மாணவர்களை எத்தனை நாள் விலக்கி வைக்க முடியும்?

இப்போது எங்கள் கவனம் அடித்த அப்பாவிகள் மீது திரும்பியது. பிரியத்துக்குரிய மாணவர்கள் அங்கும் இருந்தார்கள். குறிப்பாகக் கந்தசாமி என்ற பி.காம் மாணவன். அருமையாகக் கவிதை எழுதுவான். கனவுகள் உள்ளவன்.

கனவுகள் சிதைந்து கிடந்தன. அடித்த அப்பாவிகள் இரவு நேரங்களில் தலையில் உருமால் கட்டிக்கொண்டு மறைந்து மறைந்து எங்கள் வீடுகளுக்கு வரத் தொடங்கினார்கள். படிப்பு பாழாகிப் போச்சே! என்று வருந்தினார்கள். வழக்கு இருந்ததால் எங்கள் கல்லூரியில் திரும்பச் சேர்வது சாத்தியமில்லை.

அவர்களை வேறு வேறு கல்லூரிகளில் சேர்க்க லீவு போட்டு அலைந்தோம். மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி, யாதவர் கல்லூரி, கமுதி தேவர் கல்லூரி எனக் கல்லூரி கல்லூரியாக அலைந்தோம். இதில் கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது. ஆனால் இன்னும் பெரிய லிஸ்ட் பாக்கி இருந்தது.

நாங்கள் செய்வதை எல்லாம் அடிபட்ட மாணவர்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஒரு நாள் செல்வம் ஓரிரு மாணவர்களோடு என்னைப் பார்க்க வந்தான். ’என்ன செல்வம்?’ என்றேன்.

“பாவம்! அவுங்க மேல இருக்கிற கேச வாபஸ் வாங்கிரலாம் சார்! நாங்க எல்லோரும் கையெழுத்துப் போட்டுத் தர்றோம்” என்றான்.

“என்னப்பா! திடீர்னு இந்த முடிவு?” என்றேன்.

“சார்! நீங்களும் அலையுறீங்க! அவுங்க வாழ்க்கையும் பாழாகுது! கேச வாபஸ் வாங்கிட்டா நம்ம காலேஜ்லயே அவுங்களச் சேத்துக்கலாம்! நாங்க பழைய மாதிரிக்கே பிரண்ட்ஸா இருந்துக்கிடுவோம் சார்!” என்றான்.

நான் அவனையே பார்த்தேன். பெருமித உணர்வுகளால் கண்கள் ஈரப்பட்டன.

யார் எந்த நேரத்தில் எப்படியொரு தோற்றம் எடுப்பார் என்பது புதிராகத்தான் இருக்கிறது.

மீசை முளைக்காத அந்த இளம் மனிதன் என்முன் ஒரு கம்பீரமான தோற்றம் எடுத்து நின்றான்.

ச.மாடசாமி

நன்றி: விழுது இதழ்