1
வகுப்பறையின் கவனத்தைப் பெறுவதற்காக கோமாளி ஆகிப் போனவள் அந்தச் சிறுமி.
பேசுவதற்காக அவள் எழும் போதெல்லாம் வகுப்பில் சிரிப்பலைதான்.
“யாருக்குத் தெரியும்?’ என்று ஆசிரியர் கேள்வி எழுப்பியதும் உடனே கையைத் தூக்கி விடுகிறாள். அவள் கையைத் தூக்கியதுமே சிரிப்பு பொங்க ஆரம்பித்து விடுகிறது.
தமிழ் ஆசிரியர் ‘உஷ்ஷ்’ என்று சிரிப்புச் சத்தத்தை அடக்குகிறார். கொஞ்சம் கனிவானவர். “சொல்லும்மா துர்கா! சிலப்பதிகாரக் கதையின் தலைவி யார்? நேத்துப் படிச்சோம்பல!” பிரியமாய்த் தூண்டுகிறார். துர்கா பதில் சொல்கிறாள் “சாத்தப்பன்!”. இது தன்னை அவமதித்த பதில் என்று ஆசிரியர் கருதுகிறார். “சீ! உக்காரு கழுதை!” கனிவு இப்போது நாறுகிறது. கண்ணகி என்பது அவள் ஞாபகத்தில் இருக்கிறது. பதில் அளிக்கும்போது ஒரு சம்பந்தமும் இல்லாத ‘சாத்தப்பன்’ வருகிறான். இந்தச் சிறுமியைப் பரிகாசத்தில் தள்ள எழவு பிடிச்சவன் எங்கிருந்து வந்தான்? இவளுக்குள் என்ன குழப்பம்? கண்டுபிடிக்க யாருக்குப் பொறுமை இருக்கிறது?…