தைரியத்துக்கு மார்க் போடச் சொன்னால், மாணவர்களை விட மாணவிகளுக்குத்தான் நான் அதிக மார்க் போடுவேன்.
இது விசயத்தில் ஆர்.கே.நாராயண் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. Strength வேறு Courage வேறு என்பார் நாராயண்.(Malgudi School Days).
மாணவர்கள் ஒன்று கூடிப் புயலைப் போலச் சீறும் கட்டங்களையும் பார்த்திருக்கிறேன். ஆக்சன் சினிமா போலத் திடுக்கிடும் காட்சிகள் கண்முன் ஓடும். கட்டாயம் சன்னல் கண்ணாடிகள் சில உடைந்து நொறுங்கும்.
மறுநாள் கூட்டம் கலைந்து விடும். சிலர் மாட்டிக் கொள்வார்கள். விசாரணை நடக்கும். அம்மா அப்பாக்களும் கூடச் சேர்ந்து அலைவார்கள். நேற்றைய ஆவேச முகங்களில் இன்று பரிதாபம் புகுந்திருக்கும். ஐநூறு ரூபாய் பெறுமான சன்னல் கண்ணாடிகளுக்காக ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கில் அபராதம் கட்டவேண்டியிருக்கும். கட்டுவார்கள்.
நெல்லைப் பல்கலைக் கழகத்தில் நான் இளைஞர் நலத்துறை இயக்குனராக இருந்தபோது, ஒரு கலைவிழாவில் என் கண்முன்னே – ‘ஏய்!என்னப்பா!..” என்ற என் பலவீனமான கூச்சலைப் புறக்கணித்து – ஒரு மோதல் நடந்தது. விழா ஒரு கல்லூரிவளாகத்தில் நடைபெற்றது. இரு நாள் விழா. பேச்சு, பாட்டு, நடனம், வாத்தியம், ஓவியம், கோலம்… எனப் பல போட்டி நடக்கும். முதல் நாள் விழா உற்சாகமாகத் தொடங்கியது. அன்று மதியம் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே தோன்றிய சிறு உரசல் பெருங்கலவரமாக மாறியது. நான் அதுவரை கண்டிராத கலவரம். அடி தடி… ரத்தக்காயம்… பைக் எரிப்பு! நான் சற்று திகைத்துப் போனேன்.விழா நிகழ்ச்சிகள் சட்டென்று அறுபட்டன. பங்கேற்க வந்த மாணவ மாணவியர் பயத்தோடு கலைந்தார்கள். இந்தக் கலவரம் நெல்லைப் பக்கத்து மாலைப் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி ஆனது.
மறுநாள் விழா நடக்குமா? நண்பர்கள் சிலர் “இனி நடக்க வாய்ப்பு இல்லை.மாணவர்கள் எப்படி வருவார்கள்? கல்லூரி முதல்வர்கள் எப்படி அனுப்புவார்கள்?” என்றார்கள்.
தனிப்பட்ட முறையில் ஒரு அவமானமாக நானிதை உணர்ந்தேன். இருந்தபோதும் விழாவை நிறுத்தவில்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை. மறுநாள் காலை 8 மணிக்கே விழா வளாகத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். என்ன ஆச்சர்யம்! 20 மாணவிகள் எனக்கு முன்னே அங்கு வந்து இருந்தார்கள்.மாணவிகளை அழைத்துக் கேட்டேன் ”நேற்று இங்கே கலவரம் நடந்தது தெரியுமா?” என்று. ”தெரியும்! நேற்றும் வந்திருந்தோம்!” என்றார்கள் மாணவிகள் எந்தப் பதற்றமும் இல்லாமல். அசம்பாவிதங்களைப் பொருட்படுத்தாமல் இருக்க அவர்கள் பழகியிருந்தார்கள். சற்று நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் வந்து குவிந்து விட்டார்கள். கலைவிழாப் போட்டிகள் குறித்த நேரத்தில் உற்சாகமாகத் தொடங்கிவிட்டன. மாணவர்களும் மெல்ல வரத் தொடங்கினார்கள்.நிகழ்ச்சிகளைத் தவறவிட்ட மாணவர்கள் சிலர் நெருங்கி வந்து “இன்னைக்கி நடக்கும்னு நெனைக்கல. எதுக்கும் வந்து பாப்போம்னு வந்தோம் சார்” என்றார்கள். அந்த நெகடிவ் தீர்க்கதரிசிகளுக்காகப் பரிதாபப்பட்டேன். சிக்கலான நேரத்தில் உறுதியான திருப்பம் தந்த மாணவிகளை நன்றியோடு நினைத்துக் கொண்டேன்.
நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்களிலும் பார்த்திருக்கிறேன். மாணவிகளைப் போல் மாணவர்கள் தாக்குப்பிடித்து நின்றது இல்லை. பொதுவாக ‘உள்ளூர் மாணவர்கள்’ விலகி இருக்கவே பார்ப்பார்கள். முதல் நாள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் இணைந்திருப்பார்கள். அன்று இரவே ‘நம்ம ஊர்டா’ ‘நம்ம சாதிக் காலேஜ்டா’ என்ற மந்திரங்களைச் சொல்லி அனுப்புவார்கள். மறுநாள் உள்ளூர் வரவு நின்று போவதோடு சிலர் போராட்டத்துக்கு எதிராய்க் கல்லும் வீசுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில்
ஒரு பெண்கள் கல்லூரியில் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி மாணவிகள் வகுப்பறைகளைப் புறக்கணித்தனர். ஆசிரியர் சங்கம் அவர்களுக்காக நடைபாதை வகுப்புக்களை ஏற்பாடு செய்தது. மாணவிகள் ஒட்டுமொத்தமாக நடைபாதை வகுப்புகளில் வந்து படித்தார்கள். போராட்டம் மாதக்கணக்கில் நடைபெற்றது.’நம்ம ஊர்’ ‘நம்ம சாதி’ என்று எடுத்து வீசிய அம்புகளை எல்லாம் மாணவிகள் முறித்துப் போட்டார்கள். உறுதியாக நின்றார்கள். அந்தப் போராட்டத்தையும் மறக்க முடியாது; அது தொடர்பாக நக்கீரனில்
வெளிவந்த “பாதையோரத்துப் பூக்கள்’ என்ற கட்டுரையையும் மறக்க முடியாது.
இவ்வளவு ஏன்? எங்கள் கல்லுரிக்குள்ளேயே சொல்ல ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன.கல்லூரியில் நிர்வாகம் பலமாதிரி வரும். ஒரு நிர்வாகம் சிரித்தபடி வரும்; சிரிப்பும் கோபமும் இன்றி ஒட்டாமல் ஒன்று வரும். இன்னொன்று கோபித்துக் கடுகடுத்து வரும். கோபித்து வரும் நிர்வாகம் சங்கத்தில் உள்ள ஆசிரியர்களை எதிரிகளாய்ப் பார்த்து ஒடுக்க நினைக்கும். அப்போதெல்லாம் ஆசிரியர் மாணவர் உறவிலும் விரிசல் விழும். வகுப்பறைக்கு வெளியே நிர்வாகப் பார்வை விழுகிற இடங்களில்
எல்லாம் மாணவர்கள் எங்களைத் தவிர்த்து நழுவுவார்கள்.”என்ன சார்!நம்மளப் பார்த்து இப்படி ஓடுறானுக” என்று சக ஆசிரியர்கள் விசனப்படுவார்கள். அந்த நேரத்தில் கல்லூரியில் குறைந்த எண்ணிக்கையில் மாணவிகள் படித்து வந்தார்கள்.அவர்கள் தயங்காமல் ஆசிரியர் அறைக்கு வந்து சந்தேகம் கேட்பார்கள். எங்களோடு வராண்டாவில் நின்று பேசுவார்கள். வீட்டுக்குப் போக ஸ்டாண்டை எடுத்து விட்டு சைக்கிளைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது ’நாளைக்கு டெஸ்ட் இருக்கா சார்’ என்று கேட்க ஓட்டமாய் ஓடி வருவார்கள்.எங்கெங்கும் இருந்த நிர்வாகக் கண்களை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் இதுகுறித்து ஆச்சர்யப்பட்டுப் பேசிக் கொள்வோம். வராண்டாவில் பிசியான நேரத்தில் ”சார்!செம்மலர்னு ஒரு புத்தகம் இருக்காம்ல. அது எனக்கு வேணும்” என்று ஒரு மாணவி கூவியது; நான் ‘உஷ்ஷ்’ என்று அவள் சத்தத்தைக் கட்டுப்படுத்தியது: பிறகு அவள் வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் அவள் துறை ஆசிரியர் மூலம் செம்மலரை ஒரு கவரில் வைத்து அவள் கையில் சேர்த்தது; அவள் அதை டிக்சனரி போல ஒவ்வொரு வகுப்புக்கும் பெருமையாக எடுத்து வந்து எல்லோருக்கும் காட்டியது…. வரிசையாக ஞாபகத்துக்கு வருகின்றன. அன்று அவளின் நடவடிக்கைகளைப் பார்த்துப் பதறினேன். இன்று அதை நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். வகுப்பில் மார்க்சீயம் பேசுவதாக நான் மெமோ வாங்கிக் கொண்டிருந்த நேரமல்லவா அது?
இனி மாணவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். கூட்டச் செயல்பாடுகளில் சில நேரங்களில் பிசிறடிக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் அபாரமான தைரியசாலிகளாய் சில மாணவர்கள் இருந்தார்கள். தைரியசாலிகளின் திறமைகளை வகுப்பறைகள் காண்பதும் இல்லை; கண்டுபிடிப்பதும் இல்லை. தைரியசாலிகளை முரடர்களாய்ப் பார்க்கும் ஆசிரியப் பார்வையே அதற்குக் காரணம்.
சிலர் சில சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டு நிற்பார்கள். சந்தர்ப்பம் வாய்ப்பது எப்போதும் முக்கியமானது.
நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் “சாகவும் தயார்” என ஒருமுறை நாங்கள் ஆர்ப்பரித்த போது, ராமலிங்கம் என்ற மாணவன் சட்டென்று குறுக்கிட்டு ‘சாகிறதைப் பத்தி ஏன் சார் பேசுறீங்க? அது கோழைத்தனம்” என்று எங்களைத் திருத்தினான். இப்படிக் கத்துவது உணர்ச்சி அல்ல; உதறல் – என்பதைப் புரிய வைத்தவன் அவன்.
1977-இல்தான் நேரடி ஊதியம் கேட்டு முதன்முறையாகச் சிறை நிரப்பினோம். கைது செய்து எங்களை வேனில் ஏற்றியபோது, அதைப் பொறுக்கமுடியாமல் எங்கள் மாணவர் சிலர் வேனின் குறுக்கே விழுந்து கைதானார்கள்.சிறையில் தனிஅறையில் அவர்கள் கிடந்தார்கள். பிற கல்லூரி ஆசிரியர்கள் அவர்களைப் போய்ப் பார்த்துக் கட்டித் தழுவிவிட்டு வருவார்கள். ’அற்புதமான பசங்க’என்பார்கள். கர்வத்தால் எங்களுக்கு அழுகை வரும். அந்த மாணவர் கூட்டத்துக்குத் தலைமையேற்று வந்தவன் ஜெயச்சந்திரன்.
தடிக்கம்பை ஓங்கிப் பாருங்கள். சிரித்தபடி இருப்பான். வகுப்பறையில் ’மந்தமான மாணவர்கள்’ லிஸ்டில் அவன் இருந்தான்.
வகுப்பறையில் மருதுபாண்டியன் காட்டிய அசட்டையும் இறுக்கமும் ஆசிரியர்களை எரிச்சல் கொள்ள வைத்தது. ஆனால் அவன் யூனியன் சேர்மன் ஆகி ‘உழைப்புச்சுரண்டல்’ உள்ளிட்ட தலைப்புகளில் ’சிந்தனை வாரம்’ என்ற நிகழ்ச்சி நடத்தியபோது “தரமான பையன் சார்!தரமானவன்” என்று ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
வெளிப்படும் சந்தர்ப்பமின்றியும் பலர் வெளியேறி இருக்கிறார்கள். குறும்புத்தனமும் தைரியமும் கலந்த கலவை சிவனாண்டி. ’அவன் படுத்துற பாடு தாங்கல சார்’ என்பார்கள் ஆசிரியர்கள். சிரித்துக் கொண்டே எங்களைச் சிரமப்படுத்துவான். வகுப்பில் அடிக்கடி அவனைக் கண்டிப்பேன். அதுவும் ஒரு போராட்ட காலம். நிர்வாகம் சார்ந்தவர்கள் எங்களைப் பற்றித் தட்டி எழுதி முச்சந்தியில் வைத்தார்கள். ”வடுகபட்டியின் வடிகட்டிய முட்டாளே!” என்று என்னைப் பற்றி எழுதிவைத்த வாசகம் சங்கக் கவிதை போல இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ’சீக்கிரம் நம்ம சீட்டு கிழியுமோ?’ என்ற கேள்வியை எழுப்பி ‘அப்படிச் செய்ய சிவனாண்டி விட்ருவானா’ என்ற வேடிக்கையான பதிலையும் நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக் கொள்வோம். பதற்றமான நேரங்களில் அதிகாரிகளை விட சிவனாண்டி போன்ற மாணவர்கள்தான் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள். சிவனாண்டியின் வேறு பக்கங்களை நாங்கள் காணவே இல்லை.சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒருமுறை நின்று கொண்டிருந்தபோது ஒரு வழக்கறிஞர் என்னை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தேன். அது சிவனாண்டி! முயற்சியுள்ள அந்த மாணவனைத் திட்டித் தீர்த்த நாட்களை நினைத்துக் கொண்டேன். “நீங்க அந்த வெரட்டு வெரட்டலேன்னா நான்லாம் இந்த நெலமைக்கு வந்திருக்க மாட்டேன்” என்று அவனுக்கேயுரிய பாணியில் பாவ
மன்னிப்பு கொடுத்தான் சிவனாண்டி.
இன்று நாடறிந்த ஒரு தைரியசாலி எங்கள் கல்லூரியின் பழைய மாணவன். மாணவனாக இருந்தபோது இந்த தைரியசாலி பற்றிக் கல்லூரி எவ்வளவு தெரிந்து வைத்திருந்தது என்று அடிக்கடி யோசிப்பேன்.
‘ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டிய மாணவர்’ லிஸ்டில் அவன் இருந்தான். ’சரியான சேட்டை’ என்று ஆசிரியர்கள் பேசிக்கொள்வார்கள்.
நானும் அவனும் வகுப்பறையில் சந்தித்துக் கொண்டதில்லை. ஏனெனில் அவன் வணிகவியல்(B.Com) மாணவன்.வணிகவியல் மாணவர்களுக்குத் தமிழ் கிடையாது.
இருந்தபோதும் என்னை அவனும் அவனை நானும் ஓரளவு கவனித்து வைத்திருந்தோம்.
கல்லூரி வராண்டாவில் நிமிர்ந்த நடை, உரத்த பேச்சு, பின்தொடரும் மாணவர் கூட்டம், ’கோழிக்கறி வைக்கட்டுமா மருமகனே!’ பாட்டுக்கு மேடையில் நடனம், கல்லூரியின் கடைசி வேலைநாளில் ஒவ்வொரு வகுப்பறைக்கு முன்னும் சிறு ஆட்டம் – என அம்மாணவனைப் பற்றிய பதிவுகள் எனக்குள் கிடந்தன.
மாணவர்களிடம் அன்பு; அவர்களின் குறும்புத்தனம் சிறிது அளவு கூடினாலும் சீறும் அகங்காரம் – என நான் வைத்துக் கொண்டிருந்த இரு முகங்களையும் அம்மாணவன் அறிந்தே வைத்திருந்தான்.
ஒவ்வொரு மாணவனாய்ப் பார்க்கவும்… அவன் மீது அபிப்பிராயம் கொள்ளவும்… அவனை நேசிக்கவும் அல்லது அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்… பிறகு அவனை மறக்கவுமாக எங்கள் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது.
ஒருநாள் எதிர்பாராத விதமாக அம் மாணவனைச் சென்னையில் – தராசு பத்திரிகை அலுவலகத்தில் சந்தித்தேன்.
இப்போது அந்த மாணவன் அடர்த்தியான மீசையுடன் கம்பீரமான இளைஞனாகத் தோற்றமளித்தான். மாணவனே என்னைப் பார்க்க ஓடி வந்தான்.
”என்ன தம்பி இங்கே?”என்றேன்.
“நான் இங்கே லேஅவுட் ஆர்டிஸ்டா இருக்கேன். கல்லூரியில் படிக்கும் போதே நல்லா ஓவியம் வரைவேன்” என்றான். தான் லேஅவுட் செய்த தராசுப் பத்திரிகையின் அட்டைகளைக் காட்டினான்.
நான் மலைத்துப் போனேன்.”இந்தத் திறமை உன்னிடம் இருப்பது கல்லூரியில் படிக்கும்போது எந்த ஆசிரியருக்காவது தெரியுமா?”என்றேன்.
‘தெரியாது!’ வெறுப்பைக் காட்டாமல் எங்கள் பழைய மாணவன் உதட்டைப் பிதுக்கினான். ”ஓவியத்தை விடுங்க சார்! என்.சி.சியில பெரிய ஆளா ஆகணும்னு நெனச்சேன். அதுக்கே காலேஜ்ல சரியான வாய்ப்புக் கிடைக்கல” என்றான்.
பின்னால் அந்த மாணவன் தானே சொந்தப் பத்திரிகை நடத்தி தமிழகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக வளர்ந்ததும், வீரப்பனைச் சந்தித்த சம்பவத்தால் உலகம் அறிந்த தமிழராக உயர்ந்ததும் ‘எங்கள் மாணவர்!எங்கள் மாணவர்!’ என்று பார்க்கிற ஒவ்வொருவரிடமும் சொல்லிப் பூரித்துக் கொண்டோம்.
உங்களுக்குப் புரிந்திருக்கும்–கல்லூரி நாட்களில் நாங்கள் காணத் தவறிய மாணவர் ‘நக்கீரன் கோபால்’ என்று.
தைரியசாலிகளை ஜாக்கிரதையாக மட்டும் பார்த்தோம். கவனம் எடுத்தும் பார்க்கவில்லை. அக்கறையுடனும் பார்க்கவில்லை.
பயந்த கண்கள் உண்மையைக் கண்டுபிடிப்பது எப்படி?………
(நிறைவு பெறுகிறது)
ச.மாடசாமி
நன்றி: விழுது இதழ்