குறிப்பு: சென்னையில், ஜனவரி 19,20,21 நாட்களிலும் 27,28,29 நாட்களிலும் ‘கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்’ குறித்து ‘ஆசிரியர் பயிற்சி கல்வி ஆராய்ச்சி இயக்ககம்’ பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்க்கு விவாத மேடைகளை அமைத்தது. பேராசிரியர்கள் ச.மாடசாமி, கே.ராஜு, எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், அ.வெண்ணிலா, மு.முருகேஷ், முத்துநிலவன், அறிவியல் இயக்க நண்பர்கள் அமலராஜன், ரத்தின விஜயன் ஆகியோர் விவாத மேடைகளில் பங்கேற்று கருத்துக்கள் வழங்கினர். அது தருணம், ஆசிரியர்க்கு வழங்கப்பட்ட கருத்துத் தாள்களில் ஒன்று இது.
கற்பனை – நம்பிக்கையும் உண்மையும்
கற்பனை என்பது அபூர்வமானது; அது ஒரு வரப்பிரசாதம்; அது ஒரு சிலருக்கே சாத்தியமானது; ஒருவரிடத்தில் இயல்பாய் அமைந்தது அது; தனித்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போதுதான் ஒருவரிடம் கற்பனை உண்டாகிறது – போன்றவை கற்பனை குறித்து நம்மிடம் இருக்கும் சில கருத்துக்கள்.
இவற்றை நம்பிக்கைகள் எனலாம். இவை உண்மைகள் இல்லை.
கற்பனை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது; ஒவ்வொருவரிடமும் பிறக்கிறது.
ஒவ்வொருவரையும் கற்பனையாளராக மாற்றவும் முடியும். பயிற்சி அளித்து உருவாக்கக் கூடிய திறன் தான் அது (A skill that can be learnt). தனித்த பொழுதுகளில் தோன்றுவது மட்டுமல்ல கற்பனை. கூடிப் பேசும் போதும், கூடிச் சிந்திக்கும் போதும், கூடி விளையாடும் போதும் கற்பனை பொங்கிப் பெருகுவது உண்டு.
கற்பனை – இலக்கியம், மேடை, வகுப்பறை சார்ந்த திறன் மட்டுமன்று. அது எங்கெங்கும் இருக்கிறது.
சமையல் கூடங்களில் தோன்றாத கற்பனையா? விளையாட்டு மைதானங்களில் உருவாகாத கற்பனையா? படகு செலுத்தும் கைகளிலும், பூ தொடுக்கும் விரல்களிலும் இல்லாத கற்பனையா?
சிறு விலகல்
இங்கு ‘கற்பனை’ எனப் பேசுவது, காப்பியம் எழுதும் ஆற்றலை அல்ல. நாம் எதிர்பார்ப்பது ஒரு சிறு விலகலைத்தான். பழகித் தேய்ந்த வகுப்பறைப் பாதையிலிருந்து – சிறு விலகல்.
விலகும் விருப்பம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால் விலகுதல் எளிதாக நடந்தேறுவதில்லை. ஏனெனில் விலகலை நடைமுறைப்படுத்துவதற்கான ஊக்கம் பலரிடம் இருப்பதில்லை.
‘புதியது விரும்புவாய்/புதியது அஞ்சுவாய்’ என்பார் பாரதியார்.
தேய்ந்த பாதையிலிருந்து விலகிக் கற்பனைப் பாதையில் செல்லத் தேவையானது என்ன?
அடிப்படையான தேவை – உள்ளார்ந்த ஆர்வம் – ஒரு தவிப்பு (inner passion)!
ஆர்வம் இருந்தால் சாமர்த்தியம் தானே வரும்!
பழகிய பாதைகளில் சுகம் கண்டவர்களுக்கு ஆர்வம் உண்டாவதில்லை. ஆர்வம் இல்லாத இடத்தில் மாற்றம் உண்டாவதில்லை.
பழக்கம், மரபு, கட்டுப்பாடு, இறுக்கம் இவற்றின் அழுத்தம் இல்லாத சுதந்திரமான சூழல் – கற்பனைக்கான மற்றொரு தேவை.
சுதந்திரமுள்ள – நெகிழ்வான – வகுப்பறை கற்பனையுள்ள வகுப்பறையாக மாறும். சிறுசிறு விலகல்கள் அங்கு தோன்றியபடி இருக்கும்.
ஒரு சிறிய விலகல் உண்டாக்கும் உடனடி மாற்றம் குறித்து பின்வரும் மேலைநாட்டுக் கதை விளக்குகிறது.
ஒரு சிறுவன் நடைபாதையில் இருந்த ஒரு கல்லில் அமர்ந்திருந்தான். அவன் காலுக்குக் கீழே அவனுடைய கிழிந்த தொப்பி இருந்தது. அதனுள் சில சில்லறைக் காசுகள். அவன் கையில் ஓர் அட்டை. அந்த அட்டையில் ‘நான் பார்வையற்றவன்; எனக்கு உதவுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. நெடுநாளாக இந்த அட்டையைத்தான் அவன் கையில் வைத்திருந்தான். அவன் தொப்பி ஒருபோதும் நிரம்புவதில்லை.
ஒரு நாள், பாதையில் போன ஒருவர் அந்த அட்டையைப் பார்த்தார். அவர் சிறுவனின் தொப்பியில் நிறைய சில்லறைகள் போட்டார். பிறகு சிறுவன் கையில் இருந்த அட்டையை வாங்கி அதில் வேறு விதமாய் எழுதி வைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் சிறுவனின் தொப்பி நிரம்பியது. அவர் அப்படி என்ன எழுதி வைத்தார்?
அவர் எழுதி வைத்தது இது –
இது மிக அழகான நாள்!
ஆனால் என்னால் இதைக் காண முடியாது!’
கற்பனை – திறன்களின் அடிப்படை
சுதந்திரமான சூழலில் கற்பனை பிறக்கிறது. நெருக்கடியான நேரங்களில் கற்பனை தேவைப்படுகிறது. கற்பனை உள்ளவர்கள் நெருக்கடிகளிலிருந்து மீள்கிறார்கள்.
ஆழமான நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் தவறி விழுந்தவர்கள் அனைவரும் இறந்துவிடவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலர் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். விடாமுயற்சி, உறுதி ஆகிய பண்புகளோடு அவர்களின் கற்பனையும் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
‘முடிவெடுத்தல் (decision making)’ – அடிப்படையான ஒரு திறன். கற்பனை தேவைப்படும் திறன். அவரவர் தாங்கள் வசிக்கும் குண்டுச்சட்டியிலிருந்து வெளியேறி முடிவெடுக்கவும் (to think outside the box), மாற்று முடிவுகளில் (alternatives) சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் கற்பனை தேவை.
மேலைநாட்டுக் கல்விக் கூடங்களில், இந்திய நாட்டுப்புறக் கதை ஒன்று முடிவெடுக்கும் திறன் குறித்த விவாதங்களில் இடம் பெறுகிறது. கற்பனை கொண்டு ஆபத்தைத் தாண்டிய இளம் பெண்ணின் கதை அது.
ஓர் ஏழை விவசாயி அவ்வூர்ச் செல்வந்தரிடம் கடன்பட்டிருந்தார். விவசாயிக்கு அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வயதான செல்வந்தருக்கு அவளை அடையும் விருப்பம் இருந்தது.
செல்வந்தர் ஒரு நாள் ஊரைக் கூட்டினார். விவசாயி, அவருடைய மகள் இருவரையும் வரவழைத்தார். இந்த விவசாயி என்னிடம் நிறைய கடன்பட்டுள்ளார். நான் சொல்லும் யோசனைக்கு இவர் கட்டுப்பட வேண்டும் என்றார். ஊர் தலையாட்டியது.
செல்வந்தர் சொன்னார்: “இதோ இந்தக் கூழாங்கல் குவியலிலிருந்து கருப்பு ஒன்றும் வெள்ளை ஒன்றுமாக இரு கூழாங்கற்களை எடுப்பேன். இரண்டையும் இந்த சிறு பையில் போடுவேன். விவசாயி மகள் பைக்குள் இருந்து ஒரு கல்லை எடுக்க வேண்டும். கருப்புக் கல்லை எடுத்தால் இவள் எனக்கு மனைவியாக வேண்டும். நான் இவள் தந்தையின் கடனைத் தள்ளுபடி செய்கிறேன். வெள்ளைக் கல்லை எடுத்தால், இவள் என்னைத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அதே நேரம் கடனையும் தள்ளுபடி செய்வேன். கல்லை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தாலோ, பைக்குள் என்ன கல் இருக்கிறது என்று திருட்டுத்தனமாகப் பார்த்தாலோ உடனே காவலர்களிடம் சொல்லி இவள் தந்தையைச் சிறைக்கு அனுப்புவேன்” என்றார். நல்ல யோசனைதான் என்று கூட்டம் ஒப்புக் கொண்டது.
உடனே செல்வந்தர் கற்குவியலிலிருந்து அவசரமாக இரண்டு கற்களை எடுத்தார். இரண்டும் கருப்புக் கூழாங்கற்கள். எடுத்த வேகத்தில் பைக்குள் போட்டார். யாரும் இதைக் கவனிக்கவில்லை. ஆனால் விவசாயி மகள் கவனித்துவிட்டாள்.
செல்வந்தர் பையை அந்தப் பெண்ணிடம் தந்தார். உள்ளே இரண்டும் கருப்புக் கற்கள். எதை எடுத்தாலும் அவள் வாழ்வு வீணாகும். உள்ளே இரண்டும் கருப்புக் கற்கள்தான் என்று சொன்னால் பைக்குள் இருந்ததைப் பார்த்து விட்டாய் என்று ஆர்ப்பாட்டம் செய்து தந்தையைக் காவலர்களிடம் ஒப்படைத்து விடுவார். அப்படியானால் அந்தப் பெண் என்னதான் செய்வாள்?
ஒரு முடிவு எடுத்தாள். முதலில் ஒரு கல்லை எடுத்தாள். எடுத்த வேகத்தில் ஆ! அம்மா என்று கத்தி கல்லைக் குவியலில் விட்டெறிந்தாள். ‘ஏதோ கடிச்ச மாதிரி இருந்துச்சு’ என்று சொன்னாள்.
ஏதாவது எறும்பாக இருக்கும் என்றார்கள் கூட்டத்தில். கல்லை எடுத்ததும் விட்டெறிந்ததால், எடுத்த கல் என்ன கல் என்று யாரும் பார்க்கவில்லை. பெரியவர் ஒருவர் சொன்னார்: “அதைப் பற்றி என்ன? மீதம் இருக்கும் கல்லைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் முதலில் எடுத்த கல் கருப்பு கல். கருப்பாக இருந்தால் முதலில் எடுத்த கல் வெள்ளைக் கல்.”
இந்த யோசனையைக் கேட்டதும் செல்வந்தரின் கண் பிதுங்கியது. உள்ளே இருந்தவை இரண்டும் கருப்புக் கற்களே என்று அவர் சொன்னால், அவருடைய திருட்டுத்தனம் தெரிந்துவிடும். பெண் உற்சாகமாய் மீதமிருந்த கருப்புக் கல்லை எடுத்துக் காட்டினாள். கூட்டம் உடனே “அப்படியானால் நீ இவரைத் திருமணம் செய்ய வேண்டியது இல்லை” என்று தீர்ப்பு வழங்கியது.
உணர்வுப் பூர்வமாய்…
தன்னைவிட தன்னிடம் படிக்கும் மாணவர்கள் கற்பனை நிறைந்தவர்கள் என்பதை ஒரு நேர்மையான ஆசிரியர் அறிவார்.
கற்பிப்பதற்கு தான் கடைப்பிடிப்பதைவிட இன்னும் சிறந்த வழி நிச்சயம் இருக்கிறது என்பதையும் அவர் உணர்வார். ‘There is always a better way’ என்கிறது ஆங்கிலப் பழமொழி. இந்த உண்மைகளை உணரும் ஆசிரியர் உ.வே.சா. பாடத்தில் மாணவர்களை வைத்து ஒரு நாடகம் நடத்தி, கடந்த காலத்தை வகுப்பறையில் மீட்டெடுப்பார். பறவைகள் பாடம் நடத்தும்போது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பறவையின் பெயர் சூட்டிக் குழந்தைகளைப் பறவை உலகத்துக்கு அழைத்துச் செல்வார்.
ஒவ்வொரு நாள் வகுப்பறையையும் புத்தம்புதிய வகுப்பறை ஆக்குவார்.
ச.மாடசாமி
நன்றி: புதிய ஆசிரியன், மார்ச் 2011