ஆசிரியர்களுக்கான கல்வி?

பள்ளிகளுக்கு வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்குப் பெரும் பிரச்சனை அவர்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் சேட்டைகள்  செய்யவிடாமல் கூட்டத்தில் தொலைந்து போய்விடாமல் பத்திரமாகப் பாதுகாத்துத் திரும்பக் கொண்டுவந்து விடுவதுதான். நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலானாலும் சரி, புகழ்பெற்ற அருங்காட்சியகங்களினாலும் சரி கூட்டமாக கல்விச் சுற்றுலா வரும் குழந்தைகளை (சீருடையுடனே அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். அப்போதானே தொலைந்து போனாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்) அவர்களுடைய மேய்ப்பர்களான ரெண்டு அல்லது மூணு ஆசிரியர்களுடன் பார்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளில் மிருகங்களின் மீது கற்களைக் குழந்தைகள் எறிவதை ஆசிரியர் பெரும்பாலும் கண்டிப்பதில்லை.

வரலாற்றுச் சின்னங்களின் மீது தங்கள் பெயர்களைக் கிறுக்குவதையும் கூட ஆசிரியர்கள் கண்டுகொள்வதில்லை. வரிசையாகக் குழந்தைகள் போகிறார்களா என்பதைக் கண்காணிப்பதே முக்கிய வேலையாகப் போய்விடுகிறது. அந்த மியூசியத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றி குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வதிலோ வெளி உலகை ரசித்துக் குழந்தைகளோடு சேர்ந்து பரவசம் கொள்வதிலோ ஆசிரியருக்கு பெரிய ஆர்வம் இருப்பதில்லை. (பயலுகளை மேச்சு அடைக்கிறதுக்கே போதும் போதும்னு ஆகிப் போகுது, என்னத்த விளக்கிச் சொல்ல?). அதாவது, குழந்தைகளின் ‘ஒழுங்கு’ பற்றிய கவலையே அவர்களுக்குப் பிரதானமாக ஆகிநிற்கிறது. பிராணிகளைச் சித்திரவதை செய்தல் – வரலாற்றுச் சின்னங்களைச் சிதைத்தல் போன்ற குழந்தைகளின் ஒழுங்குமீறல்களைப் பற்றிக் கவலையில்லை. எது ஒழுங்கு என்பது பற்றி ஆசிரியருக்கு ஓர் அறிவு இருக்கிறது.

இது காலனியக் கல்வி கொடுத்த அறிவாகும். காலனிய ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்யக்கூடிய அறிவையே அவர்கள் பள்ளிகளில் கற்றுத் தந்தார்கள். குழந்தைகளின் சொந்த அறிவு புறக்கணிக்கப் பட்டு வெளியிலிருந்து ஒரு கல்வி வல்லுநர் மூலம் தயாரிக்கப்பட்ட அறிவு புத்தகங்களின் மூலம் பள்ளிகளில் திணிக்கப்பட்டது. பள்ளிகளில் ‘கற்பித்தல்’ என்றால் என்ன என்று இன்றுவரை நீடிக்கிறதோ அதுவே காலனியத்தால் வடிவமைக்கப்பட்ட ஒன்றுதான்… இப்படிப் போகிறது ஒரு புத்தகம். அந்த ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘Political Agenda of Education’. எழுதியவர் கிருஷ்ணகுமார். இவர், கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் இயக்குநராகப் பணியாற்றுகிறார் (Director of NCERT). அதைவிட முக்கியமாக, கல்வி பற்றிய பல நல்ல புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான் படித்த அவரது இன்னொரு புத்தகம் ‘Learning from Conflict’. சமூகத்தில் நடக்கும் சாதி, சமய, இன மோதல்கள் பற்றிப் பள்ளிக்கூடங்களில் பேசத் தடை விதிக்கப்பட்ட போதும் குழந்தைகள் அம்மோதல்களை தாங்கள் வாழும் தெருக்களில் பார்க்கிறார்கள். அவற்றிலிருந்து நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டதை ஒட்டி காங்கிரசாரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இணைந்து  நடத்திய சீக்கியப் படுகொலைகளைக் கண்ணாரக் கண்ட டெல்லிக் குழந்தைகள் அக்கலவர நாட்களில் பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் திறந்தபோது அச்சத்தில் உறைந்தவர்களாகப் பள்ளி சென்றார்கள். பள்ளியில் கலவரம் பற்றி யாரும் பேசக்கூடாதென தடை விதிக்கப் பட்டது. ஆனால் ஆங்கில வகுப்பில் ஒரே வாக்கியத்தில் இரண்டு வினைச் சொற்கள் வரும்படியாக எழுதச் சொல்லிப் பணித்தபோது பல குழந்தைகள் “Two sikh young-men got down from the train and they were immediately killed” என்பது போன்ற வாக்கியங்களையே எழுதினார்களாம். வரலாற்றில் – இதிகாசங்களில் – புராணங்களில் அன்றாட நிகழ்வுகளில் – முரண்பாடுகளில் மோதல்களில் என எல்லாவற்றிலிருந்தும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை பள்ளிகளின் கற்பித்தல் முறைமை கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை அப்புத்தகம் வலியுறுத்தியது.

இதே ஆசிரியரின் இன்னொரு அருமையான புத்தகம் “The Child’s Language and the Teacher – A Handbook”. இப்புத்தகத்தின் சில பகுதிகள் அருணா அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ நடத்தும் ‘விழுது’ என்னும் ஆசிரியருக்கான கையேட்டிலும், பின்னர் நமது புத்தகம் பேசுது இதழிலும் பிரசுரிக்கப் பட்டன. பல ஆசிரியர்களும் சரி, மாணவர்களும் பெற்றோர்களும் சரி மொழி என்பதை பள்ளிக்கூடத்தின் பல சப்ஜெக்ட்டுகளில் ஒன்றாகப் பாவிக்கும் மனோபாவத்துடனே இருக்கிறார்கள். சில மொழிவல்லுநர்கள் வேண்டுமானால் தாய் மொழி அல்லது முதல் மொழி அப்புறம் இரண்டாம் மொழி – இவற்றுக்கிடையிலான வேறுபாடு என்ன என்பது பற்றி விளக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால், மொழி என்பது தொடர்புக்கான வாகனம் மட்டுமல்ல. மொழியால்தான் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பொருட்களோடும் மனிதர்களோடும் தங்களைப் பொருத்திப் பார்க்கிறார்கள், தொடர்பு கொள்கிறார்கள், தொடர்பு படுத்திப் பார்க்கிறார்கள், மொழியால்தான் இவ்வுலகை உணர்கிறார்கள். மொழி என்பதை சூழலோடும் குழந்தைகள் தங்கள் ஐம்புலன்களாலும் தொட்டு உணரும் பொருட்களோடும் பிணைத்துத் தான் கற்றுத்தர முடியும். மொழியைத் தொட்டுப் பார்த்துத்தான் குழந்தைகள் உள் வாங்குகிறார்கள். இப்படி பல விசயங்களை அப்புத்தகம் பேசுகிறது.

இவரைப்போல ஜான் ஹோல்ட் எனப்படும் புகழ்பெற்ற அமெரிக்கக் கல்வியாளர் எழுதியுள்ள ‘All Time Learning’, ‘How Children Fall’, ‘Learning Without School’ போன்ற சில புத்தகங்களும் இத்தாலியைச் சேர்ந்த பார்பியானா பள்ளி மாணவர்கள் எட்டு பேர் சேர்ந்து தங்களைப் பெயிலாக்கி விட்டுக் கவலையில்லாமல் பாஸான மாணவர்களை வைத்து அடுத்த வகுப்பைக் குற்ற உணர்வு ஏதுமின்றி நடத்திக் கொண்டிருக்கும் தங்கள் ஆசிரியருக்கு எழுதும் கடிதமாக வந்துள்ள ‘Letter to Teacher’ போன்ற பல புத்தகங்கள் நம் தமிழ் நாட்டு ஆசிரியத் தோழர்களால் வாசிக்கப்படாமல் வேரிற் பழத்த பலாவாகப் புத்தகக் கடைகளில் காத்துக்கிடக்கின்றன.

சரி, இவையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன என்று சமாதானம் சொல்பவர்களுக்கு ஜான் ஹோல்டின் ஒரு புத்தகம் ‘ஆசிரியரின் டைரி’ என்னும் பெயரில் வந்துள்ளதையும் ‘Letter to Teacher’ புத்தகத்தின் முக்கிய பகுதிகள் ஷாஜகான் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீர்கள்?’ என்னும் பெயரில் வாசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே ‘ஜன்னலில் ஒரு சிறுமி (டோட்டோ சான்)’ கிஜூபாய் பகேகேயின் கற்பித்தல் முயற்சிகளைப் பதிவு செய்துள்ள ‘பகல் கனவு’ என்கிற புத்தகமும் கூட பல்லாயிரக்கணக்கான நம் தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினத்தால் படிக்கப்படாமலே கிடக்கிறது என்பதை எப்படி எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கப் போகிறோம்?

‘ஜன்னலில் ஒரு சிறுமி’ ஜப்பானில் இயங்கும் டோட்டோசான் பள்ளியில் பயின்ற மாணவி ஒருத்தியின் கற்ற அனுபவமாக வந்துள்ளது. திருவண்ணாமலையில் தமுஎச நடத்திய ஒரு கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பல கலை இலக்கியப் பிரமுகர்கள் தங்கள் பள்ளிக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றை டேனிஷ் மிஷன் பள்ளி ‘சிறகிசைத்த காலம்’ என்னும் பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதில் யாருமே கற்பித்தலில் தாங்கள் பெற்ற ஆனந்தம் பற்றிப் பேசவில்லை. பள்ளியில் நண்பர்களோடும் பிரியமான ஆசிரிய ஆசிரியைகளோடும் ஏற்பட்ட அனுபவங்களையே பகிர்ந்து கொண்டார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இவை தவிர, பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த புதிய முயற்சிகளை ‘எனக்குரிய இடம் எங்கே?’ என்கிற புத்தகத்தில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்கள் (அருவி பதிப்பகம்). தாரா பதிப்பகம் ‘வார்த்தையிலிருந்து வாழ்க்கைக்கு’ போன்ற சில நல்ல கள அனுபவங்களோடு கூடிய கற்பித்தல் குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளது. புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதல் தனது இரண்டாவது இதழைக் கல்விச் சிறப்பிதழாக கனமாக வெளியிட்டது. கற்பித்தலின் அரசியல் குறித்த டாக்டர் சுந்தரராமன், டாக்டர் ராமானுஜம், பேராசிரியர் ச. மாடசாமி ஆகியோரின் கட்டுரைகளை அவ்விதழ் தாங்கி வந்தது. பாவ்லோ பிரையரின் ‘விமர்சன விழிப்புணர்வுக்கான கல்வி’ அறிவியல் இயக்கத்தால் தமிழில் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் இரா.நடராசன் அவர்களின் ‘ஆயிஷா’வில் தொடங்கி ‘ரோஸ்’, ‘கணிதத்தின் கதை’ என நீளும் அவரது படைப்புகள் எல்லாமே ஒவ்வொரு ஆசிரியரும் படித்தே ஆகவேண்டிய புத்தகங்களாகும்.

ஆனால், நம் ஆசிரியப் பெருமக்கள் இவற்றையெல்லாம் படிக்காமல் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் பள்ளிக்கூடங்களில்? பிரம்புகளை ஆட்டிக்கொண்டு ‘ஏய் சத்தம்போடாதே’ என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டுவது தான் தமிழக ஆசிரியப் பேரினத்தின் தலை எழுத்தா? தோழமை பொதிந்த உரிமையோடு அவர்களை நாம் விமர்சனம் செய்து நல்வழிப் படுத்த வேண்டியுள்ளது. பலருக்கு ஆர்வம் இருந்தாலும் இந்தப் புத்தகங்களெல்லாம் எங்கே கிடைக்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. நல்ல புத்தகங்களை ஆசிரியர்களை நோக்கி எடுத்துச்செல்வதும் நமது கடமையாக இருக்கிறது. ஆசிரியர்கள் மிச்சமிருக்கும் அன்றாடத்தை மேல் வருமானத்துக்கான உழைப்பில் செலுத்துவதற்குப் பதிலாக கல்வி குறித்த ஆழமான புரிதலுக்காகச் செலவிடுவது காலத்தின் கட்டாயம். ஆசிரியர்களிடம் காலம் கோருகிற இந்தக் குணமாற்றமே தமிழக இந்திய சமூக மாற்றத்துக்கான முன் நிபந்தனையாகும்.

நன்றி: ச, தமிழ்ச்செல்வன், புத்தகம் பேசுது – செப்டம்பர் 2006

Leave a Reply

Your email address will not be published.