நாற்றம் அடிக்கும் வகுப்பறை

விவாதங்களை உற்பத்தி செய்ய முடியாது என்று பலமுறை மாணவர்கள் எனக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

விவாதங்கள் தோன்ற வேண்டும் தளம் வெதுவெதுப்பாகவும், சூழல் இணக்கமுள்ளதாகவும் இருந்தால் அது தோன்றுகிறது.

தயாரிக்கப்பட்ட விவாதங்களோடு வகுப்புக்குப் போய், நேராகவும் சுற்றி வளைத்தும் விவாதப் பொருளை விளக்கிய பிறகு, பிடிபடாமலும் ஒட்டுதல் இல்லாமலும் மாணவர்கள் விலகி நிற்க, முகம் தொங்கி வறண்ட இருமல்களோடு வகுப்பை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்கள் ஒன்றா இரண்டா? ஆசிரியர் அறை வரை பின்னாலேயே வந்து ஒரு மாணவன், ” என்ன சார் வடியா இருக்கீங்க? உடம்புக்கு ஆகலையா? ” என்று கனிவாகக் கேட்டு, துக்கம் அகற்ற, மீண்டும் ஒரு விவாதத்தைத் தயாரிக்க உட்காருவேன்.

விவாதங்கள் சில நேரங்களில் தோன்றுவதுண்டு. ஆனால் நான் நினைத்த தூரம் வரை வராது. புரிதலின்றி, விவாதம் திசை மாறிப் (சில நேரங்களில் திசை கெட்டுப்) போவதுமுண்டு. அல்லது திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக் போலச் சொல்லிக் கொள்ளாமல் விவாதத்தின் மூச்சு நின்று போகும். நின்ற மூச்சுக்குப் பதிலாகக் கொட்டாவி பெருகி வரும்.

ஆனால், எந்த முயற்சியுமின்றி விவாதம் தீயாய்ப் பற்றிக் கொண்ட ஒரு சந்தர்ப்பமும் என் நினைவுக்கு வருகிறது. பற்றிக் கொண்டது மட்டுமன்றி, விவாதம் சுலபமாய் என்னைத் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டது. ம்! ம்! என்று விவாதத்தை முடுக்கும் நிலை மாறி, போதும்! போதும்! என்று கடிவாளத்தை இழுக்க வேண்டியதாயிற்று. சரியான புரிதலோடு பொருத்தமானவர்கள் நடத்திய விவாதம் அது.

மதுரையில் 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு பொது மையத்தில் கூடி இருந்தார்கள். அவர்களோடு விவாதிக்க ஒரு கவிதையோடும், சில கதைகளோடும் போயிருந்தேன். கதைகளைச் சொல்ல நேரமில்லை. கவிதையே, நேரத்தைப் பூராவும் வாரி எடுத்துக் கொண்டது.

இதோ – நான் சொன்ன புகழேந்தியின் கவிதை.

“சார்”
ஒருவிரல் தூக்கியபடி எழுந்தான்
அனுப்பினேன்.
“சார்”
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.”

(பழ. புகழேந்தி – “கரும்பலகையில் எழுதாதவை”)

கவிதையை எழுதிப் போடவில்லை. ஒருமுறைக்கு இருமுறை உரக்கச் சொன்னேன். “இது ஓர் ஆரம்பப் பள்ளியின் வகுப்பறை” என்று கவிதைக் களம் பற்றி ஒற்றை வரி அறிமுகம் மட்டும் செய்தேன். மாணவர்களைப் பேச அழைத்தேன்.

கவிதையின் மையச் சொல்லாக ‘அதிகாரம்’ என்ற வார்த்தை அமைந்துவிட்டது. அந்த வார்த்தையைப் புரட்டிப் புரட்டிப் போட்டார்கள் மாணவர்கள். ‘எந்த அதிகாரமும் இல்லாத பதவி’ என்று ஆசிரியப் பணி குறித்து அடிக்கடி சொல்லிக் கொள்வோம். அந்த அரங்கில் அதைப் பற்றி மூச்சுவிட முடியவில்லை. எங்கள் அதிகாரங்களைப் பட்டியலிட மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

“லேட்டா வந்தா வெளிய நிறுத்தி
ஏற இறங்கப் பாக்குற அதிகாரம்”
“நம்ம சம்மதம் இல்லாமலேயே ‘இந்தாப்பா!
இத வாசி’ன்னு கட்டளையிடும் அதிகாரம்!”
“படிச்சிக்கிட்டிருக்கப்பவே ‘போதும்!
உக்காரு’ன்னு வாசிப்பை நிறுத்துற அதிகாரம்”
“கெட் அவுட்! சொல்ற அதிகாரம்!”
“டெஸ்ட் பேப்பர்கள உடனே தராம
அவருக்கு இஷ்டப்பட்ட நேரத்தில
திருத்தித் தர்ற அதிகாரம்!”
“இது தமிழ் கிளாஸ் இல்ல. கெமிஸ்டிரி
லேப்.  ஞாபகம் இருக்கட்டும்’னு
மிரட்டுற அதிகாரம்!”
“லேப்’ல பிராக்டிகல் நோட்டை
விட்டெறியுற அதிகாரம்”
“பிரின்சிபால்கிட்ட சொல்லவான்னு
பயமுறுத்துற அதிகாரம்”

மாணவர்கள் தொடர்ந்து எழுந்தார்கள். “ஒவ்வொருத்தரா….ஒவ்வொருத்தரா…” என்று மிச்சமிருந்த கொஞ்ச அதிகாரத்தைப் பிரயோகித்துக் கொண்டிருந்தேன் நான்.

அடுத்து அவர்கள், இறுகப் பிடித்த வார்த்தை ‘நாற்றம்!’ மூத்திர நாற்றத்துக்குள் அவர்கள் இறங்கிவிடக் கூடும் என்று பயந்த ஓர் ஆசிரியர் ” நாற்றம் என்பது ஒரு குறியீட்டுச் சொல். அது அவமரியாதையைக் குறிக்கலாம். ஒழுங்கு சிதைவதைக் குறிக்கலாம். இன்னும்…” என்று விவரித்து மாணவர்களைக் குழப்பினார். அவர் நோக்கம் பலித்தது. மாணவர்கள் குறியீடுகளுக்குள் சிக்கித் தடுமாற ஆரம்பித்தார்கள். இருந்தாலும், ஒரு மாணவன் அந்த சாதுர்ய வலையில் சிக்கவில்லை. பக்கத்தில் செக்கானூரணிக்காரன்!

“எங்க சின்ன வயசு ஞாபகம் வருது சார்! இப்படித்தான் சார் அடிக்கடி வகுப்பில நடந்திரும். ‘தங்கராஜ் சார்’ ஷேவ் பண்ணுன அன்னைக்கி ‘உர்’னு இருப்பார். கேக்கப் பயமா இருக்கும். ‘கருப்பையா சார்’ ஆயில் பாத் எடுத்துட்டு வந்தார்னா தலைவிரி கோலமா பாகவதர் மாதிரி இருப்பார். அவரப் பாக்கவே பயமா இருக்கும். அதுமாதிரி நேரங்கள்ல கேக்கப் பயந்துகிட்டு டவுசர்லாம் நனைஞ்சு போகும் சார்!”

இதை கேட்டு, அரங்கு அலறியது என்று சொல்லத் தேவையில்லை.

இந்தக் கட்டத்தில், இத்தகைய விவாத அரங்கின் சிறப்புத் தன்மை பற்றிச் சொல்ல வேண்டும். தாங்கள் பயிலும் கல்லூரி என்றால் மாணவர்களைக் கவனிக்கப் பல கண்கள் இருக்கும். இது வெளியிடம். கூட வந்த ஓரிரு கண்களும் டீ குடிக்கப் போய்விடும். அதனால் மாணவர்களுக்குக் கூடுதல் சுதந்திரம். எனக்கும் இது வெளிக் கல்லூரி. பொது இடம். என் கல்லூரியில் நான் வெளிப்படுத்தும் தொட்டால் சிணுங்கி சிடுமூஞ்சித்தனம் இங்கு ஆகாது. ஆகாது என்ன இங்கே நடக்காது. என்வே ‘கட்டாயப் பெருந்தன்மையோடு’ நான் விவாதத்தைக் கேட்பேன். மீறல்கள் காரணமாக, விவாதத்தில் சுவாரஸ்யமும் வெடிச்சிரிப்பும் புறப்படும் போதெல்லாம் நானும் ‘கட்டாயப் பெருந்தன்மையோடு’ சிரித்து வைப்பேன்.

ஆசிரியர் மாணவர் உறவு குறித்து சில நுட்பமான உரையாடல்களும் அந்த அரங்கில் கேட்டன. “இந்த சார் நல்லவர். மாணவனை ஒருமுறையாவது அனுமதிக்கிறார். ஆனா அவருமே  கொஞ்ச தூரம் போயிட்டு நிறுத்திக்கிறார். முழுமையா – முழு மனசோட – எந்தத் தயக்கமும் இல்லாம மாணவர்களை நேசித்த ஆசிரியர் ஒருத்தர்கூட கிடையாது.”

” எங்க மேடம் ஒருத்தங்க – அவ்வளவு பொறுமையா இருப்பாங்க. ஆனா, என்ன நெனைப்பாங்களோ – ‘நாம மட்டுந்தான் இவ்வளவு பொறுமையா இருக்கோம்’னு நெனைப்பாங்களோ  திடீர்னு ஒருநான் சீறி விழுவாங்க!”

“இந்த ஆசிரியர் அதிகாரத்தைச் செலுத்தினாலும் பிறகு சுயவிமர்சனமா அதுக்காக வருத்தப்படுறாரே! தங்கமானவர்!”

இடையில் ஓர் ஆசிரியக் குரல்:

“மனிதாபிமானம் இருக்குற இடத்தில் அகம்பாவம் வந்தாலும் நீடிச்சு நிக்காது. ஓடிப் போயிரும்பா”

விவாதத்தில் சில கேள்விகளும் பிறந்தன. பதிலுக்குப் பதில் பஞ்ச் டயலாக்குகளும் எகிறின.

“ஒவ்வொருத்தனையா போக அனுமதிச்சா, வகுப்பு கேலிக் கூத்தா ஆகிப் போகாதா? வாத்தியார் ஒழுங்குபடுத்த வேண்டாமா? அதட்டுனது தப்பா? ”

“விட்டா கேலிக் கூத்து! அதிகாரம் பண்ணி அடக்குனா மூத்திர நாத்தம்! இடையில் ஒரு மத்தியப் பாதை வேணும்!”

“சுதந்திரத்தையும் புரிய வச்சுக் கொடுக்கணும்!”

“சுதந்திரங்கிறது கொடுக்கிறது இல்ல; பகிர்ந்து கொள்றது!”

ஏராளமாய் மாணவர்கள் பேசினார்கள். மிகையான உற்சாகத்தில், மாணவர்கள் சிலர் வார்த்தைக் கட்டுப்பாடு இழந்து ஆசிரியர்களைக் குத்தும் போதெல்லாம் ஆசிரியர்களை உற்றுப் பார்த்தேன். ஒருவர் முகமும் வாடிப் போகவில்லை. மேடையில் இருந்த ஆசிரியர்கள் “ம்! சொல்லுப்பா!” , “பயப்படாம சொல்லு!” “சும்மா சொல்லு! நாங்க ஒண்ணும் நெனைச்சிக்கிட மாட்டோம்!” என்று ஊக்குவித்தபடி இருந்தார்கள்.

மாணவர்களோடு நான் விவாதித்த பல மேடைகளில் இந்த விவாதப் பண்பாட்டை ஆசிரியர்களிடம் பார்த்து விட்டேன். வேறு மேடைகளில் பார்க்க அரிதான பண்பாடு இது.

இருப்பினும், இன்னும் நம் வகுப்பறைகள், கேள்விகளற்று விவாதங்களற்று ஒடுங்கிக் கிடப்பது ஒரு புதிர்தானே!

தொடக்கத்தில் ஆசிரியர் பங்கேற்பு; போகப் போக மாணவர் பங்கேற்பு என்பதுதானே நகரும் வகுப்பறைக்கு – வளரும் வகுப்பறைக்கு அழகு.

இல்லாவிட்டால் தேக்கம்தானே!

தேக்கம் என்பது… படிப்படியாக நாற்றம் தானே!

ச.மாடசாமி

நன்றி: புத்தகம் பேசுது – நவம்பர் 2006 இதழ்

Leave a Reply

Your email address will not be published.