Tag Archives: செம்மலர்

சமச்சீர் பாடப் புத்தகங்கள் – ஒரு பார்வை

ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது. வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது. சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும் கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை. மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது. மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடைமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக் கொண்டிருந்து ஆளும் வர்க்கம்.  அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ‘சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது. அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ‘சாசன இயக்கம்’ தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டகளையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக் கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.

Continue reading

அகங்காரத் தமிழ்

எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் – சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த பிரச்சினைகளில் ஒன்று.

பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!

தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!

பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் – ஓர் அகங்காரத் தமிழ்..!

தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள் பிறக்கின்றன.  கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி நிறுத்தும் தமிழ் எது? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம் செய்யும் தமிழ் எது?

உலகின் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும் ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர் அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

Continue reading