எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் – சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த பிரச்சினைகளில் ஒன்று.
பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!
தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!
பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் – ஓர் அகங்காரத் தமிழ்..!
தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள் பிறக்கின்றன. கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி நிறுத்தும் தமிழ் எது? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம் செய்யும் தமிழ் எது?
உலகின் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும் ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர் அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?