(அறிவொளி இயக்க அனுபவங்கள் குறித்து ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் எழுதிய “இருளும் ஒளியும்” புத்தகத்திற்கு ச.மாடசாமி அவர்கள் எழுதிய அணிந்துரை)
கண்கள் கூர்மை அடைந்திருக்கின்றன. மொழிக்குள் ஒளிந்து கிடக்கும் அதிகாரம் கர்வம், காமம், பசப்பு போன்ற அமுங்குணிக்கள்ளர்களைக் கண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுகின்றன. மொழியும் பதிலுக்குப் பதுங்கத்தான் செய்கிறது. கள்ளர்களை இன்னும் ரகசியமாய் மறைக்கிறது. மனப்பகிர்வும் சரி – உறவாடல்களும் சரி – திட்டமிட்ட, தயாரிக்கப்பட்ட மொழியில் நடக்கிறது. திட்டமிட்ட மொழியில் திரைகள் அதிகம். ஆனால், திட்டமிட்டது தெரியாதபடி வார்த்தைகளில் ஒரு அப்பாவித் தோற்றம்! யப்பாடி! மொழியை இயற்கையாக முன்வைக்கத் தேவைப்படும் செயற்கையான உழைப்பில், எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் மூச்சு வாங்குகிறது. வாசிப்பு கனக்கிறது.
அறிவொளி அனுபவப் பகிர்வான ‘இருளும் ஒளியும்’ மொழி உண்டாக்கும் நெருக்கடிகளிலும், இடுமுடுக்குகளிலும் சிக்கிக் கொள்ளாமல் வந்திருப்பது என் முதல் சந்தோசஷம். இதில் உள்ள மொழி ‘திட்டமிடாத மொழி’ என்பது மட்டுமல்ல; அறிவொளிக் காலத்தில் மறைத்து மறைத்து, ரகசியக் குரல்களில் நாங்கள் பேசியவற்றை எல்லாம் ‘அவுத்து விடுகிற’ (தமிழ்ச் செல்வனின் பாதிப்பு) வெளிப்படை மொழியாகவும் இருக்கிறது.
“தலையில் சிலேட்டுகளுடன் ஒத்தையடிப் பாதையில் லொங்கு லொங்கு என்று ஓடியபடியே எங்கள் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தன” என்று தமிழ்ச்செல்வன் எழுதிய வரிகளில், அறிவொளிப் பயணத்தின் சுகமும், சுமையும் நிமிட நேரத்தில் உயிர் பெற்று எழுந்துவிட்டன. ஒரே சமயத்தில் புன்சிரிப்பையும், கண்ணில் ஞாபக ஈரத்தையும் கொண்டு வந்து சேர்த்த வரிகள் இவை.