பதிப்பகம்

வெளிவந்துள்ள நூல்கள்:

1. எனக்குரிய இடம் எங்கே? (கல்விக்கூடச் சிந்தனைகள்)

eie

கல்விச் சிந்தனைகளை உள்ளடக்கிய நூல். எளிய திறன்களும், உண்மையான ஆர்வமும் கொண்ட கிராமப்புறக் கல்லூரி மாணவர்களிடம் ஓர் ஆசிரியர் கற்ற உயிரோட்டமான அனுபவங்கள்.

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது. காண்பதற்குக் கண்கள் வேண்டும்.

“இந்த புத்தகம் … கல்விக்கூட அனுபவப் பகிர்வு கனவுகள், சந்தோஷங்களின் பதிவு மேகங்களைத் தள்ளிவிட்டுச் சின்னச் சின்ன நட்சத்திரங்களைக் காணும் முயற்சி.”

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.60.00

பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு – ஜூலை 2010


2. பாம்பாட்டிச் சித்தர்

paampaattichiththar

ஆய்வு நூல். சித்தர் பண்பாட்டின் தனிச்சிறப்பு குறித்த ஆய்வுடன் நூல் தொடங்குகிறது. பின்னர் விரிவான ஆய்வுக்குப் பாம்பாட்டிச் சித்தரைத் தேர்வு செய்கிறது. பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் சிந்தனையும், பாடல்களின் கவித்துவமும் ஆய்வின் கருப்பொருள்களாகும்.

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.30.00

பதிப்பு: மூன்றாம் பதிப்பு (அச்சில்)


3. ஆளுக்கொரு கிணறு (மொழி, பண்பாடு, கல்வி குறித்த கட்டுரைகள்)

Aalukkoru Kinaru

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:

… எதனுள்ளும் ஒரு பயத்தை நுழைத்துவிட இடமிருக்கிறது.

எவனோ ஒருவன் வைத்த பயத்தை எடுக்க ஆயிரக்கணக்கானோர் பேச வேண்டியிருக்கிறது; எழுத வேண்டியிருக்கிறது.

கட்டுக்குள் வைக்கவும், பிழைப்பு நடத்தவும் பயம் உண்டாக்குவது தேவையாக இருக்கிறது.

பயத்தோடு,  இது நமது; அது அடுத்தது என வேறுபடுத்திக் குரோதத்தையும் சேர்த்து வளர்த்தால் அரசு அதிகாரத்தைப் பிடிக்க முடிகிறது.

பயம், ஊடக வியாபாரிகளுக்கு (பத்திரிகை, டிவி, சினிமா) மூலப்பொருளாகித் திகில் ரசனைகளின் வழி லாபமும் தருகிறது.

பயம் கைகளைக் கட்டுகிறது; வாய்களைப் பூட்டுகிறது.

இயல்பான –  மனந்திறந்த  –  பயமற்ற உரையாடல்களின் வழி கட்டுக்களின் பிடி தளரலாம்; வாய்கள் சுதந்திரம் பெறலாம்.

அப்படியொரு உரையாடலை நடத்தும் முயற்சி – இந்நூல்.

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.50.00

பதிப்பு: முதல் பதிப்பு – நவம்பர் 2010


4. சொலவடைகளும்  சொன்னவர்களும்

சொலவடையும் சொன்னவர்களும்

உணர்வுகளை வெளிப்படுத்த –
யோசனை சொல்ல – ஆறுதல் தர –
அபிப்பிராயங்களை முன்வைக்க –
விமர்சனம் செய்து எச்சரிக்க –
அறிவுரை வழி நெறிப்படுத்த –
நியாய அநியாயம் குறித்து உரையாட –
பிரச்சினையான நேரத்தில் முடிவெடுக்க
சொலவடையைப் போலப் பயன்படக்கூடிய
வாய்மொழி இலக்கிய வகை
வேறு எதுவும் இல்லை.

மேலும் வடிகால் வார்த்தைகள்
சொலவடைகளில் நிரம்பிக் கிடக்கின்றன.
நெஞ்செரிச்சலை உண்டாக்கும்
கோபம், குமுறல், சலிப்பு போன்ற
உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கச்
சொலவடைகள் கைகொடுக்கின்றன.

  • சுத்தத் துணியும் இல்ல.
    நக்கத் தவிடும் இல்ல.
  • ஒங்க ஒறவுல வேகுறதுக்கு
    ஒரு கட்டு வெறகுல வேகலாம் !
  • பொறந்த எடத்துச் சேலையும் வேணாம்
    புகுந்த எடத்துத் தாலியும் வேணாம்.

– என்ற சொலவடைகளின் வழியே
வெளித் தள்ளப்படும்
மனச்சுமைகளை உணர முடியும்.

திறந்து வைக்காமல் இந்தக் காயங்களை
மூடியே வைத்திருந்தால் குணமாவது எப்போது? …..

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.200.00

பக்கங்கள் : 342

பதிப்பு: முதல் பதிப்பு – டிசம்பர் 2010


வீட்டுக் கல்விக்கு (Home Schooling) உதவும் பின்வரும் நூல்கள் “அருவி மாலை” வெளியீடு என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.

1. நாய் வால் (சங்கிலிக் கதைகள்)

naaivaal

குழந்தைகளுக்கு வாய் மொழியாகச் சொல்லத்தக்க கதைகள். கதைகளில் சம்பவங்கள் (சங்கிலிக்கதைகள்) சங்கிலியாகத் தொடரும். குழந்தைகளின் வரிசை அறியும் திறனை (sequential skills) வளப்படுத்தும் கதைகள்.

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:

வீட்டுக் கல்வியை (Home Schooling) தொடங்குவதற்கு மிகவும் பொருத்தமான முதல் நூல் இது.

மூன்று முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகளுக்குச் சொல்லக் கூடிய கதைகள் இவை.

ஒரு நாளைக்கு ஒரு கதை என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், அதைத் தீர்மானிக்கும் முடிவு உங்களிடமும் உங்கள் குழந்தைகளிடமும் மட்டுமே உள்ளது.

வாய்மொழியாகச் சொல்ல வேண்டிய கதைகள் இவை. கதை சொல்லும்போது புத்தகம் குழந்தையின் மடியில் இருக்கட்டும். படங்களை அவர்கள் பார்க்கட்டும். ஆனால், வாசி! வாசி! என்று கதைகளை வாசிக்கச் சொல்லிக் குழந்தைகளைத் துன்புறுத்த வேண்டாம்.

கதைகளில் உள்ளபடி ஓசை எழுப்பி, அசைவுகளை உண்டாக்கி (நடத்தல், குதித்தல் போன்றவை) கதை சொல்லப் பழகுங்கள்.

குழந்தைகளின் பரவச உலகம் இது. நாய் பேசுமா? பல்லி நடக்குமா? – என்பவை போன்ற அறிவுலகக் கேள்விகளை இங்கு கொண்டு வர வேண்டாம்.

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.22.00

பதிப்பு: முதல் பதிப்பு


2. முயல்குட்டியும் போலீசுகாரரும் (ஓசைக் கதைகள்)

mkpk

குழந்தைகளுக்கான ஓசைக் கதைகள். பிள்ளைகளின் கவனிப்புத்திறனை (ஓசைக் கதைகள்) உறுதிப்படுத்தும் கதைகள்.

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:

வீட்டுக் கல்வி (Home Schooling) வரிசையில் இது அருவியின் இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் நாய்வால்!

பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாத தாய், தன் குழந்தை ABCD சொல்லத் தொடங்கும் போதே, அதன் கல்வி உலகத்தில் இருந்து விலகுகிறாள்; வெளியேறுகிறாள்.

அம்மா அப்பாக்களையும், பாட்டி தாத்தாக்களையும் விலக்கி விலக்கியே (exclude) கல்வி உலக அகந்தை வளர்கிறது. விலக்கப்படும் பட்டியலில் இன்னும் பல இருக்கின்றன. குழந்தையின் விருப்பம், சுதந்திரம், உற்சாகம்… போன்றவை.

இதன் காரணமாய் அஸ்திவாரமற்ற கல்வியே குழந்தைகள் பலர் பெறுகின்றனர். இவர்கள் வகுப்பறைகளுக்குப் பொருந்தாமல் போகின்றனர்; விடுபடுகின்றனர்; தோற்றுப் போகின்றனர்.

குழந்தையின் கல்விக்கு வீடும், இயற்கையுமே உறுதியான அஸ்திவாரங்கள். நிச்சயமாய்… பள்ளிக்கூடம் அல்ல.

3 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாய்மொழியாக நாம் சொல்லத் தகுந்த கதைகள் இவை. குழந்தைகளுக்குக் கல்வியில் ஆர்வத்தையும், புத்தகத்தின் மீது ஈடுபாட்டையும் உண்டாக்குவதற்குத் தொடங்கப்பட்ட முயற்சி இது.

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.22.00

பதிப்பு: முதல் பதிப்பு


3. சுண்டெலிக் கதைகள்

sundeli

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:

சுண்டெலிக் கதைகள் வீட்டுக் கல்வி (Home Schooling) வரிசையில் மூன்றாவது நூல்.

பாடச் சுமையால் சோர்ந்து போன குழந்தைகளுக்கு மாற்று டியூசன் அல்ல.

கதையும் விளையாட்டுமே மாற்றுகள். இக்கதைகள் பிள்ளைகளிடம் சொல்வதற்கானவை; வாசிப்பதற்கானவை அல்ல.

சுண்டெலி எளிய உயிரின் அடையாளம். சாதாரண மனிதனின் உருவகம். சிறிய மனிதர்கள் பெரிய முயற்சிகளில் ஈடுபடும்போது ‘எலிக்கு எதுக்கு இன்ஸ்பெக்டர் வேலை’ என்று கிண்டல் செய்கிறது தமிழ்ச் சொலவடை.

வெற்றி பெறுவதற்காகச் சில நேரங்களில் எலிகள் ஏமாற்றுவது போலத் தெரியும். அச்சுறுத்தல், கண்காணித்தல், கட்டாயப்படுத்தல், திணித்தல், அதிகாரம் செலுத்தல், பலத்தைக் காட்டுதல் போன்றவை இருக்கும் வரை ஏமாற்றுதலும் இருக்கும். இருக்க வேண்டும்.

தலை ஆட்டுவதை வைத்துக் குழந்தைகளை உங்கள் வழிக்குக் கொண்டு வந்து விட்டதாகக் கற்பனை செய்துவிடக் கூடாது. தலை ஆட்டுவதும் ஏமாற்றுவதற்கான அடையாளமே.

ஆனால் – ஏமாற்றுதல் என்பது சரியான வார்த்தை அல்ல. தப்பித்தல் என்று சொல்வதுதான் சரி.

யாரும் தப்பிக்க விரும்புவார்களா? அல்லது அகப்பட்டுக் கொள்ள விரும்புவார்களா?

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.22.00

பதிப்பு: முதல் பதிப்பு


4. முதலைக் கதைகள்

mudhalai

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:

அருவியின் வீட்டுக் கல்வி (Home Schooling) வரிசையில் நான்காவது கதைப் புத்தகம். குழந்தைகள் ஆச்சர்யத்தோடும் விருப்பத்தோடும் இணைந்து விடக் கூடிய விலங்குகள் உலகத்துக்கு இக்கதைகள் கூட்டிச் செல்கின்றன.

வீட்டையும், வீதியையும், ஊரையும் நாம் அவ்வப்போது மற்ந்து விடவும் இத்தகைய கதைகள் அவசியம்.

நம்முடைய அறிவுலகத்தில் முதலை ஒரு வஞ்சகமான – முரட்டுத்தனமான ஆபத்தை விளைவிக்கக் கூடிய விலங்கு.

பஞ்சதந்திரக் கதை போன்ற அறிவாளிக் கதைக் களத்திலும் இந்த அடையாளம் தொடர்கிறது. மனைவிக்காக குரங்கிடம் ஈரல் கேட்ட வஞ்சக முதலையின் கதை நாம் அறிந்ததுதான். கடவுள் யானையின் காலைக் கவ்வி அதனால் அடிபட்டுச் செத்த புராண முதலையையும் நாம் அறிவோம்.

ஆனால் ஆதிவாசி மக்களின் கற்பனைக் கதைக் களத்தில் முதலையின் இந்த அடையாளங்கள் மாறிப் போகின்றன.

முதலை அப்பாவியாய் – அசடாய் – பொறுப்புள்ள குடும்பத் தலைவனாய் உலா வருவதைக் காண்கிறோம்.

கதை உலகில் இது எத்தனை புரட்சி! மன உலகில் இது எப்படிப்பட்ட அற்புதம்!

மனிதர்களையும், பிற உயிர்களையும் நல்லது கெட்டது என்று பாகுபடுத்தியே குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம். நல்லது கெட்டது என்று பிரித்துப் பிரித்து வைத்து விட்டால் எதைப் புரிந்து கொள்வது? யாரைப் புரிந்து கொள்வது?

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.22.00

பதிப்பு: முதல் பதிப்பு