பொய்களுக்கும் ஓர் இடம்

”சார்! நாளைக்கு எனக்கு உடம்பு சரியில்ல!” என்று காமெடியாகச் சொன்னார் ஜெரால்டு. இதென்ன? கால வழுவமைதியா! என்று யோசித்தேன். சிரித்துக்கொண்டே ஒரு தாளை என்முன் நீட்டினார். அது மறுநாளுக்கான லீவ் லெட்டர். “As I am suffering from…” என அவர் தந்து விட்டுச் சென்ற தாள் முனகியது.

இவர்தான் கொஞ்ச நாள்களுக்கு முன் பி.எஸ்சி மாணவன் சுடலைமுத்துவைக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சியவர். ”வகுப்புக்குப் புத்தகம் கொண்டு வரமாட்டேங்கிறான். கேட்டா தொலஞ்சி போச்சுங்கிறான். பாடாவதிப் பய. பேசுறதெல்லாம் பொய்!” என்று பொரிந்து தள்ளியவர்.

ஆசிரியர்கள் பொய் சொல்ல ஓர் அனுமதி இருக்கிறது. As I am suffering from…. என்று எழுதப்பட்ட லீவ் லெட்டர்கள் எத்தனை எத்தனை?

இது பச்சைப் பொய் ரகம் அல்ல. இது அலுவலகப் பொய். நான் பணியில் சேர்ந்த புதிதில் PF கடன் பெற சில குறிப்பிட்ட காரணங்களைத் தான் சொல்ல வேண்டும். அதில் ஒன்று பிள்ளைகளுக்குக் காது குத்துவது. வருடாவருடம் PF விண்ணப்பக் கடிதத்தில் நான் பிள்ளைகளுக்குக் காது குத்திக் கொண்டிருந்தேன். (இன்னும் இந்த நடைமுறைதான் இருக்கிறதா என்று தெரியவில்லை)

இன்றும் சில மாநிலங்களில் ஒரு நடைமுறை இருக்கிறது. ஏப்ரல் பிறந்துவிட்டால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ‘தங்களுக்குக் காது சரியாகக் கேட்காது’ என்று மருத்துவர் சான்றிதழ் வாங்கிக் கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கிறார்கள். ஒருவர் இருவர் அல்லர். ஆயிரக் கணக்கானோர். காரணம் என்ன? உடல் குறைபாடு உள்ளவர்களைப் பணிமாற்றல் – Transfer செய்யக் கூடாது என்ற விதி அங்கு இருக்கிறது. (நம் மாநிலத்தில் என்ன நிலைமை?)

இப்படி நாம் சொல்கிற பொய்கள் எல்லாம் அலுவலகப் பொய்கள். சொந்த வாழ்க்கையில் மிக நேர்மையானவரும் அலுவலகப் பொய் கூறத் தயங்குவதில்லை. இந்தப் பொய்களைப் பெரும்பாலும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. கல்லூரி ஊழியர் ஒருவர் மருத்துவ விடுப்பு எடுத்துத் திருச்செந்தூருக்குப் பாத யாத்திரை சென்றதற்காக அந்தக் கல்லூரி நிர்வாகம் அவருக்கு 14 ஆண்டுகள் இன்கிரிமெண்ட் கட் வழங்கிய ஒரு சீரியஸான சம்பவம் மட்டும் என் ஞாபகத்துக்கு வருகிறது.(பின்னர் அது ரத்தானது).

விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், அலுவலகப் பொய் சொல்ல நமக்கு அனுமதியும் இருக்கிறது; சுதந்திரமும் இருக்கிறது.

புத்தகம் கொண்டுவராமல் வருவது, தாமதமாக வருவது, வகுப்புக்கு மட்டம் போடுவது போன்ற சிறு தவறுகளுக்கு மாணவர்கள் சொல்லும் ‘வகுப்பறைப் பொய்களுக்கும்’ அனுமதி தந்தால் என்ன? அந்தப் பொய்களில் உள்ள கற்பனையை ரசித்தால்தான் என்ன?…….

பணிஓய்வுக்குப் பின் எனக்குக் கிடைத்த புதிய மேடை – பள்ளி ஆசிரியர் மேடை. பள்ளி ஆசிரியர்கள் கவனிக்கிறார்கள்; ஒப்புக்கொள்கிறார்கள்; மறுக்கிறார்கள்;
என்னைத் திருத்துகிறார்கள்.

ஒரு விவாதத்தின் போது ஆசிரியை கற்பகவள்ளி சொன்னார். ”எங்கள் பள்ளி வகுப்பறை எல்லாம் ஒடுக்கமா-நெரிசலா இருக்கு. விசாலமான வகுப்பறை இருந்தாத்தான் நீங்க சொல்றதையெல்லாம் செய்ய முடியும்”.

ராத்திரி பூரா உட்கார்ந்து தயாரித்து வந்து கல்வி உரையாற்றினாலும் ஆசிரியர் போதாமை, வகுப்பறை போதாமை போன்ற பௌதீகப் பிரச்சினைகள் முன்னால் வந்து வந்து நிற்கும். அது யதார்த்தம்; அது உண்மை. ஆனால் தீர்வு என் கையில் கிடையாது. எனவே விவாதத்தைத் தத்துவார்த்த தளத்துக்கே நகர்த்துவேன்.

”சின்ன வகுப்பறை பெரிய பிரச்சினை அல்ல; நம் இறுக்கம் காரணமாகச் சுருங்கிக் கிடக்கும் வகுப்பறைதான் உண்மையான பிரச்சினை” என்றேன்.

விவாத அரங்கு அமைதி காத்தது.

“சிரிப்புக்கு ஒரு இடம் இருந்தால் வகுப்பறை விசாலமாகும்” என்றேன். பலர் உண்மையை ஒப்புக்கொண்டு சிரித்தார்கள். தமாஷாகப் பாடம் நடத்துவது பற்றி மட்டும் அவர்கள் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகச் சற்று விளக்கினேன். ’கவனம் சிதறுவது, பாடத்தை மறப்பது போன்ற சிறு சிறு தவறுகளுக்கும் கோபம் கொண்டு சுருங்கிப் போகாமல் சிரிக்கும் வகுப்பறை’ என்றேன்… அப்போதும் அவர்களின் சிரிப்பு தொடர்ந்தது.

கல்லூரிப் பணியின் போதே அடிக்கடி சொல்ல நினைத்து, கேட்க யாரும் இல்லாததால் சும்மா கிட என அடைத்து வைத்த எண்ணத்தை வெளிப்படுத்த இது தருணம் எனக் கருதினேன்.

“வகுப்பறையில் பொய்களுக்கும் ஓர் இடம் வேண்டும்” என்றேன். இப்போது புன்னகைகள் மர்மப் புன்னகைகள் ஆயின. அங்கீகாரமா? மறுப்பா? புன்னகையின் பொருள் அறிவது கடினம். நானே விளக்கினேன். அலுவலகப் பொய் கூற நமக்கு உள்ள அனுமதி பற்றிப் பேசினேன். ”விதிகள் வறட்டுத்தனமா இருந்தா  பொய்கள்தான் வழியாக இருக்கும்” என்றார்கள். நான் மறுக்கவில்லை. அடுத்து வகுப்பறைப் பொய் பற்றிச் சொன்னேன். ”நாமே பொய் சொல்லத் தூண்டுவதா?” என்பது ஒருவரின் வாதம். ”தூண்ட வேண்டாம்! ஏராளமாக அவர்களிடம் ஸ்டாக் இருக்கு” என்பது இன்னொருவரின் கிண்டல். ”வகுப்பறைப் பொய்யை வைத்து மாணவரின் நேர்மையை அளக்க முடியாது. பல பொய்கள் சிரித்துக் கழிக்க வேண்டியவை” என்றேன் நான்.

உரைக்கான அங்கீகாரம் குறைந்துகொண்டே வந்தது. இருந்தபோதும் நான் முரட்டுப் பிடிவாதமாய் அடுத்த கட்டத்துக்கு விவாதத்தை நகர்த்தினேன்.

“சிறு சிறு அத்துமீறல்களுக்கும் வகுப்பறையில் இடம் வேண்டும்” என்றேன். பேச அனுமதி கேட்டுக் கைகள் பல உயர்ந்தன. பேசாதவர்களும் “இவருக்கென்ன! சொல்லீட்டுப் போயிருவாரு!” என்று மனசுக்குள் பேசியிருக்க வேண்டும்.

இத்தகைய நேரங்களில் சிலர் அதிதீவிரத்தின் எல்லையில் நின்று பேசுவார்கள். ’விட்டால்’ என்று ஆரம்பித்து சில நடக்காத விசயங்களைச் சொல்வார்கள்.

“தலையில ஏறி மோளுவான்”
“டீச்சர் சேலயப் பிடிச்சு இழுப்பான்”
“பாம்பப் பிடிச்சு வகுப்புக்குக் கொண்டு வருவான்” — என்பவை சில.

“நீங்கள் தவறுகளை ஆதரிப்பவரா?” என்று ஓர் ஆசிரியர் என்னிடம் கேள்வி கேட்டார். குறுக்கு வழியில் என்னைப் புரிந்து கொள்ளப் பார்த்தார். அது நடக்காது.

நான் நீண்ட பாதையில் நின்று பேசினேன். ”தவற்றின் அளவுக்கும் கோபத்தின் அளவுக்கும் ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். பாடம் நடத்தும் போது கடைசிப் பெஞ்சு மாணவன் சன்னமாகத் தாளம் போட்டான் என்பதற்காக ஆசிரியர் ஒருவர் அவனை அடித்துக் காயப்படுத்தினார். இது சமீபத்தில் நடந்த சம்பவம். இதுபோல ஆயிரம் இருக்கு. அத்துமீறல் சில நேரங்களில் உரிமையின் அடையாளம்; அது  குழந்தைகள் வெளிப்படுவதற்கான தவிப்பும் கூட. பள்ளிகள் அதை ஒழுங்கீனம் என்கின்றன. ஒழுங்கீனம் என்ற வார்த்தைக்குள் புற்றுப் பாம்பாய் அகந்தையும் ஆதிக்கமும் சுருண்டு கிடக்கின்றன. வகுப்பறையை ஒடுக்கும் பாம்புகள்….”

இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதே — வீட்டில் சிறிய அவமதிப்பு போலத் தோன்றினாலும், உடனே கோபங்கொண்டு சாப்பிடாமல் கல்லூரிப் பணிக்குச் சென்ற நாட்கள் ஞாபகத்தில் ஓடின. பட்டினி கிடப்பது — என் பள்ளிப் பருவத்தில் இருந்து தொடர்வது. ”அகந்தை விலகி, இறுக்கம் விலகி வகுப்பறை விசாலமாக வேண்டுமானால் அங்கு நம்மை அவமதிப்பதற்கும் ஓர் இடந்தர வேண்டும்” என்றேன். இது அன்று என் பேச்சின் திட்டத்தில் இல்லாத புது விசயம்.

ஆசிரியை சில்வியா (Teacher என்ற நூல்) ’உங்களைச் சுட்டுக் கொல்வது போலக் கனவு கண்டேன் டீச்சர்’ என்று பிஞ்சுக் குழந்தைகள் பேசுவதற்கும் வகுப்பறையில் இடந்தந்தது அப்போது என் நினைவில் மின்னியது.

‘அவமதிப்பதற்கும் ஓர் இடம்’ என்று சொல்லிவிட்டுப் பிறகு குழம்பினேன். புரிந்து கொள்வார்களா என்று ஐயப்பட்டேன்..

ஆசிரியர்கள் புரிந்துகொண்டே பேசினார்கள்.

வழக்கம் போல ஆசிரியை புஷ்பம் முதல் ஆளாக எழுந்தார். மாணவர்களிடம் அக்கறை உள்ளவர். கொஞ்சம் கோபக்காரர். ”போன வாரம் காலையிலேயே மழை. ஏழாங்கிளாஸ் பையன் போன் பண்ணிக் கேக்கிறான். புஷ்பா டீச்சர்! இன்னிக்கி ஸ்கூலா லீவான்னு.டீச்சர்னு கேக்கலாமில்ல. ஏன் பேர் சொல்றான்? கொழுப்புதான? இது நம்மள அவமதிக்கிறதுதான். இதையெல்லாம் அனுமதிக்கக்கூடாது சார்”.

அவருக்கு ஆதரவாக நின்றார் சங்கரநாராயணன். எப்போதும் விரிவாகப் பேசக்கூடியவர். ”வகுப்புக்குள்ள நுழையிறப்ப கடைசி பெஞ்சுக்காரன் சிலபேரு எந்திரிக்கிறதே இல்ல. வேணுமின்னேதான்! அப்புறம் நம்ம ஒரு கேள்வி கேட்டா சில பயக நிக்கிற தோரணை, அவன் முகபாவனை, பதில் சொல்ற விதம் ஏதாவது பதில் சொல்லீட்டு பக்கத்தில இருக்கிறவனப் பாத்து நக்கலாச் சிரிக்கிறது… இதெல்லாம் உறுதியா நம்மள அவமதிக்கிறதுதான்”என்றார்.

வெற்றிச்செல்வன் எழுந்தாலே அவை நெளிந்தது. பட்டென்று பேசக்கூடிய இளைஞர். ஆனால் விவாதத்தின் மந்தைப்போக்கைத் திருப்பி விடக்கூடியவர். “குருகுல காலத்து எதிர்பார்ப்புகளோடு இன்னைக்கி நாம் வகுப்பறைக்குள்ள நுழையக்கூடாது; நுழையிறது தப்பு” என்றார்.

வார்த்தைகளை அளந்து பேசக்கூடிய சண்முகக்கனி விவாதத்தை இலக்கு நோக்கித் திருப்பினார். ”பெரும்பாலான நேரங்கள்ல அவமதிப்பு என்பது வெறும் கற்பனையாத்தான் இருக்கு. நம்ம இடங்கொடுக்காம நம்மள யார் சார் அவமதிக்கமுடியும்? தன்னம்பிக்கை குறைவானவங்கதான் அவமதிப்பை
அதிகமா உணர்றாங்க” என்றார்.

அதிகம் பேசாதவர் ஆசிரியை ராஜம். அன்றைக்கு அவர் பேசியது விவாதத்தின் கிரீடம். ”அவமதிப்புன்னு நெனச்சு நெனச்சுத்தான் வகுப்பறையும் சுருங்கிப் போச்சு. வாழ்க்கையும் சுருங்கிப் போச்சு. அவமதிப்புக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கலாம்.கொடுப்போம் சார்!” என்றார்.

ஆசிரியை ராஜத்தை மனதுக்குள் பாராட்டியபோதே, இவரும் நம்மைப் போலப் பட்டினி கிடந்தவரோ என்ற சந்தேகம் சிறு முயல் குட்டி போலக் குறுக்கே பாய்ந்து ஓடியது…..

ச.மாடசாமி

நன்றி: புதிய ஆசிரியன்