சில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 1

அது ஒரு பாரம்பரியமான பள்ளி. தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அங்கு படித்தார்கள். ஏறக்குறைய நூறு ஆசிரியர்கள் பணியில் இருந்தார்கள். அந்த ஆசிரியர்கள் மத்தியில் பேச ஒரு நாள் அழைப்பு. போயிருந்தேன்.

கட்டுதிட்டங்கள் கூடுதலாக இருந்தன. ஆசிரியர் முகச் சலனங்கள் குறைவாக இருந்தன. நடப்பது நடக்கட்டும் என உரையாடினேன். உரையின் இறுதியில் ஒரு கேள்வியை முன் வைத்தேன். ”சட்டென்று நம் எதிரே வந்து நிற்பார்கள். நம் கவனத்தைக் கவர்வார்கள். அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து விடுவோம். கண்பார்வையில் இருந்து விலகி தூரமாய்ப் போய் நிற்பார்கள் பலர். அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி நீங்கள் கண்டுபிடித்த மாணவர் யார்? அவரைப் பற்றி இக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றேன்.

உடனே எழுந்தார் ஒருவர். ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் இருந்த அபூர்வமான கலைத்திறன் தன் கவனத்துக்கு வந்த விதத்தை விளக்கினார். ரசித்தேன். சிறு நோட்டைத் திறந்து வைத்துக் கொண்டு அடுத்தவரின் அனுபவத்தைப் பதிவு செய்யக் காத்திருந்தேன். அடுத்தவரை எழுப்ப ‘சொல்லுங்க! சொல்லுங்க!’என்று கேட்டு நெக்குருக வேண்டியிருந்தது. இருவர் எழுந்தார்கள். கேட்டுக் கொண்டதற்காகப் பேசினார்கள். கடைசியாக ஒருவர் எழுந்து வேறு தளத்துக்கு உரையாடலைக் கொண்டு போனார். அதற்குப் பிறகு யாரும் எழவில்லை. நோட்டை மூடி வைத்துவிட்டு ஏமாற்றத்தைக் காட்டாமல் ’கூட்டத்தை முடிக்கலாம்’ என்றேன். உடனே கூட்டம் புத்துயிர் பெற்றது. காற்று வீசியது. முகங்களில் பரவச அலைகள்!

ஆசிரியர்களைச் சொல்லிக் குற்றமில்லை. கல்விக்கூடங்களில் ’கண்டுபிடிப்பு’ – உணர்வுப் பூர்வமாகவும் நடக்கவில்லை; திட்டமிட்டும் நடக்கவில்லை. யாருக்கு எது ஞாபகத்துக்கு வரும்? ஒருவேளை வீட்டுக்குப் போனதும் ஞாபகத்துக்கு வரலாம். என் பணிக்காலத்தில் நட்சத்திரங்கள் வெளிப்பட்ட சந்தர்ப்பங்கள் சில ஞாபகத்துக்கு வந்தன.

1990களில் அறிவொளிக்கும் கல்லூரிக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். அறிவொளி மையத்தின் கலகலப்பான சூழலை கல்லூரி வகுப்பறைக்குள் கொண்டுவரப் பாடுபட்டேன்.

ஒருமுறை சக ஆசிரியை என்னிடம் சவால்விட்டார். ”செகண்ட் பிஎஸ்சி பயாலஜி கிளாஸ்ல அகிலான்னு ஒருத்தி இருக்கா. அவளப் பேச வச்சுப் பாருங்க சார்” என்றார். சவாலை ஏற்றேன்.

சாப்பாடு முடிந்ததும் தொடங்குகிற வகுப்பு அது. வகுப்பறையில் தூக்கச் சொக்கு இருக்கும். அதை முதலில் கலைக்க வேண்டும். சிறுசிறு கேள்விகளைத் துண்டுத் தாள்களில் எழுதி உருட்டி சட்டைப்பையில் போட்டு வைத்திருந்தேன். (ராமானுஜம் அவர்களிடம் இந்த உத்தியைக் கற்றதாக ஞாபகம்). பைக்குள் கைவிட்டு ஒரு சீட்டை எடுத்து ஒரு மாணவரிடம் கொடுப்பேன். கேள்வியை வாசித்துப் பதிலையும் சொல்ல வேண்டும். கேள்விகள் பலவிதமாக இருக்கும்.

அகிலா யார் என்று வருகைப் பதிவின் போதே கவனித்து வைத்திருந்தேன். துண்டுச் சீட்டைப் பெற்ற மாணவர்கள் சரியாகவோ தப்பாகவோ பதில் சொல்லி வகுப்பை உற்சாகமயமாக்கி இருந்தார்கள். சட்டென்று அகிலா முன்னால் போயொரு துண்டுச் சீட்டை நீட்டினேன். யாருக்கும் துண்டுச் சீட்டு தரும் அதிகாரம் ஆசிரியரிடம் இருந்தது.

சீட்டை வாங்குவதற்கே மாணவி தயக்கம் காட்டினாள். பிறகு பயந்து வாங்கினாள்.

“ஒரு கல்யாண வீட்டுக்குப் போகிறாய். வரதட்சணைப் பிரச்சினை காரணமாகக் கல்யாணம் நின்று போகிறது. மணமகளுக்குத் தாலி கட்டாமல் எழுகிறான் மணமகன்.  அவனோடு பேச உனக்கொரு ஐந்து நிமிடம் கிடைக்கிறது.என்ன பேசுவாய்?” இது அகிலாவின் சீட்டில் இருந்த கேள்வி.

அகிலா மௌனம்  காத்தாள். கைகள் வியர்த்திருந்தன.

முதலில் கேள்வியை வாசி என்றேன். தட்டுத் தடுமாறி வாசித்தாள்.

“இப்பச் சொல்லு! என்ன பேசுவே?”

அகிலாவிடம் எந்த அசைவும் இல்லை. மௌனம். வகுப்பறைக்கு இது ஒரு விதமான சுவாரஸ்யம். எனக்கு மட்டும் அவஸ்தை.

இந்தக் கேள்விக்கு எந்தப் பெண்ணும் குமுறிப் பேசுவாள் எனப் பொத்தாம் பொதுவாக நான் நம்பி இருந்தேன். என் நம்பிக்கை தப்பு.

நேரம் நகர்ந்தது. அகிலா வாயைத் திறக்கவே இல்லை. இது மாதிரிச் சிக்கலான தருணங்களில் இருந்து விடுபட என்னிடம் வார்த்தைகள் இருந்தன.

“சரி! பரவாயில்ல! இப்ப சொல்ல முடியலைன்னா யோசிச்சு இன்னொரு நாள் சொல்லு!” என்று சங்கடத்தை முடிவுக்குக் கொண்டு வந்தேன். வகுப்பைத் தொடர்ந்தேன்.

மாலையில் தமிழ்த் துறை வாசலில் அகிலா.

ஆச்சர்யமாக இருந்தது. ’என்னப்பா’ என்றேன். ஒரு ஃபைலை நீட்டினாள். வாங்கிப் பார்த்தேன். பென்சிலால் வரைந்த ஓவியங்கள் சில இருந்தன. ”நீ வரைந்ததா” என்றேன். தலையாட்டினாள். “நல்லா இருக்கே! பாத்துட்டு நாளைக்குத் தரட்டுமா?” என்றேன்.

உடனே திருப்பித் தராமல் வைத்திருக்கிறேன் என்று சொன்னது அகிலாவுக்கு மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும். ’சரி சார்’என்ற வார்த்தைகளில் உயிர் நிறைந்திருந்தது.

அகிலா போனதும் அந்தச் சித்திரங்களைப் பார்த்தேன். சித்திரங்கள் பேசின.

“பேசுவது மட்டும்தான் திறமையா?”

“ஒவ்வொரு திறமையையும் பேச்சின் வழி மட்டுமே அறிவீர்களா?”

“ஓவியம் வரையத் தெரிந்தவர்களுக்கு உங்கள் வகுப்பில் இடமெங்கே?”

மனசுக்குள் இப்படியெல்லாம் அகிலா குமுறியிருக்க வேண்டும். மணமகனைப் பார்த்துத்தான் குமுற வேண்டுமா என்ன?

மறுநாள் அகிலா வந்தாள். என் கருத்தறிய ஆர்வமாக இருந்தாள். என்னிடம் வார்த்தைகள் வளர்ந்ததே இவர்கள் காட்டிய ஆர்வத்தால்தான்.

“ரொம்ப நல்லாருக்கு. இந்த ஓவியங்களுக்கு எல்லாம் வண்ணம் தீட்ட முடியாதா?” என்றேன்.” அது மாதிரியும் நிறைய வச்சிருக்கேன்” என்றாள் அகிலா உற்சாகமாக.
மறுநாள் வண்ணந்தீட்டிய படங்களையும் அள்ளி வந்தாள். பிரமித்தேன். எவ்வளவு உழைப்பு?

வகுப்பறையில் கவியரங்குகள், கருத்தரங்குகள், நாடகங்கள், விளையாட்டுகள் என தினம் நடத்தினேன். ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தவில்லையே என்று வருந்தினேன்.
அவ்வப்போது ‘குட்’ சொல்லி ‘சரி! பாப்போம்’ என்று விலகிப்போகிற வழக்கத்தை மாணவர்களிடம் நான் கடைப்பிடிப்பதில்லை.

மாணவி வரைந்திருந்த வண்ண ஓவியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ‘இதைப் பத்திரிகைக்கு அனுப்பலாமா? என்றேன். சந்தோசம் மின்ன தலையாட்டினாள்.   ’பத்திரிகைன்னதும் தினத்தந்தி, தினமலர்னு நெனைக்காதே! இது நம்ம பத்திரிகை’ என்றேன்.

அந்த ஓவியத்தைத் துளிர் பத்திரிகைக்கு அனுப்பினேன். துளிர் பின்னட்டையில் அந்த ஓவியம் வந்தது. மாணவியின் பெயர், வகுப்பு, கல்லூரி எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தன.

எங்கள் கல்லூரியைப் பொறுத்தமட்டில் இது பெரிய சாதனை. அகிலாவை வியந்து பார்த்தனர்.

தாழ்ந்து கிடந்த கொடி உயர்ந்து பட்டொளி வீசிப் பறந்தது.

ச.மாடசாமி

நன்றி: விழுது இதழ்