பகிர்தல் – புரிதல் – தடைகள்

பகிர்தல் – ஜனநாயக வகுப்பறையின் அடிப்படை.

பகிர்தல் – இங்கு கருத்துப் பகிர்வு; பகிர்தல் என்பது பங்கேற்பு.

இன்னும் சற்று விளக்குவதானால், ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பு; மிக முக்கியமாக – ஆசிரியர் குரலை எதிர்க்கும் குரல்களுக்கும் வாய்ப்பு.

எந்தத் தலைப்பில் ஆசிரியர்களிடம் உரையாடினாலும், “பேசவிடுங்கள்” என்றொரு உபதலைப்பு எடுத்து என் எண்ணங்களைக் கொட்டுவதுண்டு, எதிர்வினைகள் பல மாதிரி இருந்திருக்கின்றன. உடன்படுபவர்கள்தான் அதிகம். ஆனால் நிச்சயம் ஒரு ‘க்’கன்னா இருக்கும்.

“பேச விடலாம். ஆனா… என்னத்தப் பேசுவான்? உளறிக் கொட்டுவான்?”

“பேச விடலாம் சார்! நல்லது தான். ஆனா சிலபஸ் யார் முடிக்கிறது?…”

“நான் பேச விட்டுருக்கேன்! ஆனா புண்ணியம் இல்ல. ஆளுக்கொண்ணு பேசுவான்!…”

“பேசச் சொல்லலாம். தமிழ்’ல முடியும்; ஹிஸ்டரி’ல முடியும். மேத்ஸ் கிளாஸ்ல என்ன சார் பேசுவான்?…”

“நல்ல யோசனை! பேச வைச்சா அவனுக்கும் பாடத்தில ஈடுபாடு வரும். நான் முயற்சி செஞ்சிருக்கேன். ஆனா அவனுடைய ஒத்துழைப்பு போதுமானதா இல்ல!”

கடைசி ஆளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வது வழக்கம். கூட்டம் முடிந்ததும் இவர் முக்கியமானவர், பகிர்தலும் பங்கேற்பும் வகுப்பறைக்கு அவசியம் என்பதையும் புரிந்திருக்கிறார்; சில தடைகளையும் உணர்ந்திருக்கிறார்.

பகிர்தல் என்பது பேசுவது என்பது மட்டுமல்ல; அது வகுப்பறையைக் கூடி உருவாக்குவது என்பதை அவர்க்குச் சொல்வேன். திறமைகள், எண்ணங்கள், ஐயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற விசால மேடைக்கு அவரை அழைத்துப் போவேன்.

பகிர்தல் எப்போது பூர்த்தியாகும் என்பதையும் அவருடன் உரையாடுவதுண்டு. பேசுவதால் மட்டும் பகிர்தல் பூர்த்தியாகாது; எதிரில் இருப்போர் கேட்கும் போதும், கவனிக்கும் போதும்தான் பகிர்தல் பூர்த்தியாகிறது.

பேசுவது சுலபம். பேசுவதற்கு ஆசையாகவும் இருக்கிறது. சிறிய பயிற்சிகளின் மூலம் எவரையும் பேச வைக்கவும் முடியும்.

கேட்பதும் கவனிப்பதும் அத்தனை சுலபமல்ல. அனுபவம் இருந்தாலும், பயிற்சிகள் இருந்தாலும் தடுமாறல்கள் நேரக் கூடிய சந்தர்ப்பம் அது.

தடைகள் உருவாகும் இடம் அது.

கேட்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கவனிக்கிறவர்கள் கொஞ்சம் பேர்தான். கேட்பது (hearing) வேறு; கவனிப்பது (listening) வேறு என்பது நாம் அறிந்ததுதான். பேச விடுகிறவர்கள் எப்படிக் கவனிக்கிறார்கள் என்பதற்கு இதோ சில உதாரணங்கள்:

*  யோகேஸ்வரன் பேசச் சொல்லிவிட்டு, பேசுகிறவனைக் கவனிக்காமல், மோட்டுவாயில் கை வைத்து அண்ணாந்து ஃபேனைப் பார்த்தபடி நிற்கிறார். கவனிக்கத் தான் செய்கிறார். ஆனால், காதுகளை மட்டும் கொடுக்கிறார், கண்களும் முகமும் முக்கியம் இல்லையா? சிரிப்பு… தலையசைப்பு… புருவ நெரிப்பு என முகச் சலனங்கள் முக்கியம் இல்லையா? இணக்கமான ஒரு தலையசைப்பு பேசுகிறவனுக்கு டானிக் அல்லவா?…

*  நாகஜோதி அடிக்கடி பேச அனுமதிக்கும் ஆசிரியைதான். ஆனால், மாணவி இரண்டு வரி பேசுவதற்குள் அதென்ன அவசரம்?” ‘துவக்கம்’னு சொல்லக் கூடாது’ம்மா. தொடக்கம்’னு சொல்லணும்’ என்று திருத்துகிறார். மாணவன் வரதட்சணையை ஆதரித்து நாலு வரி பேசுவதற்குள் ‘உன் வீட்டுல, உன் தங்கச்சிக்குத் திருமணம்’னு வச்சுக்க. அப்ப என்ன செய்வே?’ன்னு நெனச்சுப் பேசுப்பா’ என்று குறுக்கிடுவார். பேச அனுமதிக்கிறவர்களுக்கு முழுக்கக் கேட்பதற்கான சகிப்புத் தன்மை வேண்டாமா? மேதைமையை முன்வைத்துத் திருத்துகிற தருணமா இது?

*  வெள்ளைக்கண்ணு ஜனநாயகவாதிதான். அடிக்கடி மாணவர்கள் ‘தண்ணி குடிக்க’ அவரிடம் பெர்மிஷன் கேட்டு வகுப்பை விட்டு வெளியே வந்துவிடுவார்கள், மாணவனைப் பேசச் சொல்லிவிட்டு அடிக்கடி அவர் வராண்டா பக்கம் பார்த்துக்கொண்டு இருப்பார். ஆசிரியர் சங்கக் கிளைச் செயலாளர் அந்தப் பக்கம் வருவதைப் பார்த்து விட்டால் பேசுகிறவனை அம்போ என்று விட்டுவிட்டு வாசலுக்கு வந்து, தலையை மட்டும் வெளியே நீட்டி, ‘என்ன சார்? அந்த G.O. வந்தாச்சா? என்று மெதுவாக விசாரிப்பார்.

*  ராஜரத்தினம் நெகிழ்ச்சியை ஒருபோதும் காட்டாதவர். செய்வதைக் கறாராகச் செய்வதுதான் அவருக்கு முக்கியம். மாணவன் பேசி முடித்ததும் அபிப்பிராயமாக ஒரு வார்த்தை பேச மாட்டார். ‘ம்! நெக்ஸ்ட்’ என்று அடுத்தவனைப் பேச அழைப்பார். அபிப்பிராயங்களுக்கு ஏங்கும் மனசை அவர் ஒருபோதும் அறியார்.

இப்படி ஒவ்வொருத்தராக விமர்சனம் செய்வது லகுவாக இருக்கிறது. ருசியாகவும் இருக்கிறது.

விமர்சனத்தை நிறுத்திவிட்டு, எனக்குள் இருக்கிற தடையையும் நான் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நான் கவனிக்கிறேன். தலையாட்டுகிறேன். சலனங்களை வெளிப்படுத்துகிறேன். குறுக்கிடுவதில்லை.

ஆனால்… பேசுபவர் பேசும் செய்தியோடு தொடர்புடைய செய்தியொன்று என் மூளைக்குத் தட்டுப்பட்டுவிட்டால் அதை வெளிப்படுத்த சுவாரசியமான மொழியும் அகப்பட்டுவிட்டால் – மனசுக்குள் அதைத் தயாரிக்கத் தொடங்கி விடுகிறேன் – பேசுகிறவரிடம் கவனத்தைக் குறைத்துவிட்டு.

எத்தனையோ முறை இந்தத் தவறு நேர்ந்துவிட்டது. சில நினைவிலும் இருக்கின்றன. முல்லை நிலக் கோவலர் வாழ்க்கை குறித்த சங்கப் பாடல் விவாதத்தில் செம்பட்டி மாணவன் தலமலை வெள்ளாடு மேய்ப்பதற்கும் செம்மறியாடு மேய்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நுணுக்கமாக விவரித்தபோது, என் கவனிப்பில் இத்தகைய தவறு ஏற்பட்டது.  கோயில் மடப்பள்ளியில் உ.வே.சா. வாங்கி உண்ட உணவுகள் குறித்து (உ.வே.சா. சுயசரிதை) நடந்த கலந்துரையாடலில் நெசவாளர் குடும்பத்து மாணவி சுதந்திரக் கொடி உளுந்தங்களி தயாரிப்பு குறித்து விரிவாக விளக்கிச் சொன்னபோதும் கவனம் விலகித் தடுமாற்றம் ஏற்பட்டது.

இதை வாசிக்கும் நண்பரே! நீங்கள் யோசித்திருக்கிறீர்களா – பிறரைக் கவனிப்பதில் உங்களுக்குள் என்ன தடை என்று? தயவு செய்து யோசித்துப் பாருங்கள்!

நிபுணத்துவச் சிக்கல்களுக்கெல்லாம் அறிவொளியில் எளிய விடை ஒன்று எப்போதும் தயாராக இருக்கும். இது எனக்குத் தீராத ஆச்சர்யம்தான்! கேட்பதற்கான தடைகள் குறித்தும் விடை இருந்தது.

நக்கலக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) அறிவொளித் தொண்டர் அன்னபூரணி, கற்போரிடம் கேட்டு எழுதி அனுப்பியிருந்த (1994ஆம் ஆண்டு) கதை இது. கதையை அவருடைய மொழியிலேயே தருகிறேன்…

வெள்ளிக்கிழமை. ஒரு பெண், முட்டை அளவு சாணி எடுத்து வீட்டை மெழுகி, பிறகு அண்டா பானை விளக்கி தண்ணீ எடுத்து, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, சீவிச் சடை போட்டு பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு, மீதிச் சாணத்தில் எரு தட்டிப் போட்டுவிட்டு, இவளும் குளித்துவிட்டு தலையைச் சிக்கெடுத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறாள். எவ்வளவு கெட்டிக்காரி!

புருஷன் வருகிறான். ‘ஏ! முட்டை மூஞ்சிக்காரி! என்ன சொகுசா ஒக்காந்துட்டே!’ என்று எரிச்சலெடுத்துப் பேசுகிறான்.

உடனே இவளுக்குக் கோபம் வந்துவிட்டது. அக்கா வீட்டுக்குப் போகிறாள். நடந்ததைச் சொல்கிறாள். உடனே அக்காகாரி, “அடிப்போடி! உன் மாமா பட்டணத்துக்குப் போய் மஞ்சக் கிழங்கு வாங்கீட்டு வந்து கொடுத்தார். அதை உரசிப் பூசினேன். மஞ்சள் முகத்தில பிடிச்சதா பிடிக்கலையான்னு மனுசன் ஒரு வார்த்தைகூட கேக்கல. நானே கோபத்தில் இருக்கேன்!” என்றாள் தங்கச்சியப் பார்த்து,

உடனே இவள் அம்மா வீட்டுக்குப் போய் நடந்ததைச் சொன்னாள். உடனே அம்மா, “நான் வென்னீ வச்சு முருங்கை மரத்தடியில குளிச்சுக்கிட்டிருந்தேன். காத்தடிச்சு முருங்கைப்பூ மேலே விழுந்துடுச்சு. முருங்கைப் பூ விழுந்துச்சே! காயமா காயமில்லையான்னு ஒங்கப்பா ஒரு வார்த்தை கூட ஆறுதலாக் கேக்கல. நானே அந்தக் கோபத்தில் இருக்கேன்” என்று சொன்னாள்.

காலையில் கோபமாகப் போன இவள் மாலையில் வருத்தத்துடன் வீடு வந்து சேர்ந்தாள். ‘அவரவர்க்கு அவரவர் பிரச்சினை பெரிசாப் போச்சு!’ என்று நினைத்துக் கொண்டாள்.

தடை புரிகிறது அல்லவா?…

பிறர் பற்றிய அக்கறையை விட, தன்னைப் பற்றிய சிந்தனை அதிகம் உள்ளவர்கள் மிகக் குறைவாகவே கவனிக்கிறார்கள். அல்லது, தங்கள் பேச்சைப் பிறர் கவனிக்க வேண்டும் என்பதற்கே அதிக அழுத்தம் தருகிறார்கள்.

அறிவொளிக் கதை, பகிர்தலின் அடிப்படைத் தடை எது என்று சுட்டிக்காட்டிவிட்டது. இந்த அடிப்படைத் தடையைத் தாண்டாத ஆசிரியர்கள் மாணவர்களைப் பகிர்ந்து கொள்ள அழைப்பதும் இல்லை; தூண்டுவதும் இல்லை. எப்போதும் தங்கள் வாயை மட்டும் மெல்லுகிறார்கள்.  இடையிடையே சத்தம் போடுகிறார்கள். தங்களைக் கவனிக்கச் சொல்லி,

டேய்! கவனி!…

இந்தா! கவனி!…

ஒழுங்கா கவனி!…

ச.மாடசாமி

நன்றி: புத்தகம் பேசுது – ஜூன் 2007 இதழ்