“அறிவொளி” வளர்மதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அணிந்துரை…

(அறிவொளி இயக்க அனுபவங்கள் குறித்து ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் எழுதிய “இருளும் ஒளியும்” புத்தகத்திற்கு ச.மாடசாமி அவர்கள் எழுதிய அணிந்துரை)

கண்கள் கூர்மை அடைந்திருக்கின்றன. மொழிக்குள் ஒளிந்து கிடக்கும் அதிகாரம் கர்வம், காமம், பசப்பு போன்ற அமுங்குணிக்கள்ளர்களைக் கண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுகின்றன. மொழியும் பதிலுக்குப் பதுங்கத்தான் செய்கிறது. கள்ளர்களை இன்னும் ரகசியமாய் மறைக்கிறது. மனப்பகிர்வும் சரி – உறவாடல்களும் சரி – திட்டமிட்ட, தயாரிக்கப்பட்ட மொழியில் நடக்கிறது. திட்டமிட்ட மொழியில் திரைகள் அதிகம். ஆனால், திட்டமிட்டது தெரியாதபடி வார்த்தைகளில் ஒரு அப்பாவித் தோற்றம்! யப்பாடி! மொழியை இயற்கையாக முன்வைக்கத் தேவைப்படும் செயற்கையான உழைப்பில், எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் மூச்சு வாங்குகிறது. வாசிப்பு கனக்கிறது.

அறிவொளி அனுபவப் பகிர்வான ‘இருளும் ஒளியும்’ மொழி உண்டாக்கும் நெருக்கடிகளிலும், இடுமுடுக்குகளிலும் சிக்கிக் கொள்ளாமல் வந்திருப்பது என் முதல் சந்தோசஷம். இதில் உள்ள மொழி ‘திட்டமிடாத மொழி’ என்பது மட்டுமல்ல; அறிவொளிக் காலத்தில் மறைத்து மறைத்து, ரகசியக் குரல்களில் நாங்கள் பேசியவற்றை எல்லாம் ‘அவுத்து விடுகிற’ (தமிழ்ச் செல்வனின் பாதிப்பு) வெளிப்படை மொழியாகவும் இருக்கிறது.

“தலையில் சிலேட்டுகளுடன் ஒத்தையடிப் பாதையில் லொங்கு லொங்கு என்று ஓடியபடியே எங்கள் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தன” என்று தமிழ்ச்செல்வன் எழுதிய வரிகளில், அறிவொளிப் பயணத்தின் சுகமும், சுமையும் நிமிட நேரத்தில் உயிர் பெற்று எழுந்துவிட்டன. ஒரே சமயத்தில் புன்சிரிப்பையும், கண்ணில் ஞாபக ஈரத்தையும் கொண்டு வந்து சேர்த்த வரிகள் இவை.

பல சந்திப்புகளில் பார்த்திருக்கிறேன். தமிழ்ச்செல்வனைக் கண்டதுமே – ‘எப்படி இருக்கீங்க?’ என்ற விசாரிப்பு தொடங்குவதற்கு முன்பே – பல முகங்களில் மலர்ச்சி தோன்றிவிடும். எழுத்தைப் போலவே தமிழ்ச் செல்வனின் சுபாவமும் இனியது.

மனம் ஒரு திறந்த மேடையாக இருந்தால் யாரும் வந்து சகஜமாய் நெருங்குகிறார்கள். மூடிக் கிடக்கும் வீடுகளின் முன்னால்தான் கூச்சத்தோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது. தமிழ்ச்செல்வனோடு உரையாடலைத் தொடங்க, கதவைத் தட்டி … காலிங்பெல் அடித்துக் காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்ச்செல்வனின் உரையாடல் உலகத்தில் ‘நாய் ஜாக்கிரதை’ என்ற போர்டும் இல்லை.

ஏதாவது ஒரு புது விஷயத்தை முன் வைத்ததுமே, ‘சந்தேகமும் நக்கலுமே’ அறிவாளிகளின் – அனுபவசாலிகளின் எதிர்வினைகளாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழ்ச்செல்வன் முகத்திலோ உடனடி வெளிச்சம் பிறந்து விடும். கையில் கிடைத்திருக்கும் புதிய விஷயத்தை ஆர்வமாய் எடுத்துப் பெரிய வீச்சில் வடிவமைக்கப் பார்ப்பார். இது எங்களுக்குப் பயத்தைக் கொடுக்கும். தூண்டி விட்ட நாங்களே அவரைக் கட்டுப்படுத்தப் பார்ப்போம். ‘விஷயம் புதுசாகவும் இருக்க வேண்டும், அது அளவாகவும் இருக்க வேண்டும்’ என்ற எங்களின் சமர்த்துக் கோட்பாடுகளுக்குள் தமிழ்ச்செல்வனைக் கட்டிப் போடுவோம். கட்டுக்களில் இருந்து தமிழ்ச்செல்வன் விசும்பப் பார்ப்பார்… பார்க்கிறார்… தொடர்ந்து பார்க்கிறார்.

“பக்கத்தில் இருக்கிறோம். பார்ப்பதில்லை. கூடவே இருக்கிறோம். கண்டுபிடிப்பதில்லை” என்று அறிவொளி மேடைகளில் ஆத்ரேயா உணர்த்தினார். உடன் வசிப்பவர்களிடம் இருந்தே விலகி நிற்கும் மவோபாவத்தை அவர் இப்படிச் சுட்டுவார். தமிழ்ச்செல்வனிடம் இத்தனை காலம் பழகியிருந்தும் ‘இருளும் ஒளியும்’ மூலம்தான் அவரை முழுதாகக் கண்டுபிடித்தேனோ என்று எனக்குப்படுகிறது. கலைப் பயணப் படைப்பாளி, கலைப் பயண அமைப்பாளர், அறிவொளி ஒருங்கிணைப்பாளர், அறிவொளிப் புத்தகங்களின் ஆசிரியர், சுகாதாரப் பயிற்சியாளர், நாட்டுப்புறவியல் சேகரிப்பாளர், சமம் கருத்தாளர், ஸ்லைடு ஷோ விளக்குநர், தெருச் சினிமா இயக்கவாதி என்று சளைக்காமல் அவர் எடுத்த புதுப் புது வடிவங்கள் ‘இருளும் ஒளியும்’ நூலில் தெரிகின்றன. எத்தனை வடிவங்கள் எடுத்தபோதும்,  ஒரு திட்டத்திலாவது தன்னை முன்னிலைப்படுத்தி அவர் மேடை முழுக்க நின்று நாங்கள் பார்த்ததில்லை.

விருதுநகர் (பழைய காமராசர்) மாவட்டம் திருப்தியின்றிக் கல்விப் பரிசோதனைகளைச் செய்து பார்த்த மாவட்டம். எழுத்தறிவிக்கும் முயற்சிக்கு நல்ல முன்மாதிரி எதுவும் தமிழகத்தில் இல்லை. முதியோர் கல்வித் திட்டங்களின் வாயிலாகக் கற்போருக்குத் தயாரிக்கப்பட்ட முதனூல்களின் (Primers) இருந்த முதல் வார்த்தையைப் பார்த்தாலே இது தெரியும். ஒண்ணாம் வகுப்பு பாடப் புத்தகபாணியில் ‘அம்மா’ எனத் தொடங்கியவை; கல்வியைப் கண் என்று உணர்த்த வேண்டும் என்ற நோக்கில் ‘கண்’ எனத் தொடங்கியவை (‘க’ ‘ண்’ இரண்டும் ஆரம்ப முயற்சியாளருக்கு எழுதச் சிரமமானவை); மக்களின் வாழ்க்கையோடு நெருங்கி வருவதாக நினைத்து ‘வயல்’ எனத் தொடங்கியவை (‘வ’ ‘ல’ இரண்டுக்கும் கற்போர் முதல் கட்டத்தில் வித்தியாசம் காண்பது அரிது) – எனப் பல பின்தங்கிய முயற்சிகள் எங்கள் முன் இருந்தன.

அறிவொளியிலோ – ‘பட்டா’, ‘படி’ என்ற அற்புதமான தொடக்கம் இருந்தது. இரண்டும் எழுதச் சுலபமான வார்த்தைகள். மனசோடு பொருந்திப் படியக் கூடிய வார்த்தைகள். அறிவொளியில் எத்தனை பேர் கையெழுத்து போடத் தெரிந்து கொண்டார்கள்? எத்தனை பேர் முதனூலை முடித்தார்கள்? – என்பது போன்ற புள்ளி விவரங்கள் எவரிடமும் துல்லியமாகக் கிடையாது. வற்புறுத்திக் கேட்டால் களப்பணியாளர்கள் MIS படிவங்களைத் திருப்தியாக நிரப்பித் தருவார்கள். ஆனால், ஒரு புள்ளி விவரம் மாறாதது; உறுதியானது. குறைந்தது 30 லட்சம் பேராவது ‘பட்டா’ ‘படி’ என்று சிலேட்டில் எழுதி, தொண்டரிடம் ரைட் வாங்கித் தமிழ்நாட்டில் முகம் மலர்ந்தார்கள் என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.

இவர்களில் பெரும்பாலானோர் முதனூலில் இரண்டாம் பாடம் வரை எங்களோடு வந்தார்கள். “சமாதானம் எழுத ஆரம்பிச்சதுமே மையங்கள்’ ல போராட்டம் வந்துருச்சு சார்!” என்றாள் எங்கள் வளர்மதி. அவள் இப்போது உயிரோடு இல்லை. அடிக்கடி கலெக்டர் ஞானதேசிகனுக்குக் கடிதம் எழுதுவாள். “இந்தப் பொண்ணு எழுத்தில் ஜெயகாந்தன் சாயல் தெரியுது” என்று பாராட்டுவார் ஞானதேசிகன். அறிவொளியில் சேர்ந்ததற்காக வீட்டில் அடிவாங்கியவள் வளர்மதி. கொஞ்ச காலம் பைத்தியம் எனப் பட்டம் கட்டப்பட்டு வீட்டுக்குள் பூட்டப்பட்டவள். மெலிந்து நரம்பாக இருப்பாள். திருமணமாகி முதல் பிரசவத்திலேயே உயிர் துறந்தாள். அவள் ஞாபகம் குறுக்கிட்டு என் எழுத்தைத் தடைப்படுத்துகிறது.

அவள் சொன்னது போலவே போராட்டம் வந்துவிட்டது. மூன்றாம் நான்காம் பாடங்கள் வரும்போது மக்கள் பலர் கலையத் தொடங்கினர். சுலபமாகத் தொடங்கிய புத்தகம் கடினமாக வளர்ந்தது. எழுதச் சிக்கலான வார்த்தைகள்! அவற்றுக்குள் திணிக்கப்பட்ட செய்திகள்! அறிவுரைகள்! முதல் புத்தகத்தின் இறுதியில், வாக்கியங்களும் வந்து விட்டன.

“முதனூல்களில் (Primers) எழுத்துக்களையும், வார்த்தைகளையும் கற்பித்தாலே போதும். வாக்கியங்களுக்குப் போக வேண்டாம்” என்பது எப்போதும் என் வாதம். முதனூல்கள் தயாரிப்பின்போது  கூடவே இருந்து என் புலம்பல்களைச் சகித்துக்கொண்ட அருமை நண்பர்கள் குமரப்பன், கவனகன், SRC அனந்தமூர்த்தி ஆகியோர் இப்போது உடனடியாக என் ஞாபத்தை ஆக்கிரமிக்கிறார்கள். பிற்பாடு வித்தியாசமாய் முதனூல்கள் தயாரிக்கும் ஆர்வத்தில் நம்பிக்கையோடு வெளிப்பட்ட இளந்தோழர்கள் தனஞ்செயன், கற்பகம் போன்றோரையும் நினைத்துப் பார்க்கிறேன். அறிவொளி முடிந்த பிறகும் விட்டுவிடக் கூடாது என்ற உறுதியுடன் வார்த்தைகளை மட்டும் வைத்து “நாட்டுப்புற முதனூல்கள்” (Folk Primers) தயாரித்துப் பார்த்த அ. முத்துச்சாமி, அமலராஜன், ரத்தின விஜயன் ஆகியோரும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

அறிவொளி முடியும்போது இன்னொரு பரிசோதனை செய்தோம். ஒரு சிறிய கதையை அல்லது சம்பவத்தைச் சொல்லி – அதிலிருந்த முக்கிய வார்த்தைகள் (Key words) சிலவற்றைத் திரும்ப திரும்ப நினைவூட்டி – அவ்வார்த்தைகளை வாசிக்கவும் எழுதவும் பயிற்சி அளித்தபோது அது இன்னும் வெற்றிகரமாக அமைந்தது. ‘மரம்’ ‘பாம்பு’ ‘பாட்டி’ மடி’ ‘பயம்’ போன்ற வார்த்தைகளைச் சொல்லியும் எழுதியும் பார்த்துவிட்டு, ஏராளமான பாம்புக் கதைகளையும் கற்போர் சொன்னார்கள். வார்த்தைகளைச் சூழலுக்குள் (Context) வைத்துக் கொடுத்தால் மறக்காமல் நிலைப்பதைக் கண்டோம். இன்னும் செய்து பார்க்க வேண்டிய பரிசோதனைகள் ஏராளம் இருக்கின்றன…

விருதுநகரில் இந்தப் பிரக்ஞை வேரூன்றி இருந்தது. மக்கள் கலைவதற்குப் புறச் சூழல்களுக்கு முக்கிய பங்கிருக்கலாம். பாடப் புத்தகத்துக்கும் ஒரு பங்குண்டு என்று நிச்சயமாய் நாங்கள் நம்பினோம். எனவேதான் விருதுநகர் அறிவொளியிலும், பின்னர் மதுரை கருத்துக்கூடத்திலும் கற்போரின் வாசிப்புக்கென விதம் விதமான படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுப் பார்த்தோம். கருத்துத் திணிப்புகளுக்கு மாறாக, நாட்டுப்புறக் கதைகளுக்கு வாசிப்பு வடிவம் கொடுத்தோம். உற்சாகமாய்க் கொஞ்சம் நகர்ந்து, பிறகு இதுவும் ஒரு கட்டத்தில் ‘உஷ்ஷ்’ என்று மூச்சு விட்டு நின்றது.

அப்போதுதான் கைகொடுக்க தமிழ்ச்செல்வன் வந்தார். நவீன படைப்பாளிகளின் எழுத்தைக் கற்போர் வாசிப்புக்கேற்ப மாற்றித் தர வேண்டிய தருணம் இது என்றார். முதல் முயற்சியை அவரே தொடங்கினார். மேலாண்மை பொன்னுச்சாமியின் உள் மனிதனை ‘எட்டரை’ என்ற பெயரில் எழுதித் தந்தார். கற்போரின் வாசிப்பு அனுபவத்தில் ரசனை சேர்த்த புத்தகம் இது. இந்தப் பாணியில் பின்னர் வந்த “கிறுக்கு சண்முகம்” (வேல. ராமமூர்த்தி), “காய்ச்ச மரம்” (கி. ராஜநாராயணன்), “கடுங் காப்பி” (தனுஷ்கோடி ராமசாமி) போன்ற புத்தகங்கள் மக்களிடத்தில் போய்ச் சிக்கென்று ஒட்டிக் கொண்ட புத்தகங்கள்.

தமிழ்ச்செல்வன் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து நவீன கதைகளுக்கு வாசிப்பை நகர்த்தினார். ஆங்கிலப் பேராசிரியர் சசிதரன் வேறொரு காரியம் செய்தார். நாங்கள் வெளியிட்ட புத்தகங்கள் – பயிற்சிப் புத்தகங்கள் எல்லாவற்றின் சாராம்சத்தையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இந்தியா முழுக்கக் கொண்டு போனார். விருதுநகர் அறிவொளி அலுவலகத்தில் எப்போதும் அவரைச் சுற்றி – ஜெயபிரகாஷ், ஆறுமுகப் பெருமாள், முத்துச்சாமி, வெங்கடேஸ்வரி, சத்தியவதி, தெய்வசிகாமணி – என ஒரு இளம் பட்டாளம் இருக்கும். அறிவொளியின் அன்றாடப் பணிகளின் இடைவெளியில் – முறுக்கு, கடலை மிட்டாய்களோடு இந்த இளம் பட்டாளம் பேராசிரியர் சசிதரனைச் சுற்றி அமர்ந்து அவர் சொல்லச் சொல்ல ஆர்வமாய்க் குறிப்பு எடுக்கும். அந்தக் குறிப்புகள் இன்று பல மொழிகளில் நூல்களாகி இருக்கின்றன.

சொல்லப்பட வேண்டியவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள் – ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் புத்தகத்தில் சிலருடைய பெயர்கள் தெரிகின்றன. மற்றவர்கள் மறந்துபோனவர்கள் என்று அர்த்தமில்லை. ஒரு பெயர் நூறு பேரை நினைவுக்குக் கொண்டு வரும் அனுபவம் இது.

செண்பகவல்லி, மாரியம்மாள், நடராஜன், கந்தசாமி என்று பல தொண்டர்களின் பெயர்களைத் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பெயர்களை எழுதும்போது தமிழ்ச் செல்வனுக்குக் காட்சியாகும் முகங்கள் வேறு. படிக்கிற எங்கள் முன் வந்து தோன்றுகிற முகங்கள் வேறு. எழுதிய பெயர்களுக்கும், எழுதாமல் விட்ட பெயர்களுக்கும் பின்னால் அவரவர் மாவட்டத்துத் தொண்டர்கள் வரிசையாக வந்து நிற்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த – 15வயது முதல் 20வயது வரை இருந்த – கிராமத்துப் பெண்கள். வீட்டுக்குள்ளோ, சமூகத்திலோ அங்கீகாரம் ஏதுமின்றி வாழ்ந்தவர்கள். இவர்கள்தான் எஞ்சினாக இருந்து அறிவொளி இயக்கத்தை இழுத்துப் போனார்கள். தேசம் முழுவதும் இதுதான் நிலைமை. ‘ அழகிலே பவளக் கொடி; வீட்டிலே சாணிக் கூடை ‘ என்று சொலவம் சொல்லுவது போல, மதிப்பின்றி ஒதுக்கப்பட்டுக் கிடந்த கிராமத்து யுவதிகள் தலைமையேற்று நடத்திடும் இயக்கம் அறிவொளி இயக்கம். “அறிவொளி  – முகமற்றவர்களின் முகம்” என்று உணர்ச்சி மேலிட்டு நாம் மேடைகளில் முழங்கியது வார்த்தை ஜாலம் அல்ல.

அறிவொளியின் முதல் கட்டடத்தில் கருத்தாளர் (Resource Person), முதன்மைப் பயிற்சியாளர்  (Master Trainer)பயிற்சிகளுக்கு, மெடல் வாங்கிய ஆசிரியர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் என்று தேடிப் பிடித்துக் கொண்டு வந்தோம். ஆனால், இவர்களில் பலர் ஒரு வாரம் கூட அறிவொளியில் தங்கவில்லை.

அதேபோல, மையங்களைத் தொடங்கும்போது, எம்.ஏ.எம்.ஃபில். படித்த தொண்டர்கள் சிலர் ஆர்வத்துடன் வந்தார்கள். அவர்களின் வகுப்பறைகளும் அவர்கள் கூடவே வந்தன. மையங்கள் (Arivoli Centres) வகுப்பறைகளைத் (class rooms) தாங்குமா? பெரும் படிப்பாளிகள் எளிதில் சோர்வுக்கு ஆளானார்கள்.

ஏழாங்கிளாஸ், எட்டாங்கிளாஸ் படித்த தொண்டர்கள் நடத்தும் மையங்களைப் பார்க்க வேண்டுமே. ‘யக்காவ்’, ‘யண்ணே’ என்று வீட்டுக்கு வீடு போய்க் கற்போரை அழைக்கிற குரலிலும், மையங்களுக்குச் சீக்கிரம் வரவேண்டுமே என்ற அக்கறையில் அவர்களின் வீடுகளுக்குள் உரிமையுடன் புகுந்து செய்கிற சிறுசிறு ஒத்தாசைகளிலும் யக்கா! நான் மொதல்ல பாடுறேன். நீங்களும் சேர்ந்து பாடுங்கன்னு வேண்டுகோளை வைத்து, ‘காலம் நம் கையில்தானே’ என்று குரல்களை மூட்டிச் சிலிர்ப்புண்டாக்கி, அறிவொளி மையத்தைக் ‘கல்வி கலாச்சார மையமாக’ மாற்றிய சாமர்த்தியத்திலும் நாங்கள் என்றும் காணாத புதுமையையும், ஜீவனையும் கண்டோம். தாங்க முடியாத ஆச்சர்யமாக இது இருந்தது. “மகத்தான காரியங்கள் எல்லாம் சாதாரண மனிதர்களால் தான் செய்து முடிக்கப் படுகின்றன” என்ற உண்மை எங்கள் மூளையில் பட்டு, இந்த உண்மையை ஊர் ஊராகப் போச் சொன்னோம்.

மனிதர்கள்…உண்மைகள்…அனுபவங்கள்…படிப்பினைகள் என அறிவொளி உயிருள்ள இயக்கமாக இருந்தது. அந்த உயிர் இந்த நூல் முழுக்க நிறைந்து நிற்கிறது. நாம் மட்டுமே என்ற பிடிவாதம் போய், ‘எங்கும் எல்லாம் கலந்துதான் இருக்கிறது (ப.10)’ என்ற தெளிவு; ’40 வருடமாக பவுடர் அடித்து வெம்பிப்போன என் மத்திய தர வர்க்க முகத்தை எப்படி உடனே அழிக்க முடியும் (ப.4)’ என்ற ஆதங்கம்; ‘நான் யார்’? அவர்கள் யார்? அது சரியா? இது சரியா? (ப.48)’ என்ற குழப்பம்; ‘அறிவொளிக்கு முன்னால் அத்தனையும் தூள் என்பது … வெறும் கோஷம்தானா? (ப.135)’ என்ற சுயவிமர்சனக் கேள்வி – என ஆங்காங்கே பளிச்சிடும் சிந்தனைகள், இந்நூல் பெருமிதங்களின் தொகுப்பல்ல என்பதை உணர்த்துகிறது. அறிவொளி தந்த பெருமிதம் ஒரு பக்கம் இருக்கத்தான் இருக்கிறது. அது, பாலில் கலந்த சர்க்கரையாக , தமிழ்ச் செல்வனின் இனிப்பு எழுத்துகளுக்குள் கரைந்து கிடக்கிறது.

படிப்பினையே, பாலுக்கு மேல் மிதக்கும் ஆடையாக முதன்மைப்பட்டுத் தெரிகிறது. படிப்பினையின் மறுபக்கமாகத் தீர்வும் தென்படுகிறது.

‘அறிவொளி ராக்கோடாங்கி’ போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும்போதே, அறிவொளி வெற்றிக்கு ‘உள்ளூர் முயற்சிகள்’ எவ்வளவு முக்கியம் என்பதைத் தமிழ்ச்செல்வன் தெளிவுபடுத்துகிறார்.

“தொடர்ந்து வேலைமுறைகளை மாற்றியபடி இடைவிடாது பணி செய்தால்” (ப.82) சமூகப் பணிகளில் வெற்றி பெற முடியும் என்ற வழிகாட்டுதலும், அனுபவப் பகிர்வுகளின் உச்சியில் வெளிச்சம் பாய்ச்சி நிற்கிறது.

தீராத சில குழப்பங்கள் பற்றியும் தமிழ்ச்செல்வன் அடிக்கடி குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, மாரியம்மாள் என்ற அற்புதமான கலைஞரை, எல்லோரையும் போல சமையல்கட்டுக்குள்தான் சமூகம் அடைத்து விட்டது என்பதைத் தமிழ்ச்செல்வன் அறிகிறார். இப்படித் தான் எல்லோரையும் எல்லா வேலைகளையும் பாதி வழியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோமா? என்ற கவலை அவருக்கு வருகிறது. அறிவொளி மாவட்டங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான கவலை இது. மாரியம்மாளையும் இன்னும் சிலரையும் நமக்குத் தெரியும். அதனால் அவர்களுக்காக இரங்குகிறோம். ‘ஆயிஷா’ கதையில் நடராஜன் சொன்னது போல, சமையலறையில் அடைக்கப்பட்ட விஞ்ஞானிகள் எத்தனை பேர்? நமக்குத் தெரியாமல் சமையல் கட்டில் வசிக்கும் எழுத்தாளர்கள் எத்தனை பேரோ? ‘கையில கிளி வளத்துக் கடலோரம் தப்ப விட்ட’ பரிதாபக் கதைகளை நாட்டுப்புற இயலில் நாம் பார்க்கவில்லையா?

இழப்புகள் இரண்டு மாதிரியாக இருக்கின்றன. மாரியம்மாள் மாதிரி – பெற்ற முற்போக்குப் பண்புகளைக் காத்துத் தர முடியாதபடி பழைய வாழ்க்கைக்கே பறிகொடுப்பது, வளர்மதி மாதிரி – அடிப்படை சுகாதாரத்தைக் கூடக் காத்துத்தர முடியாமல் உயிரையே பறிகொடுப்பது. கலங்குகிறோம். கண்ணீர் விடையல்ல என்று தெரிந்தாலும் கண்ணீர் பூக்கிறது.

இந்தக் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும், விடையே இல்லையா? விடைகள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் களத்தில் பணி தொடரும்போது தான் அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். வீட்டுச் சிறையில் சிக்கி விடாமல், தலைவர்களான பெண்களைப் பற்றிய தகவலும் தமிழ்ச்செல்வனின் நூலில் கிடைக்கிறது. அந்த உண்மை தான் – கண்ணீரைத் துடைக்கும் கரம்!

‘நமக்கும் மக்களுக்குமான இடைவெளி’ குறித்தும் (விடுதலைக்கும் ஜாமீனுக்குமான இடைவெளி) தமிழ்ச்செல்வன் பேசுகிறார். ஆம்! இந்த இடைவெளிகள் எப்போதும் எங்கும் இருக்கின்றன. 30 வருடப் பணிக் காலத்துக்குப் பிறகும் ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே பெரிய இடைவெளி கிடக்கிறது. 30 வருடத் தாம்பத்யத்துக்குப் பிறகும் குடும்ப வேலைகளில் ஆண் பெண் என்ற இடைவெளி இருக்கிறது. சமூக அக்கறையுள்ளவர்கள் அடிக்கடி உணரக் கூடிய விஷயம் தான் இது. பலரும் இதற்குத் தீர்வுகள் சொல்லியிருக்கிறார்கள். பாவ்லோ பிரேயர் சொன்னது மிக உருப்படியான தீர்வு. கிராமப்புற மக்களிடம் வேலை செய்யப் போகும் மத்திய வர்க்கத்தினர், தங்கள் வர்க்க உணர்வைத் தற்கொலை செய்த பின்னர் (class suicide) போக வேண்டும் என்றார் அவர்.

இடதுசாரிகள், திராவிட இயக்கத்தினர், தலித் இயக்கத்தினர், பெண்ணிய இயக்கத்தினர் அனைவரும் ஒன்றுபட்டுச் செய்ய வேண்டிய பணி அறிவொளிப் பணி என்பது தமிழ்ச்செல்வன் இந்நூலில்  வலியுறுத்தி முன்வைக்கும் கருத்து. அறிவொளியில் தீவிரமாய்ப் பங்கேற்றவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். இடது சாரிகள், திராவிட இயக்க நண்பர்கள், தலித் தோழர்கள் எல்லாம் கலந்துதான் அறிவொளி இயக்கத்தில் தெரிகிறார்கள். பிரக்ஞைப் பூர்வமாக – அமைப்பு ரீதியாக – தங்கள் தங்கள் அடையாளங்களை முன்னிறுத்தி – அறிவொளியின் செயல்பாட்டு தளத்தில் அவர்கள் கை கோர்க்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். பிரக்ஞைகளோடும், அடையாளங்களோடும் அறிவொளிப் பணிக்கு வந்தால் தேவையற்ற தடைகள் தான் உண்டாகும் என்பது என் கருத்து.

தமிழ்ச்செல்வன் எவ்வளவு மென்மையானவராக இருந்து அடிக்கடி வதங்கிப் போகிறார் என்பதை இந்நூலின் வழி ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன். அடிக்கடி ஒரு குற்ற உணர்வு தலைதூக்கி விடுகிறது. விமானப் பயணம் செய்யும் போது கூட “தொண்டர்களின் பேரைச் சொல்லி நாமிப்படிப் பறக்கிறோமே” என்ற குற்றவுணர்வு தாழ்வுமனப்பான்மையின்  வடிவமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் சுபாவமாகவும் தான் சரித்திரங்களிலும் கதைகளிலும் வெளிப்படுகிறது. குற்றவுணர்வை விட்டு விடுவோம்.

சுய விமர்சனம் வேறு; குற்றவுணர்வு வேறு. பல பணிகளை இப்போது செய்தால் முன்னை விட நன்றாகச் செய்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது. காதல் பஞ்சாயத்துக்களில் ஒருவிதப் பதைபதைப்போடு அந்த நேரத்தில் நாம் தலையிட்டோம். நம் கையில் இருந்த முற்போக்குக்கும் – அறிவொளித் தற்காப்புக்கும் இடையே ஊசலாடி, ஊசலாடிப் பஞ்சாயத்து செய்தோம். இப்போது அப்படிச் செய்ய மாட்டோம். மக்களை மையங்களுக்கு வரவழைப்பதற்கு ‘ராக்கோடாங்கி’ போன்ற புதுமைகளைச் செய்தது போல, மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் புதுமைகள் செய்திருப்போம். எல்லாவற்றிலும் கொஞ்சம் திருத்தம் இருக்கும். ஆனால், பழைய வெறித்தனம் – தீவிரம் – இருக்குமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது என்பது விதியும் அல்ல.

இன்றும் கூட, அறிவொளி ரேகைகள் எல்லாம் மங்கிப் போய்விடவில்லை. ‘மலர்’ துளிகள்’ போன்ற வலுவான பெண்கள் அமைப்புகள் அறிவொளியின் பயனாய் – அறிவியல் இயக்கத்தின் முயற்சியால் – பிரகாசித்து நிற்கின்றன. அமைப்பு முழுமைக்கும் அறிவொளிக் கல்வியைக் கொண்டுபோக வேண்டிய அவசியமில்லை. மலருக்குள் மகரந்தப் பொடிகளாய், துளிகளுக்குள் சிறு துளிகளாய் எழுத்தறிவு தாகத்துடன் இருக்கும் பெண்களில் ஒரு சிலருக்காவது மீண்டும் எழுத்தறிவு தரும் வேலையை நம்மால் தொடர முடியும். அது சாத்தியமான விஷயம் தான்.

மிக இயல்பாக, என்னை நெருங்கி வந்த புத்தகம் இது. புத்தகத்தைப் படித்து முடித்ததும், அறிவொளி இயக்கம் தத்தித் தவழ்ந்து வந்து என்னைத் தூக்கு என்று கேட்பது போல இருந்தது. படிக்கிற ஒவ்வொருவரும் இந்த உணர்வுக்கு ஆட்படுவது நிச்சயம்.

இது உணர்வூட்டுகிற நூல் மட்டுமல்ல. சமூகப் பணிக்குச் செல்பவர்கள், புதிய புதிய ரூபங்களை எடுத்துப் போக வேண்டும் என்று உணர்த்துகிற நூலும் கூட.

சென்னை  – 20

25.10.2004

Leave a Reply

Your email address will not be published.