காந்தியின் வகுப்பறை

1

காந்தி போற்றிய சிந்தனையாளர்களில் ஒருவர் டால்ஸ்டாய். டால்ஸ்டாயில் இருந்து கட்டுரையைத் தொடங்கலாம்.

தரம், ஒழுக்கம் – என்ற இரட்டை முழக்கங்கள் பள்ளி அமைப்புகளின் அஸ்திவாரங்கள். ராணுவக் கட்டுப்பாடு, நிறுவன விதிகள், பாடப்புத்தகச் சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு தண்டனை ரேங்க் வழங்கி மாணவரைத் தரம் பிரித்தல், மாணவர்களின் பன்முகங்களை அழித்துப் பள்ளிக்குப் பொருந்தக் கூடிய ஒற்றை முகத்தைப் பிசைந்து  வடித்தல்… எனப் பள்ளிகள் முழந்தைகள் மீது செலுத்திய அதிகாரங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இன்றி சமூகம் முழுச் சம்மதம் தந்து வந்தது. சின்ன முணுமுணுப்பு கூட இல்லை. காலம் காத்திருந்தது.

பள்ளிக் கல்வி குறித்த எதிர்ப்பேச்சுகள் 19ஆம் நூற்றாண்டில் எழுந்தன. பேசியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டால்ஸ்டாய்.

தரம், ஒழுக்கம் என்ற அதிகாரப் பேச்சுக்கு மாற்றாக, “குழந்தைகளின் சுதந்திரம், குழந்தைகளின் கற்பனைத் திறன்” என்ற இசைக்குரல் டால்ஸ்டாயிடம் இருந்து கேட்டது. ‘மாணவர்களுக்குக் கற்பித்தல்’ (Instruction) என்ற சர்வமொழியை மறுத்து, ‘மாணவர்களோடு உரையாடல்’ (dialogue) என்ற சுமூக மொழியை முதல்முதலாக அறிமுகப்படுத்தினார் டால்ஸ்டாய். அவர், கல்வியின் அடித்தளம் அனுபவம் என்றார். கற்பதறகான வழி சுதந்திரம் என்றார். அந்தக் காலத்தில் இந்த வார்த்தைகள் பரிகாசத்துக்குரியவை ஆயின.

விவசாயி வீட்டுக் குழந்தைகளுக்காகத் தாமே ஒரு பள்ளி தொடங்கி நடத்தினார் டால்ஸ்டாய். தொடங்கிய ஆண்டு 1859. மாஸ்கோவில் இருந்து 130 மைல்கள் தள்ளி அந்தப் பள்ளி இருந்தது.

அந்தப் பள்ளியின் முதல் மாணவர் எழுதுகிறார்: “முதல் நாள் 22 மாணவர்கள் பள்ளிக்கு வந்தோம். பள்ளி தந்த சுதந்திரத்தால் நாங்கள் அடைந்த உவகைக்கும் பரவச்த்துக்கும் அளவே இல்லை. பள்ளி விட்டு வீடு திரும்புகையில் ஒவ்வொரு ஆசிரியரிடமும் “போயிட்டு வரோம் சார்! போயிட்டு வரோம் சார்! ” என்று பிரியத்தோடு பேசி விடை பெற்றோம். மூன்றே மாதங்களில் எங்கள் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 22இல் இருந்து 70 ஆனது.”

‘கற்பிக்கிறோம்’ என்ற அகந்தையின்றி பள்ளி வளர்ந்தது. “விவசாயி வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்கிறோமா? விவசாயி வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிறோமா? என்ற புகழ்பெற்ற கட்டுரையை டால்ஸ்டாய் அத்தருணத்தில் எழுதினார். கல்வி குறித்த டால்ஸ்டாயின் கட்டுரைகளை ஜார் அரசின் கல்வித்துறை ‘தீங்கானவை’ (harmful) என்று வர்ணித்தது.

சுதந்திரப் பள்ளிகளின் (Freedom Schools) தவிர்க்க முடியாத ஆரம்பப் பிரச்சினை டால்ஸ்டாய் பள்ளியிலும் இருந்தது. சுதந்திரம் என்பதைத் தன் சுதந்திரம் என்று பொருள் கொள்ளாமல் அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது என்று பொருள் கொள்ளும் போக்குதான் அது. வலுத்த மாணவர்கள் அடிதடிகளில் இறங்கி குழப்பம் உண்டாக்குவர்.

இதை எப்படி டால்ஸ்டாய் எதிர்கொண்டார்? தொல்லை கொடுக்கும் மாணவர்களை ஆணையிட்டுக் கட்டுப்படுத்தவோ, எச்சரிக்கவோ, தண்டனை தரவோ டால்ஸ்டாய் விரும்பவில்லை. பரிசு தரவும், தண்டனை தரவும் தானே ‘அதிகாரி’ என்று டால்ஸ்டாய் கருதவில்லை. வகுப்புதான் கூடி முடிவெடுக்கும். முடிவு ஒருபோதும் கடுமையாக இருந்ததில்லை. முரட்டுத்தனங்கள் குறைந்து மாணவர்கள் இசைவுடன் கூடி வாழும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. பெற்றோர்கள் பெருமை கொண்டார்கள். மிகக் குறைந்த காலத்திலேயே 150 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர்.

ஜார் அரசு இந்த வளர்ச்சியை அனுமதிக்கவில்லை. ஜார் மன்னருக்கு எதிரான சதி என்று டால்ஸ்டாய் பள்ளி மீது குற்றம் சுமத்தப்பட்டது. டால்ஸ்டாயின் வீடும் பள்ளியும் சோதனையிட்டு நாசம் செய்யப்பட்டன. தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் பள்ளி மூடப்பட்டது.

கனவுகள் தகர்ந்து போன மன அழுத்தத்துடன் டால்ஸ்டாய் ‘போரும் அமைதியும்’ நாவல் எழுத அமர்ந்தார்.

2

காந்தி தம் வாழ்நாளில் மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் தான் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். பள்ளி கல்லூரிகளைப் பற்றி ‘அடிமைக் கோட்டைகள்’ என அவர் விமர்சிப்பது அப்படியொரு சந்தர்ப்பம் (1920, இந்தியா).

டால்ஸ்டாய் போலப் பள்ளி நடத்திய அனுபவம் காந்திக்கு இல்லை. தென்னாப்பிரிக்காவில் அவர் உருவாக்கிய டால்ஸ்டாய் பண்ணையில் ஆசிரியராக இருந்து பாடம் நடத்திய அனுபவம் காந்திக்கு இருந்தது (1911 – 12). தென்னாப்பிரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்கு அவர் தமிழ் கற்பித்தார் என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய துணைச் செய்தி. அதற்காக ஜி.யு. போப் எழுதிய நூலை அவர் வாசித்திருந்தார்.

காந்தியின் சிந்தனைகளை ஒரு குறிப்பிட்ட திசைக்குக் கொண்டு வந்து சேர்ந்த பெருமை ரஸ்கின் எழுதிய “Unto this Last” என்ற நூலுக்கு உண்டு. அப்புத்தகத்தில் இருந்து தாம் எடுத்துக்கொண்ட சாராம்சமான மூன்று கருத்துக்கள் பற்றி காந்தி குறிப்பிடுகிறார். அவற்றில் இரண்டு கருத்துக்கள் உடல் உழைப்பு சம்பந்தப்பட்டவை.

* வக்கீலின் உழைப்பும் நாவிதரின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான். (உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது).

* உடல் உழைத்து வாழும் வாழ்க்கையே – அதாவது ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் வாழ்க்கையே – மேன்மையானது.

கல்விக் கூடங்களோடு காந்தி கொண்ட முதல் முரண்பாடு உடல் உழைப்பைவிட அங்கு ‘அறிவு’ மேன்மை பெறுவது குறித்து தான்.

‘உடல் உழைப்போடு கூடிய கல்வி’ என்பதே அவர் லட்சியமாக இருந்தது. டால்ஸ்டாய் பண்ணையிலும் அவர் அதையே நடைமுறைப்படுத்தினார்.

புத்தகக் கல்வியோடு செருப்பு தைத்தல், தச்சு வேலை போன்ற தொழில்களும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன.

கக்கூஸ் கழுவுவது அங்கு ஒவ்வொருவரின் கடமை. தனிப்பட்டவரின் பொறுப்பு அல்ல. பண்ணை மாணவர்கள் அனைவரும் சமையல் செய்யக் கற்றிருந்தார்கள். தோட்ட வேலையும், தேகப் பயிற்சியும் தினசரிப் பாடத்திட்டத்தில் இருந்தன.

“ஆசிரியர்கள் செய்யாத எந்த வேலையையும் பிள்ளைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது” என்று பண்ணையில் விதி இருந்தது. ஆசிரியர்கள் செருப்பு தைத்தார்கள்; கக்கூஸ் அலசினார்கள்; சமையல் செய்தார்கள்; விறகு வெட்டினார்கள்; பிள்ளைகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

ஆசிரியர், மாணவர் என மொத்த வகுப்பறையும் பாடப் புத்தகத்துக்கு அடிமையாக இருப்பதையும் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே காந்தி விமர்சனம் செய்தார். “குறைவான புத்தகம், சிறந்த கல்வி” என்பது காந்தியின் கோட்பாடாக இருந்தது.

“பாடப் புத்தகங்கள் அவசியமாக எனக்குப் படவே இல்லை. கிடைத்த புத்தகங்களைக்கூட நான் அதிகமாய்ப் பயன்படுத்தியதாய் ஞாபகம் இல்லை…நான் படித்த காலத்தில் என் ஆசிரியர்கள் புத்தகங்களில் இருந்து கற்பித்தது எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், தனியாக அவர்கள கறிபித்தவை எல்லாம் தெளிவாக என் ஞாபகத்தில் இருக்கின்றன” என்கிறார் காந்தி.

மிரட்டியும் தண்டித்தும் உருவாக்கும் வகுப்பறை ஒழுங்கையும் காந்தி வெறுத்தார். டால்ஸ்டாய் பண்ணையில் நடந்த பின்வரும் சம்பவத்தை காந்தி நேர்மையுடன் ஆராய்ந்து பார்க்கிறார்.

“ஒரு மாணவன் முரடனாகவும், பொய் சொல்பவனாகவும், சண்டை செய்பவனாகவும் இருந்தான். ஒருநாள் மிக மோசமாக அவன் நடந்து கொண்டான்.  நான் இதுவரை ஒரு மாணவனையும் தண்டித்ததில்லை. இந்த முறை என்னால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனோடு பேசிச் சரிசெய்யப் பார்த்தேன். அவன் காதில் வாங்கவில்லை. மீறி மீறிப் பேசினான். பக்கத்தில் இருந்த ரூல்தடியை எடுத்து அவன் தோளில் ஒரு அடி அடித்து விட்டேன். அவனை அடிக்கும்போது என் உடம்பு நடுநடுங்கிவிட்டது. அவனும் அதைப் பார்த்தான். டால்ஸ்டாய் பண்ணை மாணவர்களுக்கு இது புது அனுபவம் ஆகும். அடிபட்ட மாணவன் சத்தம் போட்டு அழுதான். தன்னை மன்னிக்கும் படி கெஞ்சினான். அடி வலித்ததால் அவன் அழவில்லை. அவன் பதினேழு வயது நிரம்பிய திடகாத்திரமான வாலிபன். அவன்  நினைத்திருந்தால் திரும்ப என்னை அடித்திருக்க முடியும். அடிப்பதன் மூலம் நான் பெற்ற வலியையும் உணர்ந்ததால் அவன் அழுதான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் என் சொல்லை மீறி நடக்கவில்லை. அவன் அந்த நிகழ்ச்சியை மறந்தும் விட்டான். ஆனால் அவன் மீது கையாண்ட வன்முறை குறித்து இன்று வரை நான் வருந்துகிறேன்.

3

மாணவன் தான் வசிக்கும் சூழலை விட்டு விலகித் தனித்துப் போகாத கல்வி; உடல் உழைப்போடு கூடிய கல்வி; புத்தகச் சுமையற்ற கல்வி; குழுவாய் இணைந்து கற்கும் கல்வி; கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி; செயல்பாடுகள் நிறைந்த கல்வி; கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி; மாணவர்களின் பன்முகத்திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் கல்வி எனக் கல்வி குறித்து காந்தி தெரிவித்த கருத்துக்களில் ‘உண்மையும் முற்போக்குத் தன்மையும்’ மிளிர்வதை இன்றைய கல்விச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்; ஒப்புக் கொள்கிறார்கள்.

பெரியகுளம் வி.எம். போர்டு பள்ளியில் நான் கழித்த என் பள்ளிப் பருவத்தை (சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்) நினைத்துப் பார்க்கிறேன். வயல் வேலை, கண்மாய் வேலை எனச் சில பொது வேலைகளில் மாணவர்கள் அனைவரும் வருடத்தில் சில நாட்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வோர் உயர்நிலைப் பள்ளியிலும் ஒரு கைத்தொழில் ஆசிரியர் (Craft Teacher) இருப்பார். எங்களுக்கு இருந்த ஆசிரியர் நெசவு கற்றுத் தந்தார். அவரை நன்றாக நினைவு இருக்கிறது. ஏனெனில், அவர் மட்டுமே வகுப்பில் பொது விசயங்கள் பேசுவார். அக்காலத்தில் நாங்கள் சந்தித்த முதல் தி.மு.க ஆதரவு ஆசிரியர் அவர்.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பே உடலுழைப்பும் கைத்தொழிலும் அடையாளத்துக்கும் பேருக்கும் மட்டுமே இருந்தன. படிப்படியாக அவற்றின் இடம் பறிபோனது. உடல் உழைப்பைத் தாழ்வானதாக கருதியவர்களே கல்வியைத் தீர்மானிப்பவர்களாக நாளுக்கு நாள் பலம்பெற்று வந்தார்கள்.

ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லா மாணவர்களும் ஒரே பள்ளியில் படிப்பது, சாதி வித்தியாசமின்றி எல்லா மாணவர்களும் எல்லா வேலைகளிலும் பயிற்சி பெறுவது ஆகிய முயற்சிகளின் மூலம் இந்திய சமூகத்தில் வேரூன்றிக் கிடக்கும் சாதி வேற்றுமை, தீண்டாமை போன்ற அநீதிகளைக் களையமுடியும் என்று காந்தி நம்பினார்.

இது ஒருவேளை அப்பாவித்தனமான நம்பிக்கையாகக்கூட இருக்கலாம். கனவு காண்பவர்கள் அப்பாவிகளாகவும், கனவுகளை விமர்சனம் செய்பவர்கள் புத்திசாலிகளாகவும் தோற்றம் பெற்றிருப்பது நாம் அறிந்ததுதானே!

காந்தி கொள்கைகளுக்கு எதிரான விமர்சனத்தில் நவீனத்துவமும் வர்ணாசிரமமும் இணைந்து கொண்டன. “பள்ளிக்கூடங்கள் குழந்தைத் தொழிலாளிகளின் தொழிற்சாலைகள் ஆகிப்போகும்” என்ற நவீனத்துவம் விமர்சிக்க, வேலைப் பிரிவினைகளை அகற்றி எல்லோரும், எல்லா வேலைகளையும் பார்ப்பது தர்ம விரோதம்” என வர்ணாசிரமம் கருவியது.

நேரு வலியுறுத்திய ‘விஞ்ஞானக் கல்வி’யும் காந்தி கொள்கைகளைத் தீர்த்துக்கட்ட வசதியாயிற்று. விஞ்ஞானமும் கைத்தொழிலும் ஒன்றுகூட முடியாத எதிரிகளா? ஒன்றைத் தள்ளி விட்டுத்தான் இன்னொன்று மேடையேற முடியுமா?

“பள்ளிக்கொரு மைக்ராஸ்கோப்” என்ற கனவை நேரு முன்வைத்தார். யாரையும் ஈர்க்கக்கூடிய கனவு. கனவு நிறைவேறிற்றா? பல ஆயிரம் கிராமப் பள்ளிகளுக்கு இன்றும் கூரையே இல்லை. மைக்ராஸ்கோப்புக்கு எங்கே போவது? மைக்ராஸ்கோப் உள்ள பள்ளிகளிலும் அவற்றைத் தொட்டு உபயோகித்துச் சிந்திக்க மாணவர்களுக்கு அனுமதி இல்லை. விஞ்ஞானம் வெறும்  பாடமாகவும் மோகமாகவும் மட்டும் நிலைத்திருக்கிறது. இந்த மோகம் மேல்தட்டுப் பொருளாகி (elite schools ) வியாபாரப் பொருளாகிவிட்டது. காந்தியை முதலில் கழித்தாச்சு! நேருவைப் பிறகு ஏமாற்றியாச்சு.

கல்வியில் உடலுழைப்புக்கு அதிக அழுத்தம் தந்த மற்றொரு சிந்தனையாளர் மாவோ. இன்று சீனப்பள்ளிகளில் உடலுழைப்புக்கான முக்கியத்துவம் சரிந்து கொண்டிருப்பாதாகவே கல்வியாளர்கள் கருதுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் கம்ப்யூட்டரை விட வேறு எது பெரிசு?…

தேசப் பெரியோர்களைக் கொண்டாடும் மரபு எல்லா நாடுகளிலும் இருக்கிறது. பெயர்களைக் கொண்டாடி, சிந்தனைகளை ஒதுக்கி விடுவதுதான் அந்த மரபின் உள்ளடக்காக இருக்கிறது.

பயன்பட்ட நூல்கள்:
1. சத்திய சோதனை,  ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு, 1957
2. What is worth Teaching,
Krishnakumar, Orient Longman, 2004

ச.மாடசாமி

நன்றி: புத்தகம் பேசுது – அக்டோபர் 2007 இதழ்

Leave a Reply

Your email address will not be published.