அது ஒரு பாரம்பரியமான பள்ளி. தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அங்கு படித்தார்கள். ஏறக்குறைய நூறு ஆசிரியர்கள் பணியில் இருந்தார்கள். அந்த ஆசிரியர்கள் மத்தியில் பேச ஒரு நாள் அழைப்பு. போயிருந்தேன்.
கட்டுதிட்டங்கள் கூடுதலாக இருந்தன. ஆசிரியர் முகச் சலனங்கள் குறைவாக இருந்தன. நடப்பது நடக்கட்டும் என உரையாடினேன். உரையின் இறுதியில் ஒரு கேள்வியை முன் வைத்தேன். ”சட்டென்று நம் எதிரே வந்து நிற்பார்கள். நம் கவனத்தைக் கவர்வார்கள். அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து விடுவோம். கண்பார்வையில் இருந்து விலகி தூரமாய்ப் போய் நிற்பார்கள் பலர். அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி நீங்கள் கண்டுபிடித்த மாணவர் யார்? அவரைப் பற்றி இக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றேன்.
உடனே எழுந்தார் ஒருவர். ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் இருந்த அபூர்வமான கலைத்திறன் தன் கவனத்துக்கு வந்த விதத்தை விளக்கினார். ரசித்தேன். சிறு நோட்டைத் திறந்து வைத்துக் கொண்டு அடுத்தவரின் அனுபவத்தைப் பதிவு செய்யக் காத்திருந்தேன். அடுத்தவரை எழுப்ப ‘சொல்லுங்க! சொல்லுங்க!’என்று கேட்டு நெக்குருக வேண்டியிருந்தது. இருவர் எழுந்தார்கள். கேட்டுக் கொண்டதற்காகப் பேசினார்கள். கடைசியாக ஒருவர் எழுந்து வேறு தளத்துக்கு உரையாடலைக் கொண்டு போனார். அதற்குப் பிறகு யாரும் எழவில்லை. நோட்டை மூடி வைத்துவிட்டு ஏமாற்றத்தைக் காட்டாமல் ’கூட்டத்தை முடிக்கலாம்’ என்றேன். உடனே கூட்டம் புத்துயிர் பெற்றது. காற்று வீசியது. முகங்களில் பரவச அலைகள்!
